மேஜர் முகுந்த் வரதராஜனின் பயோபிக்காக உருவாகும் சிவகார்த்திகேயனின் அமரன்!
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேசனல் (RKFI), மற்றும் சோனி பிக்சர்ஸ் இண்டர்நேசனல் ப்ரொடக்ஷன்ஸ் (SPIP) இணைந்து தயாரிக்கும், பெரிதும் எதிர்பார்க்கப்படும் #SK21 திரைப்படத்தின் பெயரை, நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாளையொட்டி அறிவித்துள்ளார்கள்.இத்திரைப்படத்தின் பெயர் 16, பிப்ரவரி 2024 அன்று வெளியிடப்பட்ட சுவாரசியமான டீசரின் வழியாக தெரிவிக்கப்பட்டது.
இந்தத் திரைப்படத்திற்கு, "அமரன்" என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இதனை, உலகநாயகன் கமல்ஹாசன், சோனி பிக்சர்ஸ் இண்டர்நேசனல் ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் ஆர்,மகேந்திரன் ஆகியோர் தயாரிக்க, இவர்களுடன் இணை-தயாரிப்பாளராக வக்கில் கானின் காட் ப்ளஸ் எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம் இணைகிறது. இந்தப் படத்தை எழுதி இயக்குபவர் ராஜ்குமார் பெரியசாமி. மேஜர் முகுந்த் வரதராஜனின் நிஜ வாழ்க்கை சம்பவங்கள் மற்றும் ராஹுல் சிங் ஷிவ் அரூர் எழுதிய 'இந்தியாஸ் மோஸ்ட் ஃபியர்லெஸ்' தொடரிலிருந்து ஒரு அத்தியாயம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் படத்தின் கதை அமைந்துள்ளது.
எழுதி-இயக்கும் ராஜ்குமார் பெரியசாமி, நெடிய ஆய்வுகளுக்குப் பிறகு, கவனமாக 'அமரன்' திரைப்படத்தின் கதையை உருவாக்கியிருக்கிறார், இது நிச்சயமாக தமிழ் மற்றும் இந்திய சினிமா வரலாற்றில் ஒரு சாதனையை நிகழ்த்தும்! தமிழ்த் திரை நட்சத்திரமான சிவகார்த்திகேயன், நிஜவாழ்வின் நாயகனான ஒருவரின், தனித்துவமிக்க கதாபாத்திரத்தை ஏற்று, அட்டகாசமான நடிப்பை வழங்கியிருக்கிறார். மேலும், மிகுந்த திறமைசாலியான சாய் பல்லவியுடன் அவர் இணைந்து நடித்திருக்கிறார். சாய் பல்லவி, இந்தப் படத்திற்கு இன்னொரு புதிய பரிமாணத்தை அளித்திருக்கிறார்.
'அமரன்' திரைப்படத்தில் மிகச்சிறந்த தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு உள்ளது. இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், தயாரிப்பு வடிவமைப்பாளர் ராஜீவன், ஒளிப்பதிவாளர் சி.ஹெச்.சாய், படத்தொகுப்பாளர் ஆர்.கலைவாணன், சண்டைக்காட்சி இயக்குனர் ஸ்டீஃபன் ரிச்டர், உடை வடிவமைப்பாளர்கள் அம்ரிதா ராம் மற்றும் சமீரா சனீஷ் ஆகியோர் தொழில்நுட்பக் குழுவில் இடம்பெற்றுள்ளார்கள்.
சோனி பிக்சர்ஸ் இண்டர்நேசனல் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தெலுகு திரையுலகில் தங்கள் முதல் தயாரிப்பான 'மேஜர்' மூலம் மிகுந்த புகழ்பெற்றவர்கள்,இப்போது 'அமரன்' திரைப்படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகில் நுழைகிறார்கள். இந்தப் படமும் இந்தியாவையும் அதன் கதாநாயகர்களையும் கொண்டாடும் விதமாக அமைந்து, உலகெங்கும் சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமே இல்லை.
