கனிம வளங்களுக்கு வரிவிதிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கே! சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு!
மாநிலங்களில் உள்ள கனிம வளத்துக்காக மத்திய அரசிடம் இருந்து பெறும் ராயல்டியை வரியாக கருத முடியாது என சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது. சுரங்கங்கள், தாதுக்கள் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை சட்ட விதிகளில் மாநில உரிமைகளைக் கட்டுப்படுத்தும் பிரிவுகள் எதுவும் இல்லை. கனிம வளங்கள் மீது வரிவிதிக்கும் உரிமை மாநில அரசுகளுக்கே உள்ளது என சுப்ரீம் கோர்ட் கருத்து தெரிவித்துள்ளது.
கனிம வளங்கள் மீது மாநில அரசுகளுக்கு இருக்கும் உரிமைக்கு எதிராக மத்திய அரசு, கரங்க நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கு கடந்த சில ஆண்டுகளாக விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்த வழக்கை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் அரசியல் சாசன அமர்வு விசாரித்து வருகிறது. இந்த வழக்கில் இன்று அரசியல் சாசன அமர்வு பரபரப்பு தீர்ப்பை வழங்கி உள்ளது. இந்த வழக்கை விசாரித்த 9 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில் 8 நீதிபதிகள் மாநில உரிமைக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்கி உள்ளனர். நீதிபதி பி.வி.நாகரத்னா மட்டும் மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார்.
இன்று காலை தீர்ப்பை வாசித்த தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், “கனிம வளங்களுக்கு வரிவிதிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு மட்டுமே உண்டு. மாநிலங்களில் உள்ள கனிம வளத்துக்காக ஒன்றிய அரசிடம் இருந்து பெறும் ராயல்டியை வரியாக கருதமுடியாது. ராயல்டி என்பது வரி அல்ல; குத்தகைத் தொகை மட்டுமே. கனிம ஒப்பந்த உரிமையாளர்கள் வழங்கும் ராயல்டி தொகை வரி வரம்பிற்குள் வராது என்று கூறியது.
மேலும், ராயல்டியை வரி வரம்பிற்குள் கொண்டுவந்த இந்தியா சிமெண்ட்ஸ் வழக்கின் தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது என்று கூறிய நீதிபதிகள், ராயல்டி என்பது வரி என்ற முந்தய உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தவறானது என்று கூறிய அரசியல் சாசன அமர்வு, சுரங்க நடவடிக்கைகளில் செலுத்தப்படும் ராயல்டி என்பது வரி அல்ல என்று தெளிவுபடுத்தியதுடன், சுரங்கங்கள், தாது மேம்பாடு, ஒழுங்குமுறை சட்ட விதிகளில் மாநில உரிமைகளை கட்டுப்படுத்தும் பிரிவு எதுவுமில்லை என்று தெரிவித்தது.
இருப்பினும், இந்த விஷயத்தில் மத்திய சட்டம் – சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறை) சட்டம், 1957 (எம்எம்டிஆர்ஏ), இதுவரை அத்தகைய ஏற்பாடு எதுவும் செய்யப்படவில்லை என்பதால், மாநிலங்களின் அதிகாரம் பறிக்கப்பட்டதாகக் கூற முடியாது. இந்த விஷயத்தில், நாடாளுமன்றம் வரம்பு நிர்ணயிக்காத வரை, கனிமவளங்களுக்கு வரி விதிக்கும் மாநிலத்தின் உரிமை பாதிக்காது. கனிம வளங்கள் உள்ள நிலத்தின் மீது வரிவிதிக்கும் உரிமையும் மாநில அரசுகளுக்கே உள்ளது. ஒரு நிலத்தில் இருந்து கிடைக்கும் கனிம வளத்தின் அடிப்படையில் வரி விதிக்கும் உரிமையும் மாநில அரசுக்கே உள்ளது. நிலம் என்ற சொல் கனிம வளங்கள் புதைந்துள்ள அனைத்து வகை நிலங்களையும் குறிப்பிடும்.இவ்வாறு தெரிவித்துள்ளனர்.