அதானி சாம்ராஜ்யத்தை சரிய வைத்த ஹிண்டன்பர்க் திடீரென மூடல்!
குறுகிய விற்பனைக்கு பெயர் பெற்ற அமெரிக்க முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனமான ஹிண்டன்பர்க் ரிசர்ச், கலைக்கப்படுவதாக அதன் நிறுவனர் நேட் ஆண்டர்சன் அறிவித்துள்ளார். இதுதொடர்பான் அறிக்கைய்ல், "கடந்த ஆண்டின் பிற்பகுதியில் இருந்து நான் குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் எங்கள் குழுவுடன் பகிர்ந்து கொண்டபடி, ஹிண்டன்பர்க் ரிசர்ச் அமைப்பை கலைக்க முடிவு செய்துள்ளேன். நாங்கள் வேலை செய்து கொண்டிருந்த யோசனைகளின் பைப்லைனை நாங்கள் முடித்த பிறகு திட்டத்தை முடிக்க வேண்டும். கடைசியாக போன்சி வழக்குகளை நாங்கள் முடித்து, கட்டுப்பாட்டாளர்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்” என நேட் ஆண்டர்சன் குறிப்பிட்டுள்ளார்.
ஆக.,அதானி மீது அமெரிக்காவில் வழக்கு தொடுக்கப்பட சூழலில் அதானியின் பங்குச்சந்தை விவகாரங்களை பொதுவெளிக்கு கொண்டு வந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் இப்போது கடையை மூடிவிட்டது .அதானி உட்பட பல்வேறு நிறுவங்களின் செயற்கையாக ஊதிப்பெருக்கப்பட்ட பங்கு விலைகளை உடைத்து சந்தை செயல்பாட்டில் நம்பகத்தன்மையும் , சமநிலை உருவாக்கும் முயற்சியில் இது போன்ற நிறுவனங்களின் பங்கு மிக முக்கியமானது . இது போன்ற ‘பூனைக்கு மணி கட்டும்’ செயல்பாடுகள் இல்லை என்றால் மிகப்பெரிய அளவு பங்குச்சந்தை ஊழல்களும் முறைகேடுகளும் கேள்வி கேட்பார் இல்லாமல் களை போல முளைத்து மொத்த பங்குச்சந்தையையும் மூடிவிடும் அபாயம் உள்ளது.
இந்த நிறுவனங்கள் செய்வது ஒரு வகையில் சமூக நன்மை என்றாலும் இவையும் லாபத்தை முன் வைத்து நடத்தப்படும் நிறுவனங்களே . இவற்றுக்கும் ஒரு விலை உண்டு . ஹிண்டன்பர்க் நிறுவனர் ஆண்டர்சன் இப்போது ஏன் திடீரென இந்த நிறுவனம் மூடப்படுகிறது என்ற கேள்விக்கு பூடகமான பதிலையே அளித்திருந்தார். அதாவது தன் நிறுவனத்தை திடீரென மூட ஒரு குறிப்பிட்ட விஷயம் எதுவும் காரணமில்லை என்று குறிப்பிட்ட அவர், "அச்சுறுத்தல் இல்லை, உடல்நலப் பிரச்சினை இல்லை மற்றும் பெரிய தனிப்பட்ட பிரச்சினை இல்லை. இதற்காக நான் செய்யும் வேலை மிகக் கடினமாகவும் தீவிரமாகவும் இருக்கிறது. இதனால் உலகின் மற்ற பகுதிகள் மற்றும் நான் விரும்பும் நபர்களைச் சந்திக்க நேரமில்லாமல் போகிறது. ஹிண்டன்பர்க் என்பது என் வாழ்வின் ஒரு அத்தியாயம் தானே தவிர. அதுவே எனது வாழ்க்கை வரையறுக்கும் விஷயம் இல்லை" என்று குறிப்பிட்டுள்ளார். ஆனாலும் வெளியிலிருந்து அழுத்தங்கள் வந்திருக்கும் என்பதை ஊகிப்பது கடினம் அல்ல .
அமெரிக்காவில் டிரம்ப் பதவிக்கு வர , இனி இந்த வழக்குகளும் அப்படியே நீர்த்துப்போனாலும் போய்விடலாம் ,ஆச்சரியப்படுவதற்கில்லை . பூதாகரமாக வளரவிடப்படும் கார்ப்பரேட் நிறுவனங்கள் , உச்சகட்ட அரசியல் அதிகாரத்துடன் கைகோர்த்துகொண்டு என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதற்கான பல உதாரணங்களை நம் கண்முன்னேயே பார்த்துக்கொண்டிருக்கிறோம் .
உள்ளூர் ரோடு காண்டிராக்டில் நடப்பது மட்டுமே ஊழல் அல்ல . இவ்வகை பொருளாதார குற்றங்களும் , மோசடி வேலைகளும், வங்கிக் கடன் தள்ளுபடிகளும் பெரும் ஊழல்களே .கோட் சூட் அணிந்துகொண்டு குளிரூட்டப்பட்ட அறைகளில் நுனி நாக்கு ஆங்கிலம் பேசியபடி நடப்பதால் இதற்கும் மக்களுக்கு சம்பந்தம் இல்லை என்ற பொதுவான எண்ணம் நிலவுகிறது . அப்படி அல்ல. உள்ளூர் ரோடு காண்டிராக்ட் ஊழல் பொது மக்களை எப்படி பாதிக்கிறதோ அதை விட பல மடங்கு மக்களை பாதிக்கும் மோசடிகள் இவை .