For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

அந்த காலத்து குசும்பன் - சுப்புடு -நினைவஞ்சலி😓

09:47 AM Mar 29, 2024 IST | admin
அந்த காலத்து குசும்பன்   சுப்புடு  நினைவஞ்சலி😓
Advertisement

ந்தக் கால மெட்ராஸ் என்ற இப்போதைய சென்னையில் வருடந்தோறும் நடைப்பெறும் மார்கழி கர்நாடக இசை உற்சவங்கள் நேரத்தில், அதைப்பற்றி தினமணியிலும்,ஆனந்த விகடனிலும் சிறப்பு செய்திகளை வெளியிடுவார்கள் எது இருக்குமோ இருக்காதோ ஆனால் பாடகர்கள் பற்றியும் நாட்டியம் சம்பந்தமாகவும் விமர்சனம் செய்வதற்கென்றே சிலப்பக்கங்களை ஒதுக்கி விடுவார்கள்! தற்போதைய சுழல்களில் அது அந்தளவுக்கு முக்கியத்துவமாக யாராலும் கருதப்படாவிட்டாலும், ஒரு காலத்தில் அதைக் காண்பதற்கு பாடகர்கள் & நாட்டியக்கலைஞர்கள் மத்தியில் கொள்ள பயமாக இருந்து வந்தது,

Advertisement

அதற்கு காரணம் சுப்புடு!

பேரைக்கேட்டு அதிர்ந்தவர்கள் பலருண்டு..!பாடும் பணியை விட்டு சென்றவர்களும் உண்டு! மனுசன் யாருக்கும் பயந்தவர் கிடையாது,கச்சேரிக்கு சுப்புடு வந்திருக்காருன்னு சொன்னாலே அலறியவர்கள் பலர்! ஒரு முறை ஜேசுதாஸ்,இவர் வந்திருப்பதை பற்றி கேள்விப்பட்டு நான் கச்சேரி செய்யமுடியாது என்று கூறினாராம்! அதற்கு முன்பெருமுறை ஜேசுதாஸை கச்சேரி செய்யவரும் முன்பு நன்றாக பயிற்சி எடுத்து வரணும் சொன்னதுல இவருக்கு அவர் மேல ரொம்ப கோபம்!
ஒரு முறை திருவையாறு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்திருந்த சுப்புடுவை தாக்கினார்களாம்! (பாருங்க எவ்ளோ கொலவெறியை உண்டு பண்ற அளவுக்கு நடந்துக்கிட்டிருக்காரு!)

Advertisement

இளையராஜாவின் இசையில் வெளிவந்த சிந்து பைரவி படம் பார்த்து சுப்புடு கூறிய வார்த்தைகள் " 25 வருஷத்த தமிழ் சினிமாவில வேஸ்ட் பண்ணிட்டீங்களேன்னுத்தான்"

"சுற்றளவைக் குறைத்தால் உலகம் சுற்றலாம்" இது நாட்டிய அரங்கேற்றம் செய்த பிரபல பாடகியின் மகளுக்கான விமர்சனம்.

"காதிலும் கம்மல்; குரலிலும் கம்மல்" - இது பிரபல சங்கீத வித்வான் ஒருவருக்கு.

"கேதாரம் சேதாரமாகிவிட்டது" - இது பாடலைப் பாடியவருக்கும், இசையமைத்தவருக்கும் சேர்த்து வைத்த குட்டு.

"best luck for next year" - இது ஒரு பிரபல இசைக் கலைஞருக்குத் தெரிவித்த அனுதாபம்.

இப்படி நறுக், சுருக் சொற்களில் காரசாரமாக விமர்சனம் எழுதி, இசை விமர்சனத் துறைக்குப் புத்துயிரூட்டியவர் சுப்புடு என்றழைக்கப்படும் பி.வி. சுப்பிரமணியம். இவர், மார்ச் 27, 1917 அன்று பர்மாவில், வெங்கட்ராம ஐயர், சரஸ்வதி அம்மாள் தம்பதியினருக்கு மகவாகப் பிறந்தார். சிறுவயது முதலே இவருக்கு இசையார்வம் இருந்தது. சகோதரிகளுக்கு இசை கற்பிக்கவந்த ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி பாகவதர் மூலம் இசை கற்றுக்கொண்டார். மிமிக்ரியும் கைவந்தது. நடிப்பு, கேட்கவே வேண்டாம். பதினைந்து வயதிலேயே 'பிரஹலாதா', 'சீதா கல்யாணம்' போன்ற நாடகங்களை எழுதி நடித்தார். உயர்கல்வியை முடித்த இவருக்கு ரங்கூனில் கணக்குத் தணிக்கை அலுவலகத்தில் வேலை கிடைத்தது. படிக்கும்போதே பள்ளி இதழில் எழுதிய அனுபவம் இருந்ததால், 1938ல் இசை பற்றிய சிறு விமர்சனக் குறிப்புகளை Rangoon Times பத்திரிகைக்கு எழுதி அனுப்ப, அவை பிரசுரமாயின. 1942ல் போர் சமயத்தில் ஏற்பட்ட நெருக்கடியால் நடந்தே இந்தியா வந்துசேர்ந்தார். சிம்லாவில் சில வருடங்கள் இருந்தார். பின் டெல்லியை அடைந்தார்.

