சிங்கப்பூர் சலூன் - விமர்சனம்!
கோலிவுட்டில் போலீஸ், டாக்டர் , அரசியல்வாதி, , ஸ்போர்ட்ஸ் சேம்பியன், ஃபார்மர் போன்ற கேரக்டர்களைக் களமாக கொண்ட படங்களையே நாம் இதுவரை அதிகம் பார்த்திருக்கிறோம். ஆனால், ஹேர் ஸ்டைலிஸ்ட் எனப்படும் சிகை அலங்கார தொழிலை மையக்கருவாக கொண்டு பக்கா கமர்ஷியல் படம் ஒன்றை அதே சமயம், புத்திமதி சொல்கிறேன் என்று இல்லாமல், குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும் விதத்தில் `சிங்கப்பூர் சலூன்` என்ற டைட்டிலில் வழங்கி ஸ்கோர் செய்துள்ளார்கள். . குறிப்பாக `எதுவுமே இங்க குலத்தொழில் கிடையாது, Success is not a option..must` என்ற ஸ்லோகத்தை இளைஞர்கள் புரியும் விதத்தில் கொடுத்திருக்கும் டைரக்டர் கோகுல், சொல்ல வந்ததை எளிதாக மட்டும் இன்றி வலிமையாகவும் ரசிகர்களிடம் கடத்தி சபாஷ் சொல்ல வைத்து விட்டார்.
அதாவது வயலும், பசுமையும் நிறைந்த தென்காசி மாவட்டத்தில் பிறந்து வளரும் ஆர்.ஜே.பாலாஜி தனது சிறுவயது முதல் அந்த ஊரில் முடி திருத்தும் தொழிலாளியாக இருக்கும் லாலை ரோல் மாடலாக கருதி வாழ்கிறார். அதுவும் எதிர்காலத்தில் இந்தியாவின் டாப் ஹேர் ஸ்டைலராக வர வேண்டும் என கனவு கண்டு கொண்டிருக்கிறார். இதற்காக பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகு சிகை அலங்கார பணியில் அடியெடுத்து வைத்து இந்தியாவின் சிறந்த சிகை அலங்கார நிபுணர்களில் ஒருவரான ஜான் விஜய்யிடம் வேலைக்கு செல்கிறார். ஒரு சூழலில் அங்கிருந்து வெளியேறி தனியாக ஐந்து கோடி முதலிட்டீல் சிங்கப்பூர் சலூன் என்ற பிரமாண்டமான கடையை தொடங்க நினைக்கிறார். இந்த கடை தொடங்குவதில் ஏகப்பட்ட சிக்கல்கள் நிலவுகிறது. ஒரு கட்டத்தில் தன் ஆசை நிறைவேறாத சோகத்தில் நாயகன் தற்கொலை முடிவுக்கே செல்கிறார். இந்நிலையில் திட்டமிட்ட சிங்கப்பூர் சலூன் கடை திறக்கப்பட்டதா? ஆர்.ஜே பாலாஜியின் தற்கொலை எண்ணம் ஏன்? என்பதே சிங்கப்பூர் சலூன் படத்தின் கதை ஆகும்.
வாய் என்னும் லவுட் ஸ்பீக்கருக்கு மட்டுமே வேலைக் கொடுத்து கோலிவுட்டில் கால் ஊன முயல்பவர் ரேடியோ ஜாக்கி ஆர்.ஜே.பாலாஜி, ஆனால் இப்படத்தில் நடிக்க ஏகப்பட்டிருந்த வாய்ப்பிருந்தும் வழக்கம் போல் பேந்த பேந்த விழிப்பதில் காட்டிய அக்கறையை ஆக்டிங்கில் காட்டவில்லை. என்றாலும் தன் ஆசைக்கு வீட்டாரின் ஒத்துழைப்பு கிடைக்தாதது, காதலியால் கைவிடப்படுவது, கார்ப்பரேட் வில்லனின் எதிர்ப்பை சமாளிப்பது என சீல பல் சீன்களுக்கு கிளிசரின் உதவியுடன் கண்ணீர் அருவியைக் கொட்டி சமாளித்து விடுகிறார். நாயகியின் அப்பாவாக நடித்திருக்கும் சத்யராஜின், நடிப்பும் அவரின் கேரக்டர் செய்யும் வேலைகளும் ஒட்டு மொத்த திரையரங்கையே சிரிப்பில் குலுங்க வைத்து விடுகிறது. ஹீரோயினாக நடித்திருக்கும் மீனாட்சி சவுத்ரி, ஆர்ஜே பாலாஜியின் நண்பராக நடித்திருக்கும் கிஷன் தாஸ், ஊரில் சலூன் கடை வைத்திருக்கும் லால், அப்பாவாக வரும் தலைவாசல் விஜய், வில்லனாக வாய்ப்பிருந்தும் ரொம்ப நல்லவராகி விடும் ரோலில் ஜான் விஜய், ரோபோ சங்கர், ஒய்.ஜி.மகேந்திரன் என ஏனைய வேடங்களில் நடித்திருப்பவர்கள் ஒவ்வொருவரும் தங்கள் பாத்திரத்தின் வலுவை உணர்ந்து மிகச் சரியான அளவில் தங்கள் பங்களிப்பை வழங்கி பாஸ் மார்க் வாங்கி விடுகிறார்கல்.. குறிப்பாக இளவயது பாலாஜி & சின்ன வயது கிஷன் தாஸாக வரும் பொடிசுகள் அடடே சொல்ல வைத்து விட்டார்கள்..!கெஸ்ட்ரோலில் வரும் அரவிந்த்சாமியின் வருகை ஸ்கீரின்பிளே-க்கு புதிய ரூட்டை கொடுக்கும் வகையில் அமைந்து கவர்கிறது. டைரக்டர் லோகேஷ் கனகராஜ் மற்றும் நடிகர் ஜீவாவின் சிறப்பு தோற்றமும் எடுபடுகிறது.
கேமராமேன் எம்.சுகுமார் வழக்கம் போல் கதைக்களத்தை மட்டும் பசுமையாக காட்டாமல் கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றையும் பசுமரத்தாணிப் போல ஆழமாக காட்டி படத்தின் குவாலிட்டியை ஒரு படி உயர்த்தி இருக்கிறார்.விவேக் - மெர்வின் இசையில் பாடல்கள் அடுத்தக் காட்சியின் போதே மறந்து போய் விடும் அளவே இருந்தது என்றாலும் அந்த செகண்டில் கேட்கும்படி இருக்கிறது. பின்னணி இசை ஜாவேத் ரியாஸ் பங்களிப்பு டபுள் ஓகே. ..
படத்தின் பலமே முதல் பாதி தான். இதில் காமெடி காட்சிகளை கலக்கலாகக் கோர்த்து ரசிகர்களை ஜாலி மூடில் கொண்டு செல்கிறார்கள் . ஆனால் இரண்டாம் பாதியின் திரைக்கதையில் கொஞ்சம் உப்பு தூக்கல், கொஞ்சம் காரம் தூக்கல், கொஞ்சூண்டு கசப்பும் எட்டிப் பார்க்கு விதத்தில் தேவையில்லாத மசாலாக்களைச் சேர்த்து சலூன் குவாலிட்டியை கொஞ்சம் மட்டுப் படுத்தி விட்டார் டைரக்டர். குறிப்பாக அந்த பில்டிங் இடிந்து விழும் சிஜி எனப்படும் விஷூவல் எஃபெக்ட் மற்றும் கிளிகள் கூட்டமாக வரும் காட்சிகள் எல்லாம் ரொம்பச் சின்ன பிள்ளைத்தனமாக இருந்ததால் படத்தின் செகன்ட் பார்ட்டே வெயிட் லாஸ் ஆகி விட்டது ..
ஆனாலும் ஒரு தமிழ் சினிமாவுக்குரிய ஃபார்முலாவில் உருவாகி இருக்கும் சிங்கப்பூர் சலூன் வழக்கம் போல் சில பல குறைகள் இருந்தாலும் ஆடியன்ஸ் அட்ராக்ஷன்தான்.
மார்க் 3.25 / 5