RKFI நிறுவனத்தின் 50-வது படமான 'விக்ரம்' 2022-ஆம் ஆண்டு, திரையுலகில் சூறாவளியாக நுழைந்து, மாபெரும் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அவர்களின் 51-வது முயற்சியான 'அமரன்' திரைப்படமும் வெற்றிகரமானதாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சண்டைக்காட்சிகளும், உணர்வுபூர்வமான காட்சிகளும் மிகச்சரியான கலவையாக அமைந்திருக்கும் 'அமரன்' திரைப்படம் பற்றிய அடுத்த அறிவிப்புகளுக்குக் காத்திருங்கள். இறுதிக் கட்ட படப்பிடிப்பில் இருக்கும் இந்தப் படம் 2024-ஆம் ஆண்டின் கோடைக்காலத்தில் உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் வெளியாகும்.
அடிசினல் ரிப்போர்ட்:
முகுந்த் வரதராஜன் யார்?:
1983-ம் ஆண்டு ஏப்ரல் 12-ம் தேதி கேரளாவின் கோழிக்கோடு மாவட்டத்தில் பிறந்தார் முகுந்த். சென்னையில் தனது பள்ளிப்படிப்பை முடிந்தவர், தாம்பரத்தில் உள்ள கிறிஸ்துவக் கல்லூரியில் முதுகலையில் இதழியல் பட்டம் பெற்றவர். உறவினர்கள் சிலர் ராணுவத்தில் இருப்பதால் தானும் ராணுவத்தில் சேர்ந்து நாட்டுக்காக பணியாற்ற வேண்டும் என்ற ஆசையில் ராணுவ அதிகாரியானார்.
2006-ம் ஆண்டு ராஜ்புத் ரெஜினிமென்டில் லெப்டினென்டாக நியமிக்கப்பட்டார். 2008-ம் ஆண்டு ராணுவத்தில் கேப்டனாக பதவி உயர்வு பெற்றார். மத்தியப் பிரதேசத்தில் மோவ் நகரில் உள்ள காலாட்படை பள்ளியில் பணியாற்றினார். லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் மிஷனின் ஒரு பகுதியாகவும் இருந்தார். கடந்த 2012-ம் ஆண்டு ஜம்மு-காஷ்மீரில் பதற்றமான ஷோபியான் என்ற இடத்திற்கு மேஜராக அனுப்பப்பட்டார். இந்து ரெபேக்கா வர்கீஸ் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார்.
கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல் 25-ம் தேதி ஷோபியான் மாவட்டத்தில் பொதுமக்கள் குடியிருக்கும் கட்டிடம் ஒன்று பயங்கரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்டது. மக்களை மீட்கும் ஆபரேஷனுக்கு தலைமை தாங்கிய முகுந்த் கனகரக ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாம் என கூறி, நண்பர் சிப்பாய் விக்ரம் சிங்குடன் இணைந்து கட்டிடத்தை நோக்கி முன்னேறினார். இதில் நடந்த பயங்கரவாதிகளுடனான துப்பாக்கிச்சூட்டில் முகுந்த்தின் நண்பர் விக்ரம் சிங் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தனது நண்பர் உயிரிழந்த கோபத்தில் அதிரடி தாக்குதலில் ஈடுபட்ட முகுந்த் அங்கிருந்த பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தினார்.
“எல்லாம் முடித்துவிட்டு அவர் கட்டிடத்தை விட்டு வெளியே வந்தார். நன்றாக இருப்பதாக தெரிந்தார். நாங்களும் அப்படித்தான் நினைத்தோம். ஆனால் சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார்” என அந்த குழுவில் இருந்தவர்கள் தெரிவித்தனர். 3 தோட்டக்கள் அவரது உடலில் பாய்ந்திருத்து. இதையடுத்து முகுந்த் ஸ்ரீநகரில் உள்ள 92 Base மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டபோது வழியில் உயிரிழந்தார்.
31 வயதில் நாட்டை எதிரிகளிடம் இருந்து காப்பதற்காக இன்னுயிர் தந்த மேஜர் முகுந்த வரதராஜனுக்கு நாட்டின் மிக உயர்ந்த விருதான அசோக் சக்ரா விருது அறிவிக்கப்பட்டது. கடந்த 2015-ம் ஆண்டு குடியரசு தின விழாவில் அந்த விருதை முகுந்த்தின் மனைவி இந்து முகுந்த் பெற்றுக்கொண்டார்.