டெல்லியில் மத்திய அரசின் நிதியமைச்சகத்தில் எழுத்தர் பணியில் சேர்ந்தார். டெல்லியே இவரைச் சிறந்த இசை விமர்சகர் ஆக்கியது. ஓய்வுநேரத்தில் நாட்டியம், நாடகம், இசைக்கச்சேரி போன்றவற்றிற்குச் செல்வார். ஒருமுறை பிரபல இசைக்கலைஞர் ஒருவரது கச்சேரிக்குச் சென்றுவந்த சுப்புடு, அதைப்பற்றிய விமர்சனம் ஒன்றை 'ஆனந்த விகடன்' இதழுக்கு எழுதி அனுப்பினார். அதில் "அந்த வித்வான் நன்றாகப் பாடுவதெல்லாம் சரிதான். ஆனால் 'தாயே நீ இரங்காய்' என்று பாடும்போது ஏன் 'இற்றங்காய்' என்று பாடுகிறார்? அம்பாள் என்ன மரத்தின் மேலா ஏறிக் கொண்டிருக்கிறார்? ஒருவேளை அவர் வீட்டுத் தோட்டத்தில் இருந்த மாமரத்தில் பக்கத்துவீட்டுப் பையன் மாங்காய் பறிக்கிறான் போலிருக்கிறது. நீ இறங்காவிடில் பல்லை உடைச்சிடுவேன் என்று சொல்கிற மாதிரி கொஞ்சம்கூட பாவம் இல்லாமல் இருந்தது. இந்த அதிகப்பிரசங்கத்தை இத்துடன் முடித்துக் கொள்கிறேன்" என்று எழுதியிருந்தார்.

அதைப் பார்த்த ஆசிரியர் கல்கி, "உங்கள் அதிகப்பிரசங்கம் ஜோரைய்யா. மேலும் மேலும் எழுதுங்களைய்யா!" என்று பதில் கடிதம் எழுதி ஊக்குவித்தார். அதுமுதல் விகடனில் இசை விமர்சனம் வெளியானது. அடுத்து கல்கி, சதாசிவத்துடன் இணைந்து "கல்கி" இதழை ஆரம்பிக்கவே அதிலும் சுப்புடுவின் கைவரிசை தொடர்ந்தது. கல்கியையே மானசீக குருவாகக் கொண்டார் சுப்புடு. விகடன், கல்கியைத் தொடர்ந்து மணியன் ஆசிரியராக இருந்த இதயம் பேசுகிறது இதழில் 16 ஆண்டு காலத்திற்கு மேலாக இசை விமர்சனம் எழுதினார். சுப்புடுவின் விமர்சனங்களில் நகைச்சுவை மிளிரும். அதே சமயம் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களும் இருக்கும். அவரது பேனா சிலருக்குத் தேளாகவும் சிலருக்குத் தேனாகவும் இருந்தது! அதனால் பல சர்ச்சைகளும் எழுந்தன.

தஞ்சையில் இவருக்கு கறுப்புக்கொடி காட்டப்பட்டது. இவர்மீது தாக்குதல்களும் நிகழ்ந்தன. அதற்கெல்லாம் அஞ்சாமல் இவர் எழுதி வந்தார். இசைக்கலைஞர்கள் மட்டுமல்லாது சபாக்களையும் இவர் கடுமையாகச் சாடியிருக்கிறார். "ரொம்ப சபாக்களில் காரியதரிசிகள் அரங்குக்கு வெளியேதான் நிற்பார்கள். 'உள்ளே நடக்கும் அக்கிரமங்களுக்கு நான் பொறுப்பு இல்லை' என்பது போல" - இது அவரது சாடல். இவரது விமர்சனத்தால் பாடகர்களுக்கும் இவருக்கும் அடிக்கடி சண்டை வந்ததுண்டு. இவரது விமர்சனத்தால் சீண்டப்பட்ட சபாக்களும் 'Dogs and Subbudu not allowed' (நாய்களுக்கும் சுப்புடுவுக்கும் அனுமதியில்லை) என்று வாயிலில் எழுதி மாட்டுமளவுக்கு விரோதம் இருந்தது. .

