இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்க பதவி நீக்கம் -. அதிபர் ரணில் விக்கிரமசிங்க அதிரடி நடவடிக்கை!
அண்மையில் நடைபெற்று முடிந்த ஆசிய கோப்பை மற்றும் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இலங்கை அணி மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் ரசிகர்களும், முன்னாள் வீரர்களும் இலங்கை அணி மற்றும் நிர்வாகத்தை கடுமையாக விமர்சித்து இருந்தனர்.மோசமான தோல்வி மற்றும் விமர்சனங்களைத் தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் வாரியம் அதிரடியாக கலைக்கப்பட்டது. இலங்கையின் கிரிக்கெட் புகழை மீட்டெடுக்க விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த ரோஷன் ரணசிங்க 7 பேர் கொண்ட வல்லுனர் குழுவை அமைத்திருந்தார். இதில் 1996 இல் இலங்கை அணி உலக சாம்பியன் பட்டம் வென்றபோது கேப்டனாக இருந்த அர்ஜுனா ரணதுங்கா, உச்ச நீதிமன்ற நீதிபதி உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தார்கள்.
இந்த நிலையில் இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் அரசின் தலையீடு இருப்பதாக கூறி அதனை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சஸ்பெண்ட் செய்து நடவடிக்கை எடுத்தது. மேலும் கிரிக்கெட் வாரியம் தன்னாட்சி அமைப்பாக செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியது.. முக்கிய ஆட்டங்களில் படுதோல்வி, கிரிக்கெட் வாரியத்தில் ஏற்பட்டுள்ள குழப்பம், ஐசிசி நடவடிக்கை போன்றவைகளால் விளையாட்டுத்துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கா மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. அவரது பதவியை பறிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தி வந்தனர்.
இந் நிலையில், இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய அமைச்சர் ரோஷன் ரணசிங்க, தற்போதைய சூழலில் தமது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கான முழு பொறுப்பையும், அதிபரும், ரத்நாயக்கவுமே பொறுப்பு. நாமல் ராஜபக்ச, அதிபர் ரணில் விக்ரமசிங்க தொடர்பாக என்னை எச்சரித்தார். ரணில் ஒரு பாம்பு. நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுரை வழங்கினார் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இச்சூழலில், அதிபர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர், விளையாட்டுத் துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்க பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதிபர் ரணில் விக்ரமசிங்கவினால் அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிபர் மாளிக்கை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.