ஐரோப்பாவில் வலதுசாரி எழுச்சி குறித்த ஆரூடம்!
ஐரோப்பிய யூனியனின் நாடாளுமன்றத்துக்கான தேர்தல்கள் நடந்து முடிந்திருக்கின்றன. அங்கே அதீத வலதுசாரி சிந்தனாவாதக் கட்சிகள் வெற்றி அடைந்து இருக்கின்றன. ஃபிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி போன்றவை இந்தக் கட்டமைப்பின் முக்கிய நாடுகள். இங்கெல்லாம் வலது சாரிக் கட்சிகளுக்கு அதிக வாக்குகள் கிடைத்திருக்கின்றன. ஃபிரான்ஸ்சில் மரின் லா பென் தலைமையிலான தேசிய மாநாடு அதீத வலதுசாரி சார்புடைய கட்சி. ஃபிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோனின் கட்சியை விட இரண்டு மடங்கு வாக்குகள் பெற்றிருக்கிறது. இதனால் செல்வாக்கு இழந்ததாகக் கருதிய மக்ரோன் பிரெஞ்சு சட்டசபையை கலைத்து விட்டு உடனடி தேர்தல் அறிவித்திருக்கிறார். ஜெர்மனியின் மாற்று சிந்தனைக் கட்சி ஏறக்குறைய நாஜி சிந்தனைகளை முன்னெடுக்கும் கட்சி. இவர்கள் சுமார் 16 சதவிகிதம் வாக்குகள் பெற்றிருக்கிறார்கள். இத்தாலியிலும் இதே போல நடந்திருக்கிறது.
ஐரோப்பாவில் வலதுசாரி எழுச்சி குறித்து நான் தொடர்ந்து எச்சரித்து எழுதிக் கொண்டிருக்கிறேன். இவர்கள் வளர்ச்சிக்குப் பெரும்பாலும் முஸ்லிம் சமூகம்தான் காரணியாக இருந்திருக்கிறது. ஐரோப்பாவில் ஷரியா வாழ்வியல் முறைகளைப் பின்பற்ற முனைவது, கருத்துரிமைகளுக்கு எதிராக வன்முறைகளை அரங்கேற்றுவது, புர்கா, Female Genital Mutilation (FGM) என்று பெண்களுக்கெதிரான கொடூரங்களை முன்னெடுப்பது, LGBTQIA+ சமூகத்தினருக்கு எதிராக பிரச்சாரங்கள் புரிவது, என்று இவர்களின் பல்வேறு அணுகுமுறைகள் இந்தக் கட்சிகளுக்கு லட்டு மாதிரி உதவிக் கொண்டிருக்கின்றன. 'பாருங்க, இவங்களை எல்லாம் உள்ளே விட்டா அவ்வளவுதான்!' என்று ஐரோப்பிய மக்களிடையே பிரச்சாரம் செய்ய உதவுகின்றன.
பிரான்ஸ்சின் ஆசிரியர் சாமுவேல் பேட்டி படுகொலையான பொழுது நான் எழுதி இருந்த பதிவில் பின்வரும் வரிகள் இருந்தன:
'இனிமேல் என்ன நடக்கும்? ஃபிரான்சில் இஸ்லாத்துக்கு எதிரான பிரச்சாரம் கடுமையடையப் போகிறது. மேற்கு ஐரோப்பாவிலேயே முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் நாடு ஃபிரான்ஸ். அங்கே தீவிர வலதுசாரி மற்றும் நியோ நாஜிக் குழுக்கள், கட்சிகள் இருக்கின்றன. மரின் லா பென் போன்ற அரசியல் தலைவர்கள் முஸ்லிம்களை வெறுப்பவர்கள். இவர்கள் கை இனிமேல் வலுக்கப் போகிறது. பொதுமக்களும் அந்த வலதுசாரி பிரச்சாரத்துக்கு மயங்கவே போகிறார்கள்... (ஷா பானோ விஷயத்தில்) அத்வானிக்கு கிடைத்த லட்டு இப்போது மரின் லா பென்னுக்கு கிடைக்கப் போகிறது.' (1)
...
அதற்குப் பிறகு நடந்த ஃபிரெஞ்சு ஜனாதிபதி தேர்தலில் மரின் லா பென் தோற்றாலும் சுமார் 40% வாக்குகள் பெற்று வலிமை பெற்றார். அப்போது அதை சுட்டிக் காட்டி நான் எழுதிய பதிவில் பின்வரும் வரிகள் இருந்தன:
'லா பென் மட்டுமல்ல, ஐரோப்பா முழுவதுமே பரவலாக முஸ்லிம்களுக்கு எதிராக இயங்கும் தீவிர வலதுசாரி கட்சிகள் பலம் பெற்று வருகின்றன. தொடர்ந்து மதவாதத்தை ஊக்குவிக்கும் அல்லது நியாயப்படுத்தும் செயல்களை முஸ்லிம் சமூகம் ஆதரித்துக் கொண்டிருந்தால் இவை தொடரவே செய்யும். வருங்காலத்தில் ஃபிரான்ஸ், இத்தாலி எங்காவது தீவிர வலதுசாரிக் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் நிலை வரலாம். அப்போது அங்கே வாழும் முஸ்லிம்களை கடுமையாக ஒடுக்க முனையலாம்.' (2)
இந்த ஆரூடம் ஏறக்குறைய பலிக்கும் நிலைக்கு வந்திருக்கிறது. நெதர்லாந்து, ஜெர்மனி, ஃபிரான்ஸ் மற்றும் இத்தாலி நாடுகளில் இந்தக் கட்சிகள் தற்போது பலமடைந்திருக்கின்றன. வரும் ஃபிரெஞ்சு சட்டசபைத் தேர்தலில் மரின் லா பென் அதிக அளவு இடங்களைப் பிடிக்க நேரலாம். அப்போது சட்ட வடிவங்களை கட்டுப்படுத்தும் வலிமை அவர்களுக்குக் கிடைத்து விடும். முஸ்லிம்களுக்கு எதிரான பல்வேறு சட்டங்கள் அப்போது அரங்கேறலாம். முஸ்லிம் குடியேற்றம் கட்டுப்படுத்தப்படும். அங்கே ஏற்கனவே குடியிருக்கும் முஸ்லிம்கள் ஒடுக்கப்படலாம்.
அப்படி நிகழ்ந்தால் அதில் ஒரு சிறு அளவிலான பொறுப்பு ஐரோப்பிய முஸ்லிம்களையும் சேரும்.