For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

ஆயி அம்மாளுக்கு குடியரசு தினத்தன்று சிறப்பு விருது - முதல்வர் அறிவிப்பு!

05:31 PM Jan 14, 2024 IST | admin
ஆயி அம்மாளுக்கு குடியரசு தினத்தன்று சிறப்பு விருது   முதல்வர் அறிவிப்பு
Advertisement

"துரை யா.கொடிக்குளத்தைச் சேர்ந்த ஆயி அம்மாள் என்கிற பூரணம் அவர்கள் கொடையால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெறுவார்கள். கல்வியையும் கற்பித்தலையும் உயர்ந்த அறமாகப் மதிக்கும் தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக விளங்கும் ஆயி அம்மாளின் கொடையுள்ளத்தைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையில் வருகிற குடியரசு நாள் விழாவில் அரசின் சார்பில் அவருக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும்." என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Advertisement

மதுரை டிஸ்ட்ரிக் மேலூர் அருகே, கொடிக்குளம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஆயி அம்மாள் என்னும் பூரணம். இவரின் கணவர் உக்கிரபாண்டியன் கனரா வங்கியில் வேலை பார்த்து வந்தார். 30 ஆண்டுகளுக்கு முன்பு அவர் மரணிக்க, வாரிசு அடிப்படையில் கணவரின் வேலை ஆயி அம்மாளுக்குக் கிடைத்தது. இவர் தற்போது மதுரை தல்லாகுளம் கனரா வங்கிக் கிளையில் எழுத்தராகப் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், ஆயி என்ற பூரணத்தின் மகள் ஜனனி (30) இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்துவிட்டார். அவர் இறக்கும் தருவாயில் தனது தாயாரிடம், தனது தாத்தா வழங்கிய நிலத்தை சொந்த ஊரில் உள்ள பள்ளிக்கு தானமாக வழங்குமாறு கூறியுள்ளார். இதையடுத்து கொடிக்குளம் அரசு நடுநிலைப் பள்ளியை தரம் உயர்த்துவதற்காக, தனது பெயரில் இருந்த ரூ.7 கோடி மதிப்பிலான ஒன்றரை ஏக்கர் நிலத்தை அரசுக்கு தானமாக வழங்கினார். கடந்த ஜனவரி 5ஆம் தேதி பள்ளியின் பெயரில் நிலத்தை, பத்திரப் பதிவும் செய்து கொடுத்தார்.

Advertisement

இது குறித்த செய்தி பொது வெளியில் பரவ, மதுரை எம்.பி. சு.வெங்எகடேசன், ஆயி அம்மாளை நேரில் சந்தித்துப் பாராட்டுகளைத் தெரிவித்தார். பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் ஆயி அம்மாளைத் தொலைபேசியில் அழைத்து வாழ்த்துத் தெரிவித்தார். தொடர்ந்து ஜனவரி 29-ஆம் தேதி மதுரையில் நடைபெறவிருக்கும் பெற்றோர் ஆசிரியர் கழக மண்டல மாநாட்டில் பூரணம் அம்மாள் கவுரவிக்கப்படுவார் என்றும் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் ஆயி அம்மாளுக்கு, குடியரசு தினத்தன்று முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக முதல்வர் தனது சமூகவலைதளப் பக்கத்தில், "கல்விதான் உண்மையான, அழிவற்ற செல்வம். ஒரு தலைமுறையில் பெறும் கல்வி ஏழேழு தலைமுறைக்கும் அரணாக அமையும் என்பதை உணர்ந்து தனது 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை அரசுப் பள்ளிக்குக் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்காகக் கொடையாக அளித்துள்ளார் மதுரை யா.கொடிக்குளத்தைச் சேர்ந்த ஆயி அம்மாள் என்கிற பூரணம் . ஆயி அம்மாளின் கொடையால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயன்பெறுவார்கள். கல்வியையும் கற்பித்தலையும் உயர்ந்த அறமாக மதிக்கும் தமிழ்ச் சமூகத்தின் அடையாளமாக விளங்கும் ஆயி அம்மாளின் கொடையுள்ளத்தைப் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையில் வருகிற குடியரசு நாள் விழாவில் அரசின் சார்பில் அவருக்கு முதலமைச்சரின் சிறப்பு விருது வழங்கப்படும்" என பதிவிட்டுள்ளார்.

Tags :
Advertisement