சர்.ஜான் மார்ஷல் - நினைவலைகள்!
சிந்து சமவெளி நாகரிகம் சரியாக 100 ஆண்டுகளுக்கு முன்பு ஜான் மார்ஷலால் கண்டறியப்பட்டது. ஜான் மார்ஷலுக்கு நன்றி கூறுகிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளாரே - டீடெய்ல் ப்ளீஸ் என்று கேட்போர் எண்ணிக்கை எகிறிக் கொண்டே போகும் சூழலில் இதோ முழுத் தகவல் :
இந்தியத் தொல்லியல் அகழாய்வின் ஆதவனாக விளங்கியவர் சர் ஜான் மார்ஷல்.
இந்தியத் தொல்லியல் ஆய்வாளர்களின் துணைகொண்டு சிந்துவெளி நாகரிகத்தைக் கண்டறிந்து உலகுக்கு உணர்த்தியவர். சுமேரிய நாகரிகம் போன்று இந்தியாவில் கண்டறியப்பட்ட தொன்மையான நாகரிகம் இதுவென்று கூறி உலகை வியப்பில் ஆழ்த்தியவர். வேதகால நாகரிகத்திற்கு முன்பாக இந்தியாவில் தோன்றிய தொன்மையான நாகரிகம் சிந்துவெளி நாகரிகம் என்பதை எடுத்துக்காட்டிய பெருமை சர் ஜான் மார்ஷலைச் சாரும்.
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இவர் 1876 மார்ச் 19இல் பிறந்தார். 1958 ஆகஸ்ட் 17இல் புகழுடன் மறைந்தார். ஆங்கிலேயர் காலத்தில் இந்தியத் தொல்லியல் துறையின் இயக்குநராக 1902இல் நியமிக்கப்பட்டு 1928 வரை நீண்டகாலம் பணியாற்றினார். இந்தியாவில் பல புகழ்பெற்ற தொன்மையான வரலாற்றுச் சின்னங்கள் இவர் காலத்தில் பாதுகாக்கப்பட்ட வரலாற்றுச் சின்னங்களாக அறிவிக்கப்பட்டு இன்றுவரை பாதுகாக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பான சட்டமும் இவர் காலத்தில் இயற்றப்பட்டது.
மார்ஷல் இந்தியா முழுவதும் கள ஆய்வுப் பணி மேற்கொண்டார். சாரநாத், ராஜகிருகம், சாஞ்சி, சிராவஸ்தி, குசிநகரம், நாளந்தா, பாடலிபுத்திரம், தட்சசீலம் முதலிய இடங்களில் இவரது முயற்சியில் அகழாய்வுகள் நடைபெற்றன. மார்ஷல் செய்த அகழாய்வுகளில் தலைசிறந்தவை மொகஞ்சதாரோ, ஹரப்பா முதலிய இடங்களில் செய்யப்பட்ட அகழாய்வுகளாகும். இவ்வாய்வில் இவருக்கு உலகளவில் பெரும் புகழ் கிடைத்தது. இவர் காலத்தில் ஆதிச்சநல்லூர், நாகர்ஜுனகொண்டா முதலிய இடங்களிலும் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
சிந்துவெளி நாகரிகம் என்பது உலகின் தலைசிறந்த நகர நாகரிகம் என்பதை சர் ஜான் மார்ஷலின் அகழாய்வுகள் வெளிப்படுத்தின. மொகஞ்சதாரோ, ஹரப்பா முதலிய இடங்களில் திட்டமிட்டுக் கட்டப்பட்ட வீடுகள், தெருக்கள், பல நிலைகளில் உள்ள குடியிருப்புகள், தானியக் கிடங்குகள், கிணறுகள், மூடிய கழிவுநீர் வாய்க்கால்கள், எழுத்துப் பொறிப்புள்ள ஏராளமான முத்திரைகள், சுடுமண் உருவங்கள், வண்ணம் தீட்டப்பட்ட பானைகள், செம்புப் பொருள்கள் அகழாய்வில் கண்டறியப்பட்டன.
சிந்துவெளி நாகரிகம் ஆரிய நாகரிகமா, திராவிட நாகரிகமா அல்லது இந்த இரண்டையும் சாராத வேறு ஒரு தனித்த நாகரிகமாக என்று ஆய்வாளர்கள் விவாதம் செய்தபோது, சிந்துவெளி நாகரிகம் திராவிட நாகரிகப் பண்புகளைக் கொண்டது என்பதை சர் ஜான் மார்ஷல் வெளிப்படுத்தினார். இவரின் கருத்தைப் பின்பற்றி பலர் இன்று ஆய்வு செய்துவருகின்றனர். இந்தியாவில் ஆரியர் வருகைக்கு முன்னர் ஆரியர் தொடர்பில்லாத தொன்மையான நாகரிகம் சிந்துவெளி நாகரிகமாகும் என்பதையும் மார்ஷல் எடுத்துக்கூறினார்.
சிந்துவெளியில் மார்ஷல் செய்த அகழாய்வின் அறிக்கை மூன்று தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளது. இன்றும் இவை இந்தியத் தொல்லியல் அகழாய்வாளர்களுக்கு வழிகாட்டியாக இருந்து வருகின்றன. இவை மட்டுமல்லாமல் பல அகழாய்வு அறிக்கைகளும் இந்திய வரலாற்றுச் சின்னங்கள் குறித்த நூல்களும் மார்ஷல் பெயரில் வெளிவந்துள்ளன.சிந்துவெளி நாகரிக அகழாய்வு தொடங்கி இன்று நூறு ஆண்டுகள் முடிந்துவிட்டன. சிந்துவெளி நாகரிகம் உலகின் தொன்மையான நாகரிகங்களில் ஒன்று. இதுபோன்ற நகர நாகரிகம் உலகில் வேறு எங்கும் இல்லை என்பதை வெளிப்படுத்திய மார்ஷலின் அரிய பணி அனைவராலும் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும். மேலும் சிந்துவெளி நாகரிகம் திராவிட மக்களோடு தொடர்புடைய நாகரிகம் என்பதை எடுத்துக்கூறிய பெருமையும் அவருக்கு உண்டு. இவ்வேளையில் அவரது அரிய பணிகளைப் பாராட்டி நன்றியுடன் தமிழ்நாடு முதல்வர் நினைவு கூறி இருப்பதற்கு ஆந்தை ரிப்போர்ட்டர் சார்பிலும் மகிழ்வும், நன்றிகளும்