இலங்கை புது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க!- முழு பிராக்ரஸஸ் ரிப்போர்ட்!
இலங்கையின் இடதுசாரி கட்சியான ஜேவிபி மற்றும் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளருமான அநுரகுமார திஸாநாயக்க (அனுரகுமார திசாயக்க, ஜனாதிபதித் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கிறார். ஆளுங்கட்சியின் சில அமைச்சர்கள் அனுரவின் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இலங்கை அதிபர் தேர்தலில் முன்னிலை பெற்றுள்ள அனுரா குமார திசநாயகே, சீன ஆதரவு நிலைப்பாடு கொண்டவர் எனவும் இந்தியா எனில் முறுக்கு போக்கை கையாள்வார் என்றும் கூறப்படுகிறது.
இலங்கை அதிபர் தேர்தல்:
அண்டை நாடான இலங்கையில், புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலில் நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. அதில் ஏற்கனவே கணித்தபடி, தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, அநுரகுமார திஸாநாயக்க ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. குறிப்பாக, ஆரம்ப கட்ட வாக்கு எண்ணிக்கையின்படி, அநுரகுமார திஸாநாயக்க முன்னிலை வகித்து வருகிறார்.
அனுரா குமார திசநாயகே முன்னிலை:
ஜனதா விமுக்தி பெரமுன கட்சி தலைவரும், தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் தலைவரான அநுரகுமார திஸாநாயக்க தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார். 22 தேர்தல் மாவட்டங்களில் 13ல் அறிவிக்கப்பட்ட முடிவுகளின்படி, திசாநாயகே 50%-க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றுள்ளார், அவரது போட்டியாளர்கள் தலா 19% வாக்குகளைப் பெற்று பின்தள்ளியுள்ளனர். 2-வது இடத்துக்கு தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்கே மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இடையே போட்டி உருவாகி உள்ளது. தமிழர் பகுதிகளில் சஜித் பிரேமதாசவுக்கு பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. ஈழத் தமிழர் பகுதிகளில் தமிழ் பொதுவேட்பாளர் அரியநேந்திரனுக்கு 4-வது இடம்தான் கிடைத்துள்ளது. தமிழர் பகுதிகளில் மகிந்த ராஜபக்சே மகன் நாமல் ராஜபக்சேவுக்கு சொற்பமான வாக்குகளே கிடைத்தன. இலங்கையில் நடைபெறும் 9வது அதிபர் தேர்தல் மூலம், முதல் மார்க்சியவாதி அதிபர் அந்நாட்டிற்கு கிடைக்க உள்ளதாக வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இலங்கையில் நடந்த மக்கள் புரட்சி போராட்டத்திற்கு இவர் முக்கியமான காரணமாக இருந்தார். இலங்கையில் மக்கள் போராட்டத்தை முன்னெடுத்தார். அங்கே பணத்தின் மதிப்பு சரிந்தது, 16 மணி நேரத்துக்கும் மேலாக மின்வெட்டு போன்ற விஷயங்களுக்கு எதிராக கடுமையான போராட்டங்களை மேற்கொண்டார். இதனால் அவர் மக்கள் இடையே புரட்சி நாயகனாக பார்க்கப்பட்டார்.
2019 ஆம் ஆண்டு நடந்த பொதுத் தேர்தலில் 3.16% வாக்குகளை பெற்றார். தற்போது அனுரகுமார திஸாநாயக்க 4,99,048(52.25%) வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார். சஜித் பிரேமதாச 2,10,701(22.06%), ரணில் விக்கிரமசிங்க 1,80,983(18.95%) வாக்குகள் பெற்றுள்ளனர்
அனுரா குமார திசநாயகே ப்ராகரஸ் ரிப்போர்ட்
55 வயதான அநுரகுமார திஸாநாயக்க தலைநகர் கொழும்பில் இருந்து 170 கிமீ தொலைவில் அமைந்துள்ள, அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள தம்புத்தேகம கிராமத்தில் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர். திஸாநாயக்க தனது பள்ளிப் பருவத்திலிருந்தே ஜே.வி.பி. கட்சியில் ஈடுபட்டு வந்தார். 1995 இல் ஜே.வி.பி.யின் பொலிட்பீரோவில் இணைவதற்கு முன்னர் பல்கலைக்கழகத்தில் மாணவர் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார். 2000 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் திஸாநாயக்க நாடாளுமன்ற உறுப்பினராக உள்ளார். 2004 முதல் 2005 வரை விவசாயம், கால்நடை, நிலம் மற்றும் நீர்ப்பாசன அமைச்சராகவும், 2015 முதல் 2018 வரை எதிர்க்கட்சியின் தலைமை கொறடாவாகவும் பணியாற்றினார். 2 பிப்ரவரி 2014 அன்று நடைபெற்ற கட்சியின் 17வது தேசிய மாநாட்டில் ஜே.வி.பி.யின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
களனி பல்கலைக்கழகத்தில் அறிவியல் பட்டப்படிப்பை முடித்தவர், தனது கல்லூரி நாட்களிலேயே மாணவர் அரசியலில் ஈடுபட்டார். அதன்படி, 1987 மற்றும் 1989 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில், ஜே.வி.பி.யின் அரசாங்க எதிர்ப்பு இயக்கத்தின் போது கல்லூரி அரசியலில் திசநாயகே இணைந்தார். சிலர் இதனை இலங்கையின் ரத்தம் தோய்ந்த காலகட்டம் என்பார்கள். பரவலான கொலைகள் மற்றும் அரசியல் படுகொலைகள் அப்போது வழக்கமாக இருந்தது. ஜே.வி.பி நிறுவனர் ரோஹன விஜேவீர உட்பட குறைந்தது 60,000 பேர் கொல்லப்பட்டதைக் கண்ட கிளர்ச்சியை அரசு கொடூரமாக நசுக்கியது.
அநுரகுமார திஸாநாயகேவின் வளர்ச்சி:
களத்தில் நின்று மக்கள் பிரச்னைக்காக தீவிரமாக குரல் கொடுத்ததன் விளைவாக, 1995ம் ஆண்டு திசநாயகே சோசலிச மாணவர் சங்கத்தின் தேசிய அமைப்பாளராக ஆனார். ஜேவிபியின் மத்திய செயற்குழுவிற்கு நியமிக்கப்பட்ட மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, கட்சியின் அரசியல் பீரோவில் உறுப்பினரானார். 2000 ஆம் ஆண்டு திசநாயகே முதல்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வானார். பின்னர் கட்சியின் தலைவர் அந்தஸ்தையும் பெற்றார். சீன ஆதரவு நிலைப்பாட்டையும் கொண்டிருக்கிறார்.
இனப்படுகொலைக்கு ஆதரவு:
2004 ஆம் ஆண்டு ஐக்கிய ராஜபக்ச ஆட்சியின் ஒரு பகுதியாக இருந்துகொண்டு, தமிழ் இனப்படுகொலையில் உச்சக்கட்டமாக இருக்கும் ராணுவ நடவடிக்கையை ஜே.வி.பி முழுமையாக ஆதரித்தது. அதோடு, சமாதானப் பேச்சுவார்த்தைகளுக்கு எதிராக நின்றவர்களில் திசநாயகேவும் ஒருவராவார். ஈழ தமிழர்களுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு நிலவுகிறது. ராஜபக்சவைப் போன்று, ஜேவிப்யும் இனவாத அரசியலையெ முன்னெடுப்பதாகவும் விமர்சனங்கள் உள்ளன.
இந்தியாவிற்கு எதிரானவரா?
ஜே.வி.பி பாரம்பரியமாக இந்தியா-விரோத தளத்தில் இருப்பதாகவே கருதப்படுகிறது. வடகிழக்கில் தமிழர் சுயாட்சிக்கான வாய்ப்பு மற்றும் இந்திய அமைதி காக்கும் படையின் (ஐபிகேஎஃப்) இருப்பு போன்ற காரணங்களால், அக்கட்சி 1987ம் ஆண்டு கிளர்ச்சியை முன்னெடுத்தது. அதோடு, இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்களான மலையகத் தமிழர்களை, தீவில் இந்திய விரிவாக்கத்தின் கருவி என்று சாடியுள்ளது. இருநாடுகளுக்கு இடையேயான விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் (CEPA), அதிக வர்த்தகம் மற்றும் முதலீட்டிற்கான வாய்ப்புகளைத் திறக்கும் ஒப்பந்தம் போன்றவற்றிற்கு எதிர்ப்பையும், திசநாயகேவின் கட்சி பதிவு செய்துள்ளது. இதனால், அவர் வெற்றி பெற்றால், இந்தியா - இலங்கை இடையேயான உறவு எப்படி இருக்கும் என்பதில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
நிலவளம் ரெங்கராஜன்