வார்த்தை ஜாலத்தில் படுசுட்டி சுப்புடு. ஒரு சமயம் செம்மங்குடி சீனிவாச ஐயர் "சுப்புடு என்னைத் தாக்குவது பற்றி எனக்குச் சந்தோஷம். அவர் தாக்கும்போதெல்லாம் எனக்கு நிறையக் கச்சேரி வாய்ப்புக்கள் வருகின்றன" என்று கிண்டலாகச் சொன்னார். அடுத்து மேடையேறிய சுப்புடு, "செம்மங்குடிதான் எவ்வளவு அழகாகப் பேசுகிறார்! அவர் தொடர்ந்து மேடைகளில் பேசலாமே? ஏன் பாடுகிறார்?" என்று சீண்டினார். இவ்வாறு பல வித்வான்களை பேச்சாலும், எழுத்தாலும் இறுதிவரை விமர்சித்து வந்தார் சுப்புடு. அதே சமயம் தகுதியுள்ள கலைஞர்களைப் பாராட்டவோ, ஊக்குவிக்கவோ தவறியதில்லை. சுதா ரகுநாதன், பாம்பே ஜெயஸ்ரீ, சௌம்யா, சஞ்சய் சுப்ரமணியம், உன்னிகிருஷ்ணன், வயலின் ஏ. கன்யாகுமரி உள்ளிட்டோரை அவர்களின் இளவயதிலேயே அடையாளம் காட்டியவர் சுப்புடுதான்.

"நானும் கிட்டத்தட்ட 65 வருஷங்களாக இசையைக் கேட்டுக் கொண்டிருக்கிறேன். ஆனால் இந்த மாண்டலின் சீனிவாசைப் போல் ஒரு அவதார புருஷனைக் கண்டதுமில்லை. கேட்டதுமில்லை. என்னால் அவனது இசை மேதாவிலாசத்தை ஆய்வு செய்யவோ, எடை போடவோ இயலவில்லை" என்று மனமாரப் பாராட்டியிருகிறார்.

ஒரேநாளில் தொடர்ந்து பல கச்சேரிகளுக்குச் சென்றாலும், ஒரு துண்டுச்சீட்டில்கூடக் குறிப்பெழுதிக் கொள்ளாமல், இரவு பத்து மணிக்கு மேல் உதவியாளரை அழைத்து டிக்டேட் செய்வார் சுப்புடு. அது மிகச் சரியாகவே இருக்கும். அந்த அளவுக்கு நினைவாற்றல். காரணம் அவர் தன் இறுதிக்காலம்வரை செய்துவந்த யோக ஆசனங்கள்தான். கர்நாடக இசை மற்றும் தமிழிசை பற்றிச் சொல்லும்போது, "சங்கீத பிதாமகர்கள் என்று சொல்லுகிறவர்களுக்குத் தமிழ் தெரியாது. அதனால அவுங்க அவுங்க பாஷையில பாடினாங்க. அந்தப் பாட்டுக்கள் பிரபலம் ஆயிட்டுது. அதுதான் கர்நாடக இசைன்னு ஆயிட்டுது. பாஷை புரியாம ரசிக்கமாட்டான். தியாகராஜ கீர்த்தனையில எதை ரசிக்கிறான்? அந்தச் சங்கதியை. இப்ப 'ப்ராவ பாரமா' என்ற கீர்த்தனையை அந்த பாவமே இல்லாமப் பாடினா எப்படி இருக்கும்? 'பண்டித மோதிலால் நேருவைப் பறிகொடுத்தோமே'ன்னு ஜாலியா தாளம் போட்டுக்கொண்டு பாடினா ரசிக்க முடியுமா? பாபநாசம் சிவன் பாடல்கள் எத்தனை இருக்கு? 'நானொரு விளையாட்டு பொம்மையா' மாதிரிப் பாடல்கள் எல்லாம் பாவத்தோட பாடினா ஏன் ரசிக்க முடியாது?" என்று கேள்வி எழுப்புகிறார். கர்நாடக சங்கீத வித்வான்கள் சினிமாவில் பாடக்கூடாது. அப்படிப் பாடினால் குரல் கெட்டுவிடும் என்பது இவரது உறுதியான கருத்து.

நிகழ்ச்சிக்கு வராமலேயே விமர்சனம் செய்ததாகவும் இவர்மீது விமர்சனம் இருந்ததுண்டு. "விமர்சனத்துக்கு என்றே சில வார்த்தைத் தொடர்கள் இருக்கு. 'காம்போதி களை கட்டவில்லை' என்று மட்டும் எழுதுவாங்க. ஏன் களை கட்டவில்லை என்று நான் சொல்லுவேன். அதோட நான் dry ஆக எழுதமாட்டேன்" என்கிறார் தன் எழுத்தைப்பற்றி. தினமணி கதிர், தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ், ஸ்டேட்ஸ்மென் போன்ற இதழ்களில் நிறைய விமர்சனம் எழுதியிருக்கிறார். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் சரளமாக எழுதுவார். இசை விமர்சனம் மட்டுமல்லாமல் நாடக, நாட்டிய விமர்சனமும் எழுதியிருக்கிறார். பரதநாட்டியம் பற்றியும் நன்கு அறிந்தவர். சில நாட்டியங்களுக்கு நட்டுவாங்கமும் செய்திருக்கிறார். பரதம் குறித்து சிறு நூல் ஒன்றும் எழுதியிருக்கிறார். டில்லியில் பல நடன நிகழ்ச்சிகளுக்கு இவர் ஹார்மோனியம் வாசித்திருக்கிறார். கஞ்சிரா வாசிக்கவும் அறிந்தவர்..

'South Indian Theatres' என்ற அமைப்பை பூர்ணம் விசுவநாதன், கோபு, ராஜி இவர்களுடன் ஆரம்பித்தார். பல நாடகங்களை எழுதி இயக்கி, நடித்திருக்கிறார். "கோமதியின் காதலன்", தி.ஜா.வின். "வடிவேலு வாத்தியார்" உள்ளிட்ட பல நாடகங்களை மேடையேற்றியிருக்கிறார். வானொலி நாடகங்களிலும் நடித்திருக்கிறார். சுப்புடுவின் சகோதரர் திரு. P.V. கிருஷ்ணமூர்த்தி, டில்லியில் அகில இந்திய வானொலியிலும், பிறகு தூர்தர்ஷனிலும் டைரக்டர் ஜெனரலாக இருந்து ஓய்வுபெற்றவர். இசை அறிந்தவர்.

இவரது இசை விமர்சனம் பற்றி கவிஞர் வாலி,
சுப்புடு
பாடகர்களின் தலையெழுத்தை
பேனாவால் எழுத
பர்மாவிட்டு பாரதம் வந்த பிரம்மா
பாலையும் நீரையும்
பிரித்துக் காட்டுவதற்காக
டிசம்பர் மாதத்தில்
டில்லியிருந்து சென்னைக்கு வரும்
அன்னப்பறவை.
இளம்வித்வான்களுக்கு
இவர் தூண்டுகோல்
முதிய வித்வான்களுக்கு
இவர் துலாக்கோல்
கொன்னக்கோலைக் கூட
குற்றமிருக்கிறதா என்று
குடைந்து பார்க்கும்
கன்னக் கோல்
என்று எழுதியது முற்றிலும் பொருத்தம்.

இவரது வாழ்க்கை தொகுக்கப்பட்டு BEYOND DESTINY - The Life and Times of Subbudu என்ற தலைப்பில் நூலாக வெளியாகியுள்ளது.
ஒருசமயம் உடல்நலமில்லாதிருந்தபோது சுப்புடுவைச் சந்திக்க வந்திருந்தார் அப்போதைய ஜனாதிபதி அப்துல்கலாம். "உங்களுக்கு என்ன உதவி வேண்டும்?" என்று கேட்ட அவரிடம், "நான் இறந்த பிறகு, உங்கள் மொகல் தோட்டத்தில் இருந்து ஒரு மஞ்சள் ரோஜாவைக் கொண்டுவந்து என் உடல் மீது வையுங்கள்" என்று குறிப்பிட்டார் சுப்புடு. மார்ச் 29, 2007 நாளன்று சுப்புடு காலமானார். மறுநாள் மொகல் தோட்டத்தில் பறிக்கப்பட்ட மஞ்சள் ரோஜாக் கொத்தை சுப்புடுவின் உடல்மேல் வைத்து அஞ்சலி செலுத்தினார் அப்துல்கலாம்.

தனது நகைச்சுவை எழுத்தாலும், கருத்தாலும் அவரது ரசிகர்களால் என்றும் நினைவு கூறப்படுவார் சுப்புடு......!

சுப்புடு காலமான தின நினைவஞ்சலி ரிப்போர்ட்!

Tags :
Advertisement