கருணாநிதி குறித்து அவதூறு: சாட்டை முருகன் கைதுக்கு சீமான் கண்டனம்!
பேசுவதற்கு எல்லாம் கைது செய்வதா? எனது தொலைபேசி பேச்சுக்களை ஒட்டுக்கேட்கும் அரசுக்கு கள்ளச்சாராயம் விற்பவர்களையும், கொலை குற்றங்களில் ஈடுபடுவதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் ஒரு தெருவுக்கு ஒரு அமைச்சர் என்று பணத்தை வாரி வழங்கியிருக்கின்றனர். மூன்றாண்டுகள் நல்லாட்சி செய்துள்ளோம் எனக் கூறிவிட்டு இடைத்தேர்தலில் கள்ள ஓட்டு போட்டுள்ளனர். இது ஒரு தேர்தலா?" என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்
விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் பரப்புரையின் போது, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயாவை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட சாட்டை துரைமுருகன், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறித்து அவதூறான கருத்துக்களை பேசியதாக அவர் மீது திமுகவினர் புகார் அளித்திருந்தனர்.இது குறித்து திருச்சி சைபர் கிரைம் போலீசாரிடம் திமுக தரப்பில் புகார் அளிக்கப்படவே, வழக்குப்பதிவு செய்த போலீசார் தற்போது சாட்டை துரைமுருகனை கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நெல்லை, குற்றாலம் வீராணம் பகுதியில் உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த சட்டை துரைமுருகனை திருச்சி சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே இது போன்ற ஒரு சர்ச்சையில் சிக்கிய சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டார்.இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், "தமிழகத்தில் 31 நாட்களில் 133 கொலைகள் நடந்துள்ளன. ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு பிறகுதான் மற்ற கொலைகள் வெளியே தெரிகிறது. எல்லோராலும் அறியப்பட்ட தலைவர் கொல்லப்படும்போது தான் தமிழகத்தில் நிலவும் நிலை தெரிகிறது. ஏற்கெனவே கள்ளகுறிச்சியில் இத்தனை பேர் சாராயம் குடித்து இறந்தார்கள். இந்த நிலையில் மீண்டும் நேற்று விக்கிரவாண்டியில் கள்ளச் சாராயம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
சாராய அதிபர்கள் கையில் ஆட்சியை கொடுத்தால் சாராயத்தை எப்படி ஒழிக்க முடியும்? இவர்கள் மீது பாயாத சட்டம், மேடையில் பேசியதற்காக சாட்டை துரைமுருகன் பாய்கிறது. எதற்காக இந்த அரசு சாட்டை துரைமுருகனை கைது செய்துள்ளது? என்னை விடவா சாட்டை துரைமுருகன் அதிகம் பேசிவிட்டார். அதிகாரத்தில் இருக்கும் நீங்கள் என்னை கைது செய்யுங்கள் பார்ப்போம். என்னை சுற்றி இருப்பவர்களை கைது செய்து எனக்கு நெருக்கடி கொடுக்கிறார்கள். இது ஓர் ஆட்சி முறை.” என்று சீமான் ஆவேசமாக தெரிவித்தார்