இந்தியாவில் ஏதோவொன்று நடக்கப்போகிறது - ஹிண்டன்பர்க் எச்சரிக்கை!
அமெரிக்க நிதி ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் நிறுவனம், உலக பெரு நிறுவனங்களில் நிகழும் நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகள் குறித்து ஆய்வு செய்து அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. இந்நிலையில், `இந்தியாவில் பெரியதாக ஏதோவொன்று நடக்கப்போகிறது என்று தனது எக்ஸ் பக்கத்தில் பரபரப்பு தகவலை பதிவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, இந்த பதிவு நிதி உலகில் பெரும் பேசுபொருளாகி உள்ளது.
ஹிண்டன் பர்க் நிறுவனத்தின் அறிக்கைகள், மோசடிகளை அம்பலப்படுத்துவதிலும், முதலீட்டாளர்களைப் பாதுகாப்பதிலும் முக்கியப் பங்கு வகிப்பதாக நம்பப்படுகிறது. கடந்தாண்டு ஜனவரி மாதத்தில், இந்தியாவின் அதானி குழுமத்தில் முறைகேடுகள் நடப்பதாகக் கூறி, அறிக்கை வெளியிட்டது.அதானி குழுமம் பங்கு முறைகேடு, பங்கு மதிப்பை உயர்த்திக் காட்டி, அதன் மூலம் அதிகக் கடன் பெறுதல், போலி நிறுவனங்களைத் தொடங்கி, வரி ஏய்ப்பு செய்தல் உள்ளிட்ட முறைகேடுகளில் ஈடுபட்டதாக அறிக்கையில் தெரிவித்தது. இந்தியக் கூட்டு நிறுவனமான அதானி, பல ஆண்டுகளாக பங்கு முறைகேடு மற்றும் கணக்கியல் மோசடிகளில் ஈடுபட்டுள்ளது என்றும் கூறியிருந்தது.
இதனைத் தொடர்ந்து, ஹிண்டன்பர்க்கின் அறிக்கை வெளியான உடனேயே, அதானி குழும நிறுவனங்களின் பங்குகளில் விலை மாபெரும் சரிவை சந்தித்தன. இதனையடுத்து, அதானி குழுமத்தின் மீதான ஹிண்டன்பர்க்கின் கூற்றுக்கள் அனைத்தும் ஆதாரமற்றவை என்று அதானி குழுமம் மறுத்தது.ஆனால், தங்களது இந்த அறிக்கை தவறானது என்று கருதினால், அதானி குழுமம் தங்கள் மீது வழக்குத் தொடரலாம் என்று அதானி குழுமத்திற்கு ஹிண்டன்பர்க் அழைப்பும் விடுத்திருந்தது. ஆனால், ஹிண்டன் பர்க்கின் அறிக்கை தவறானது என்று கூறிய அதானி நிறுவனம், பெரிய அளவில் சட்டரீதியான எதிர்வினையை ஆற்றவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது