கொல்கத்தாவில் டிராம் சேவை நிறுத்தம்- மேற்குவங்க அரசு முடிவு!
கொல்கத்தா மற்றும் இந்தியாவின் தனித்துவமிக்க அடையாளங்களில் ஒன்றாக டிராம் சேவை திகழ்கிறது. சரியாக 151 ஆண்டுகளுக்கு முன்னதாக பிப்.24 கடந்த 1873-ல் டிராம் சேவை கொல்கத்தாவில் தொடங்கப்பட்டது. அன்றைய பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இதனை நிறுவி இருந்தனர். சுலபமான போக்குவரத்துக்காக கொண்டுவரப்பட்ட சேவை இது. செல்வந்தர்கள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் ஏழைகள் என அனைத்து தரப்பு மக்களுக்குமான போக்குவரத்து சேவையாக இது இருந்துள்ளது.ஆரம்ப நாட்களில் டிராமை குதிரைகள் இழுத்துச் சென்றதாக தெரிகிறது. அப்படியே நீராவி மற்றும் மின்சாரத்தின் மூலம் டிராம் இயக்கம் பின்னாளில் உருமாறி உள்ளது. 1960-களில் 37 டிராம் வழித்தட சேவைகள் பயன்பாட்டில் இருந்துள்ளதாக தகவல். கால ஓட்டத்தில் படிப்படியாக அது குறைந்துள்ளது. நிதி நெருக்கடி, முறையாக பராமரிப்பு செய்யப்பாடாத ட்ராம்கள், குறைந்து வரும் பயணிகளின் எண்ணிக்கை, சாலை மேம்பாடு, கொல்கத்தா மெட்ரோ விரிவாக்கம், டிராமின் மிதமான வேகம் மற்றும் சாலையை அதிகளவு டிராம்கள் ஆக்கிரமித்து கொள்வது போன்ற காரணங்களால் இதன் சேவை மங்கி விட்டதாக சொல்லப்படுகிறது.
தற்போது நகரில் மூன்று வழித்தடங்களில் மட்டுமே டிராம் சேவை பயன்பாட்டில் உள்ளதாக தெரிகிறது. அதன் சேவை நேரம் கூட முறையற்றதாக இருக்கிறதாம். கடந்த 2017-க்கு முன்னர் வரையில் நகரில் சுமார் 25-க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் டிராம்கள் இயங்கி வந்துள்ளன.ஓட்டுநர் பற்றாக்குறை மற்றும் அரசின் மெத்தனப் போக்கும் இந்த சேவை பாதிக்கப்பட காரணமாக உள்ளன. உலக அளவில் சூழல் மாசு நிறைந்த கொல்கத்தா நகரில் சுற்றுச்சூழலுக்கு உகந்த டிராம் போக்குவரத்து சேவை, அழிவின் விளிம்பில் உள்ளதாக தெரிகிறது.
டிராம்களின் அளவு சாலையை ஆக்கிரமித்து விடுவதாகவும், அதன் இயக்கம் மெதுவாக இருப்பதாகவும் சொல்லப்படும் வாதங்கள் ஆராய்ச்சி அடிப்படையில் முன்வைக்கப்படும் கருத்துகள் இல்லை என வல்லுநர்கள் கருத்து தெரிவித்து வந்த நிலையில் டிராம் சர்வீஸ் நிறுத்தப்படுவதாக மேற்கு வங்க மாநில அரசு தெரிவித்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை போக்குவரத்து துறை அமைச்சர் உறுதி செய்துள்ள நிலையில் சமூக வலைதளங்கள் கொல்கத்தா மக்கள் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர்.
கொல்கத்தாவின் கலாச்சாரமாகவும் அடையாளமாகவும் இருந்த டிராம் சர்வீஸ் நிறுத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் மீண்டும் அதை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். 150 ஆண்டு கால வரலாறு இருக்கும் டிராம் சர்வீஸை நிறுத்தக்கூடாது என்றும் கூறப்பட்டு வருகிறது.
மேலும் ஒரு சிலர் இதற்கு ஆதரவும் தெரிவித்துள்ளனர். தற்போதைய வேகமான உலகத்தில் டிராம் சர்வீஸ் போன்ற மெதுவான போக்குவரத்து தேவையில்லை என்றும் மேற்கு வங்க அரசு எடுத்தது சரியான முடிவுதான் என்றும் தெரிவித்து வருகின்றனர்.ஆனால் கொல்கத்தா டிராம் பயனாளிகளின் சங்கம் இது குறித்து கூறிய போது உலகம் முழுவதும் 450 நகரங்களில் இந்த டிராம் சர்வீஸ் இருப்பதாகவும், ஏற்கனவே நிறுத்தப்பட்ட பின் மீண்டும் 70 நகரங்களில் இந்த சர்வீஸ் தொடங்கப்பட்டு உள்ளதாகவும் எனவே கொல்கத்தாவில் இந்த சர்வீஸ் நிறுத்தக்கூடாது என்றும் தெரிவித்துள்ளது