மரபணு திருத்த தொழில்நுட்ப அராய்ச்சிக்கு தென்னாப்பிரிக்கா அனுமதி!
மருத்துவ உலகில் முக்கியத்துவம் வாய்ந்த நகர்வாக பரம்பரை மரபணு திருத்தம் தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு தென்னாப்ரிக்கா அதிகாரபூர்வமாக ஒப்புதல் அளித்துள்ளது. மருத்துவ அறிநெறிகளுக்கு உட்பட்டு வெளிப்படைத்தன்மை, நீண்ட கால கண்காணிப்பு, சட்ட நடைமுறைகளை பின்பற்றுதல் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் மரபணு திருத்த சிகிச்சை தொடர்பான ஆராய்ச்சிகள் டெல்லியில் அரசு உதவியுடன் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது .
மணிக்கு மணி முன்னேற்றம் அடைந்து வரும் மருத்துவத்துறையில் மரபணு திருத்தம் எனப்படும் ஜீனோ எடிட்டிங் முக்கியத்துவம் பெறுகிறது. அதாவது மனித உடலில் விரும்பிய அம்சங்களை சேர்ப்பது அல்லது விரும்பத்தகாத அம்சங்களை நீக்குவேதே மரபணு திருத்தம் எனப்படுகிறது. இதனால் பரம்பரை நோய்கள் அடுத்த தலைமுறைக்கு செல்லாமல் கட்டுப்படுத்த முடியும் என்பது உள்ளிட்ட பலன்கள் கிடைக்கும் என மருத்துவ உலகம் தெரிவிக்கிறது.குறிப்பாக சர்க்கரை நோய், புற்றுநோய் போன்றவற்றை ஏற்படுத்தும் மரபணு காரணிகளை கண்டறிந்து நீக்குவதன் மூலம் அதை அடுத்த தலைமுறைகளுக்கு செல்லாமல் தடுக்க முடியும் என கூறப்படுகிறது. ஆனால் மனிதப்பண்புகளையே மாற்றத்தக்க வல்லமை கொண்ட இத்தொழில்நுட்பம் விரும்பத்தகாத, ஆபத்தான விளைவுகளை சமூகத்தில் ஏற்படுத்தும் என்ற அச்சத்தால் பல நாடுகளில் இதற்கு கடும் எதிர்ப்பு உள்ளது.
அதனால் இதற்கு சட்ட ரீதியான அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. அதே சமயம் கடந்த 2018ஆம் ஆண்டில் மரபணு திருத்த தொழில்நுட்பம் மூலம் உலகின் முதல் குழந்தையை சீனா உருவாக்கியதாக தகவல் வெளியானது. ஆனால் ஹெச்ஐவி தொற்று ஏற்படாத வகையில் மரபணுவில் திருத்தம் செய்தே அக்குழந்தை உருவாக்கப்பட்டதாக அதை உருவாக்கிய விஞ்ஞானி தெரிவித்தார். எனினும் மருத்துவ தேவைகள் அடிப்படையிலும் வேறு மாற்று சிகிச்சைகள் இல்லை என்ற சூழலில் மட்டுமே நெறிகளுக்கு உட்பட்டு இது போன்ற மரபணு திருத்தம் செய்யப்பட வேண்டும் என முடிவெடுக்கப்பட்டு அதனடிப்படையில் ஆராய்ச்சிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.இச்சூழலில்தான் இத்தகைய ஆராய்ச்சிகளுக்கு தென் ஆப்பிரிக்கா சட்ட ரீதியான அனுமதி வழங்கியுள்ளது. மருத்துவ அறிநெறிகளுக்கு உட்பட்டு வெளிப்படைத்தன்மை, நீண்ட கால கண்காணிப்பு, சட்ட நடைமுறைகளை பின்பற்றுதல் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுடன் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது