வானில் ஒரே நேர்கோட்டில் ஆறு கோள்கள் பார்க்கலாம்!
வானில் சூரிய மண்டலத்தில் உள்ள கோள்களில் பொதுவாக சிலவற்றைத்தான் நாம் கண்ணால் காண முடியும், அதன்படி சுக்கிரன், வியாழன், சூரியன், நிலவு, சில நேரங்களில் செவ்வாய், சனி போன்ற கோள்களைத்தான் நாம் பார்க்க முடியும். ஒரே நேரத்தில் பார்க்க முடியுமா என்றால் முடியாது. எப்போதாவது அரிதாக அதுபோன்ற நிகழ்வுகள் நடப்பது உண்டு. அப்படிப்பட்ட ஒரு நிகழ்வாக வானில் ஒரே நேரத்தில் 6 கோள்கள் அணிவகுக்கும் அரிய நிகழ்வை வெறும் கண்களால் பார்க்கலாம். இதற்காக சென்னை பிர்லா கோளரங்கத்தில் இன்று (ஜன. 22) முதல் 25-ம் தேதி வரை சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நமது சூரிய குடும்பத்தின் முக்கிய 8 கோள்களும் சூரியனை வெவ்வேறு வேகத்தில் சுற்றி வருகின்றன. சூரியனுக்கு மிக அருகில் இருக்கும் புதன் கோளானது, 88 நாட்களில் ஒரு சுற்றை நிறைவு செய்கிறது. அதாவது புதன் கிரகத்தில் ஒரு ஆண்டு என்பது 88 நாட்கள். பூமியின் ஆண்டு 365 நாட்கள். அதிகபட்சமாக நெப்டியூன் சூரியனை சுற்றிவர 60,190 நாட்கள், அதாவது சுமார் 165 ஆண்டுகள் ஆகும்.கோள்கள் வெவ்வேறு வேகத்தில் சுற்றிவருவதால், சில நேரங்களில் அவற்றில் பல, சூரியனின் ஒரே பக்கத்தில் வரிசை கட்டி நிற்பது உண்டு. பூமியிலிருந்து காணும் போது இரவு வானில் ஒரே நேரத்தில் பல கிரகங்களை நம்மால் காண முடியும். சில அபூர்வ சந்தர்ப்பங்களில் இரவு வானில், அவை அனைத்தும் ஒரே நேர் கோட்டில் காட்சி தரும்.
அந்த வகையில் வெள்ளி, வியாழன், சனி, செவ்வாய், நெப்டியூன் மற்றும் யுரேனஸ் கோள்கள் ஒரே நேர்கோட்டில் தென்படுகின்றன. வெறும் கண்களால் வெள்ளி, வியாழன், சனி மற்றும் செவ்வாய் கோள்களையும், நெப்டியூன், யுரேனஸை சக்திவாய்ந்த தொலைநோக்கிகளாலும் காணமுடியும். இவற்றைக் காண்பதற்காக அறிவியல் அமைப்புகள் சார்பில் நாடு முழுவதும் இன்று முதல் 25-ம் தேதி வரை சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து, அறிவியல் தொழில்நுட்ப மையத்தினர் கூறியதாவது:‘கோள்கள் ஒரே நேர்கோட்டில் வரவில்லை. பூமியில் இருந்து பார்க்கும்போது இந்த கோள்கள் ஒரே நேர்கோட்டில் இருப்பதுபோன்ற மாயத் தோற்றத்தை தருகின்றன. இந்நிகழ்வை, 'பிளானட்டரி பரேட்' என்கிறோம். இவற்றை, வெட்டவெளி அல்லது மொட்டை மாடியில் இருந்து காணலாம். இதுபோன்ற நிகழ்வுகள் ஒவ்வொரு ஆண்டும் நிகழாது. கடந்த 2022 ஜூனில், ஐந்து கோள்கள் நேர்கோட்டில் வந்தன. தற்போது, ஆறு கோள்கள் வருகின்றன.
அடுத்த மாதம் 28ம் தேதி ஏழு கோள்களை பார்க்கலாம். இதையடுத்து, ஆகஸ்ட் மாத மத்தியிலும், இவ்வாறான நிகழ்வு ஏற்படும். அதைத் தொடர்ந்து, 2040ல் தான், இதுபோன்று நிகழும். இவை கிழக்கு - மேற்காக காணப்படும். நட்சத்திரங்கள் போல் மின்னாது. அளவில் சற்று பெரிதாக இருக்கும். அதிக பிரகாசத்துடன் காணப்படுவது வெள்ளி கோள். அதைத் தொடர்ந்து, செம்பழுப்பு நிறத்தில் செவ்வாய் கோள் காணப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
மாணவர்களுக்கு சிறப்பு ஏற்பாடு
சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள, அறிவியல் தொழில்நுட்ப மையம், கோவை, திருச்சி, வேலுார் சத்துவாச்சாரி பகுதியில் உள்ள, மண்டல அறிவியல் தொழில்நுட்ப மையங்களில், கோள்களின் நேர்கோட்டு நிகழ்வை, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், நுண்ணோக்கி வழியே காண சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று முதல் 25ம் தேதி வரை, மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை காணலாம்.