சூது கவ்வும் 2 - விமர்சனம்!
கோலிவுட்டில் இன்றளவும் டார்க் காமெடிக்கு அடையாளமாகச் சொல்லப்படும் சூது கவ்வும் படம் 2013 ஆம் ஆண்டு நலன் குமாரசாமி டைரக்ஷனில் விஜய் சேதுபதி, பாபி ஸிம்ஹா நடிப்பில் உருவாகி பெரும் வரவேற்பை பெற்றது. கிட்டத்தட்ட பதினோரு வருடங்கள் கழித்து தற்போது சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது. இந்த இரண்டாம் பாகத்தை SJ அர்ஜுன் டைரக்ட் பண்ணி உள்ளார். மிர்சி சிவா, ராதா ரவி, கருணாகரன், எம். எஸ். பாஸ்கர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். ஹிட அடித்த முதல் பாகத்தில் விஜய் சேதுபதி நடித்த மெயின் ரோலை இந்த பார்ட் டூ-வில் மிர்ச்சி சிவா செய்துள்ளார். முதல் பாகத்தில் வந்த கருணாகரன் இதில் மினிஸ்டராக இருக்கிறார். முந்தைய தொடர்ச்சி என்றாலும் அதை பார்க்காதவர்களையும் கவரும் வண்ணம் எஸ்.ஜே.அர்ஜுன் எழுதியிருக்கும் கதையில், சம கால அரசியல் சம்பவங்கள் எல்லாமே சுவாரஸ்யம் மிக்கதாகவே இருக்கிறது.
அதாவது ஸ்டேட் ஃபைனான்ஸ் மினிஸ்டரான கருணாகரன், ஊழல் அமைச்சர்களின் பட்டியலில் முதலிடத்தில் இருப்பதோடு, கட்சிக்கு ஏராளமான நிதிகளை பெற்றுக் கொடுப்பதிலும் முதலிடத்தில் இருக்கிறார். (ஆம்.. இப்போதைய அமைச்சர் மாதிரிதான்.) அதனால் அவர் என்ன தவறு செய்தாலும் கண்டுக்கொள்ளாத முதல்வர், மக்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் பொறுப்பை கருணாகரனிடம் ஒப்படைக்கிறார். அதன்படி, நவீன மயமாகி விட்ட டெக்னாலஜி மூலம் மக்களுக்கு பணத்தை விநியோகம் செய்ய திட்டமிட்டுகிறார் கருணாகரன். அதற்காக ரூ.60 ஆயிரம் கோடியை வெளிநாட்டு வங்கி ஒன்றில் டெபாசிட் செய்து, அந்த பணத்தை உடனடியாக விநியோகம் செய்வதற்காக ஒரு கருவியை வங்கியிடம் இருந்து பெற்றுக்கொள்கிறார். இன்னொரு பக்கம், முதல் பாகத்தில் வரும் தாஸ் கதாபாத்திரம் போல், கற்பனை பெண்ணுடன், கடத்தல் தொழில் செய்து வரும் மிர்ச்சி சிவா, அமைச்சராக இருக்கும் கருணாகரனை கடத்த வேண்டிய அசைன்மெண்டை ஒப்புக் கொள்கிறார்.இச்சூழலில் வங்கியில் இருக்கும் பணத்தை முதல்வரிடம் கொடுக்க செல்லும் போது மிர்ச்சி சிவா கருணாகரனை கடத்திப் போய் விடுகிறார். அதனால் அரசியலில் மட்டும் இன்றி கருணாகரனின் வாழ்க்கையிலும் மிகப்பெரிய பிரளயமும் ,மாற்றமும் ஏற்பட்டு விடுகிறது. அது என்ன? முடிவாக என்னானது என்பதை முதல் பாக ஸ்டைலில் சொல்லி இருப்பது தான் ‘சூது கவ்வும் 2’ படக் கதை.
விஜய் சேதுபதி ஃபர்ஸ்ட் பார்ட்டில் செய்ததை பலமுறை பார்த்து ரிகர்சல் எல்லாம் பார்த்து விட்டுஅதையே தான் இதில் மிர்ச்சி சிவா குருநாத் என்ற கதாபாத்திரம் மூலம் செய்திருக்கிறார். சகிக்கவில்லை. மது போதை இறங்கினால் கண் முன் பாம்புகள் இருப்பது போல் தோன்றுவதால், எந்த நேரமும் சரியான அளவில் போதையுடன் வலம் வரும் கதாபாத்திரத்தை நகைச்சுவையாக கையாண்டிருக்கும் மிர்ச்சி சிவா, ஓரிரு இடங்களில் சிரிக்க வைத்தாலும், பல இடங்களில் போதையுடன் வாழ்வதெப்படி என்று சொல்லக் கொடுக்க முயன்று பெயில் மார்க் வாங்கி விடுகிறார்.
அதே சமயம் முதல் பாகத்திலும் அட்ராக்ட் செய்த கருணாகரனுக்குக் கதையில் முக்கியத்துவம் இருப்பதால் முழு படத்தையும் சுமந்து அடடே சொல்ல வைக்கிறார். ஒரே மூஞ்சு மிர்ச்சி சிவாதான் ஹீரோ என்றாலும் கருணாகரனை மெயின் ரோலில் போட்டிருக்கலாமே என்று யோசிக்க வைத்து விடுகிறார். பலே. கருணாகரா! மேலும் ராதாரவி, வாகை சந்திரசேகர், எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரது அரசியல் மோதல்கள் ரியலி நாட் பேட்
இப்போதைய அரசியல் நிகழ்வுகளை நினைவ்வூட்டும் நையாண்டியுடன் தொடங்கி, பார்ட் 1 டைப்பில் கற்பனை காதலி உட்பட பல சீங்கள் இருந்தாலும் பல இடங்களில் இப்படத்தின் முதுகெலும்பான டார்க் காமெடி நன்றாகவே ஒர்க் ஆவுட் ஆகியிருக்கிறது. போதையில்லை என்றால் பாம்பு தெரிவது, பணம் வழங்குவதற்கு கேம்ஆப், வெள்ளை நிற சித்திரவதை அறை, கண்ணுக்குத் தெரியாத காதலிக்கு குண்டு பாய்ந்ததாக ஹாஸ்பிட்டல் போவது என அமைக்கப் பட்டக் காட்சிகள் எல்லாம் இண்டரஸ்டிங்.
மொத்ததில் தமிழ் சினிமாவுக்கேயுரிய திரைக்கதையில் போதிய அக்கறை காட்டாமை இதிலும் பெரிதும் தென்பட்டாலும் ஒரு நாட் பேட் மூவி லிஸ்டில் பாஸ் மார்க் வாங்கி விடுகிறார்கள்..!
மார்க் 3.25/5