தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

பசுமை மின்சாரத்திற்கென பிரத்யேக வழித்தடம்!-கனிமொழி சோமு வலியுறுத்தல்!

02:00 PM Aug 06, 2024 IST | admin
Advertisement

புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் 2023 ஜனவரி 4 ஆம் தேதி மத்திய அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்ட தேசிய பசுமை ஹைட்ரஜன் இயக்கத்தை ரூ .19,744 கோடி செலவில் செயல்படுத்தி வருகிறது. பசுமை ஹைட்ரஜன் மற்றும் அதன் மூலமான உற்பத்தி, பயன்பாடு மற்றும் ஏற்றுமதிக்கான உலகளாவிய மையமாக இந்தியாவை மாற்றுவதே இந்த இயக்கத்தின் முக்கிய நோக்கமாகும். இந்நிலையில் மாநிலங்களவையில் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க மின்சார அமைச்சகத்திற்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்தில் கலந்துகொண்டு தி.மு.க. எம்.பி., டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு பேசியதாவது:

Advertisement

சூரியசக்தி மற்றும் காற்றாலை மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்வது மின்சாரத் தேவைக்கு மட்டுமல்ல... மனித குலத்தையும் இந்த பூமிப் பந்தையும் பாதுகாப்பதில் மிக முக்கிய பங்கும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க மின்சாரத்திற்கு உண்டு. ஓசோன் மண்டல பாதிப்பிலிருந்து எதிர்காலத் தலைமுறையைக் காக்கும் பொறுப்பும் இந்தவகை மின்சாரத்திற்கு உண்டு. பொருளாதார முன்னேற்றத்தை வேகப்படுத்துவது, பாதுகாப்பான மின்சார உற்பத்தி மற்றும் பருவநிலை மாற்றத்தை எதிர் கொள்வது ஆகியவையே புதுப்பிக்கத்தக்க மின்சாரத்தை அதிக அளவில் உற்பத்தி செய்யக் காரணம். சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் கார்பன் வெளியேற்றத்தில் உலகின் நான்காவது நாடு என்ற ஆபத்தில் இருக்கிறது. அனல் மின்நிலையங்களுக்கு ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான மில்லியன் டன் அளவுக்கு நிலக்கரியை இறக்குமதி செய்து உபயோகிக்கிறோம். இது சுற்றுச் சூழலை மேலும் பாதிக்கும் ஆபத்து இருக்கிறது. அந்தப் பின்னணியில் இத்தகைய மின் உற்பத்தி முறைகளே வரப்பிரசாதமாக அமைந்திருக்கின்றன.

Advertisement

காற்றாலை மின் உற்பத்தியில் இந்தியா மிக வலுவான இடத்தை அடைந்திருக்கிறது. நாட்டின் ஒட்டுமொத்த காற்றாலை மின் உற்பத்தியான 45 ஆயிரம் மெகா வாட்டில் நான்கில் ஒருபகுதியான 11 ஆயிரம் மெகா வாட்டை குஜராத் மற்றும் தமிழ்நாடு என இரண்டு மாநிலங்கள் மட்டுமே உற்பத்தி செய்கின்றன. மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களும் கணிசமான பங்களிப்பைச் செய்கின்றன. இவ்வளவு மிக்கியத்துவம் வாய்ந்த இந்த மின் உற்பத்தி நடைமுறையை மேலும் வளர்த்தெடுக்கும் கடமை மத்திய அரசுக்கு உண்டு. அந்நிய முதலீடுகளை இந்தத் துறைக்கு அதிக அளவில் கொண்டுவர வேண்டியதன் அவசியத்தை இந்த அரசு உணர வேண்டும். இதன் மூலம் உள்நாட்டில் வேலை வாய்ப்புகள் பெருக வாய்ப்பு ஏற்படும்.

நாட்டின் மின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தொழிற்சாலைகள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அத்தியாவசிய இடங்களில் தடையற்ற மின்சாரம் அவசியமாகிறது. அதிக அளவிலும் மின்சாரம் தேவைப்படுகிறது. எனவே சுற்றுச் சூழலையும் மனதில்கொண்டு பசுமை மின்சாரத்தை ஊக்குவிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டதாகவே கருதுகிறேன்.எங்கள் கழகத் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி நடக்கும் தமிழ்நாடு, மாசற்ற மின்சார உற்பத்தியில் முன்வரிசை மாநிலங்களில் ஒன்றாக விளங்குகிறது. பசுமை மின்சார உற்பத்தி மூலமாகவே மின்சாரத் தன்னிறைவை அடையும் விதமாக காற்றாலை, சூரியசக்தி மற்றும் நீர் மின் உற்பத்தியில் அதிக கவனம் செலுத்தி வருகிறது தமிழ்நாடு அரசு. இதன் ஓர் அம்சமாக இந்தாண்டு ஜனவரி மாதம் தமிழ்நாடு பசுமை மின்சாரக் கழகம் என்ற புதிய நிறுவனத்தை தமிழ்நாடு அரசு தொடங்கியிருக்கிறது. அத்துடன் தமிழ்நாடு எரிசக்தி முகமையும் இந்நிறுவனத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. நீர், சூரிய சக்தி, காற்றாலை போன்றவற்றின் மூலம் மின் உற்பத்தி செய்வதை இந்நிறுவனம் பொறுப்பேற்று கவனிக்கும்.தற்போதைய தமிழக மின் உற்பத்தியில் 22 சதவீதமாக உள்ள பசுமை மின்சார உற்பத்தியை 2030ம் ஆண்டுக்குள் 50 சதவீதமக உயர்த்துவதை இப்புதிய நிறுவனம் உறுதி செய்யும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

இதன்படி தனியாருக்குச் சொந்தமான பழைய காற்றாலைகளை மீண்டும் மின் உற்பத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வருவதில் கவனம் செலுத்தி இதுவரை 96 பழைய காற்றாலைகளுக்கு புத்துயிர் அளித்து 26 மெகா வாட் மின்சார உற்பத்திக்கு வழிவகுக்கப்பட்டுள்ளது.சூரிய மின்சக்தியைப் பொறுத்தவரை 2023-24 ம் நிதியாண்டில் 11 ஆயிரம் மில்லியன் யூனிட்களை உற்பத்தி செய்து தமிழ்நாடு சாதனை புரிந்துள்ளது. இந்தளவுக்கு உத்வேகத்தோடு செயல்படும் தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு மேலும் ஊக்கமளிக்கும் வகையில் மத்திய அரசு சில விஷயங்களைச் செயல்படுத்த வேண்டும் என்று நினைக்கிறேன். நாட்டில் சூரிய மின் உற்பத்தி மற்றும் காற்றாலை மின் உற்பத்திப் பூங்காக்களை அதிக அளவில் அமைக்க மாநில அரசுகள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு மத்திய அரசின் நிர்வாகத்தின் கீழ் உள்ள ஊரக மின்கட்டமைப்புக் கழகம் மற்றும் மின்சார நிதிக் கழகம் ஆகியவற்றின் மூலம் அதிக அளவு நிதியுதவி அளிக்க வேண்டும்.

பசுமை மின்சார உற்பத்தி திட்டங்களுக்கு கடனுதவி அளிப்பதை முன்னுரிமையாகக் கருத வேண்டும் என்று ரிசர்வ் வங்கிக்கும், மற்ற அனைத்து வங்கிகளுக்கும் மத்திய அரசு அறிவுரை வழங்க வேண்டும். ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில அரசு மற்றும் தனியார் ஒத்துழைப்புடன் பசுமை மின்சார உற்பத்தி திட்டங்களை உடனடியாகத் தொடங்க ஏதுவாக நில வங்கிகளை ஏற்படுத்த வேண்டும். சூரிய சக்தி மற்றும் காற்றாலை மூலம் உற்பத்தியாகும் மின்சாரத்தை நாட்டின் பிற பகுதிகளுக்கு மின்சார இழப்பின்றி எடுத்துச் செல்லும் வகையில் பிரத்யேக மின் வழித்தடங்களை மத்திய அரசு ஏற்படுத்தித் தர வேண்டும். சூரிய சக்தி மற்றும் காற்றாலை மின்சார உற்பத்திக்குப் பயன்படும் கருவிகள் பழுதானால் அவற்றை பாதுகாப்பாக அழிப்பதற்கு நிரந்தர கொள்கை ஒன்றை மத்திய அரசு வகுக்க வேண்டும்.

நாடு முழுக்க உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிலையங்களில் சூரிய மின் உற்பத்தி வசதியை கட்டாயமாக்கும் வகையில் உரிய சட்டங்களை மத்திய அரசு கொண்டுவர வேண்டும். நகர்ப் பகுதிகளில் சேகரமாகும் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டத்தை ஊக்குவிக்கும் வகையில் நகர்ப்புற உள்லாட்சி அமைப்புகளுக்கு தேவையான நிதி உதவிகளை மத்திய அரசு செய்ய வேண்டும். வீட்டின் மேல் மாடியில் சூரிய மின்சக்தி உற்பத்தியை ஊக்குவிக்க தற்போது வழங்கப்படும் மானியம் போதுமானதாக இல்லை. மூன்று கிலோவாட் மின் உற்பத்திக்கு ஆகும் செலவு சுமார் மூன்று லட்சம். ஆனால் அரசு கொடுப்பதோ 78 ஆயிரம் மட்டுமே. தங்கள் சொந்தப் பணத்திலிருந்து சில லட்சங்களை செலவு செய்யும் நிலையில் மிக நிச்சயமாக நடுத்தரக் குடும்பங்கள் இல்லை. எனவே இந்த மானியத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.

விவசாயிகள் சூரிய மின்சக்தி பம்ப் செட்களை பயன்படுத்த வேண்டும்; மத்திய அரசே அதற்கான முழு செலவை ஏற்கும் என்று சொல்லிவிட்டு, சில லட்சங்களை அந்த விவசாயியே செலவிடும் நிலை உள்ளது. இதை எப்படி இலவசம் என்று மத்திய அரசு சொல்கிறது? இந்த ஆண்டு மேலும் 15 முதல் 18 ஜிகா வாட் பசுமை மின்சார உற்பத்திக்கு இலக்கு வைத்துள்ள மத்திய அரசு, இந்தத் துறைக்கு 19 ஆயிரம் கோடி மட்டுமே நிதி ஒதுக்கியிருப்பது போதுமானதல்ல. இதுபோன்ற தவறுகளைத் திருத்தி, திறந்த மனதோடு மாநில அரசுகளை அணுகி அவர்களுடன் விவாதித்து, பசுமை மின் உற்பத்திக்குத் தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்த தேவையான தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை மத்திய அரசு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்''இவ்வாறு டாக்டர் கனிமொழி என்.வி.என். சோமு பேசினார்.

Tags :
Discussion MinistryDr. Kanimozhi NVN Somugreen electricityGreen PowerKanimozhi SomuNew and Renewable EnergySpecial way
Advertisement
Next Article