’சில நொடிகளில்’- விமர்சனம்!
டீக் கடைகளில் வாங்கப்படும் சூடான வடை அல்லது பஜ்ஜியை பிழிந்தெடுக்க உபயோகப்படுத்தப்படும் நாளிதழ்களில் அன்றாடம் கள்ளக்காதல் குறித்த செய்தியும் ஒரு கொலையும் வாசகர்களால் அதிகம் படிப்பதற்கென்றே இடம் பெற்றிருக்கும். அந்த கள்ளக்காதல் ஏற்படுத்தும் கிளுகிளுப்புக்களிலிருந்து படித்தவர் முதல் பாமரர் வரை தப்புவதில்லை. பரபரப்பிலும் கவர்ச்சியிலும் நிலை கொள்ளும் சிந்தனை அதில் கவிந்திருக்கும் குடும்ப உறவின் துயரம் பற்றி ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. கள்ளக்காதல் செய்தியில் ஊடுறுவும் ஆண்மனம் தன்னையும் அந்தக் காதலனாக கற்பனை செய்யவும் தவறுவதில்லை. இப்படியான சூழலில் இந்த கள்ளக்காதல் அதை தொடர்ந்து நடக்கும் ஒரு மரணமும் அதை சுற்றி நடக்கும் சம்பவங்களை சஸ்பென்ஸ் என்ற பெயரில் நகர்த்தி செல்லும் டைரக்டர் வினய் பரத்வாஜ், இறுதியில் யூகிக்க முடியாத ஒரு திருப்பத்தை வைத்து கவனம் ஈர்ப்பதோடு, கள்ளக்காதலில் ஈடுபடும் கணவன்களுக்கு ஷாக் கொடுத்து கவர முற்பட்டிருக்கிறார்கள்.
அதாவது ஹீரோ ராஜு (ரிஷி.ரிச்சர்ட்) வேதா (கீதா) தம்பதிகள் சந்தோஷமாக வாழ்ந்து வருகின்றனர். அழகு சிகிச்சை டாக்டரான ராஜூவிடம் சிகிச்சைக் காக வருகிறார் மாயா (யாஷிகா). இதில் இருவரும்.நெருக்கமாக பழகுகின்றனர். ஒரு சமயம் போதை மாத்திரை எடுத்துக் கொண்ட மாயா இறக்கிறார். அவரை மரப்பெட்டியில் அடைத்துக் கொண்டு சென்று குழி தோண்டி புதைக்கிறார் ராஜூ. மாயாவின் உறவுக்கார பெண் ராஜூவை மிரட்டுகிறார். கேட்கும் பணம் தராவிட்டால் மாயா விவகாரத்தை அம்பலப்படுத்து வேன் என்கிறார். இதில் பயந்த ராஜூ விவகாரத்தை மனைவி வேதாவிடம் சொல்கிறார். ஆனால் இதில் ஒரு மர்மம் இருப்பது பின்னர்தான் தெரிய வருகிறது. இறந்ததாக கருதப்பட்ட மாயா உயிரோடு வருகிறார். அதன் பிறகு நடப்பது என்ன?. இறந்து போன மாயா உயிரோடு வருவது எப்படி? என்ற கேள்விகளுக்கு ஷாக்கான விடை தருகிறது கிளைமாக்ஸ்.
ஜாதி மற்றும் சர்ச்சை ரீதியாக உருவான திரவுபதி, ருத்ரதாண்டவம் படங்களில் நடித்த ரிஷி ரிச்சர்ட் கொஞ்சம் புது ட்ராக்கில் சஸ்பென்ஸ் த்ரில்லர் படத்தில் நடித்திருக்கிறார். ஸ்டைலான கெட்டப்பில் வரும் ரிச்சர்ட், பயம், பதட்டம், குற்றவுணர்ச்சி, இயலாமை, காதல் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்தக் கூடிய பலமான கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்து கவர்கிறார்
ரிச்சர்ட் ரிஷியின் மனைவியாக நடித்திருக்கும் புரொடியூஸர் புன்னகை பூ கீதா, கணவர் பற்றி தெரிந்தாலும் கோபம் கொள்ளாமல் அதை சரியான முறையில் கையாண்டு அவருக்கு பாடம் புகட்டுவது புத்திசாலித்தனம். முதல் பாதியில் கணவனுடன் சண்டை, ஆட்டம் பாட்டம் என்று இருப்பவர், இரண்டாம் பாதியில் தனது இன்னொரு முகத்தை காட்டும் போது நடிப்பில் மிரட்டியிருக்கிறார். யாஷிகா ஆனந்த் ஏற்றுக் கொண்ட மாடல் அழகி கேரக்டருக்கு தேவையான கிளாமர் & கவர்ச்சியுடன் நடித்திருக்கிறார். உடலில் மட்டும் இன்றி தனது வார்த்தைகளிலும் கவர்ச்சியை வெளிப்படுத்தி, கள்ளக்காதலிக்கான வேடத்தை நேர்த்தியாக செய்திருக்கிறார்.
கேமரா மற்றும் இசை எல்லாம் ஓ கே என்றாலும் கள்ளக் காதல், துரோகம், பிளாக்மெயில் என கதை குறுகிய வட்டத்துக்குள் சிக்கி விட்டதாலும் க்ளைமாக்ஸ் காட்சிகளான கடைசி 15 நிமிடங்கள் மட்டுமே சுவாரஸ்யமாக யோசித்ததால் ஜஸ்ட். ஷார்ட் ஃபிலிமாக எடுக்கவேண்டியதாகவே கதையை வள வளவென்று இழுத்து கடுபேற்றி அனுப்புகிறார்கள்.
மொத்தத்தில் சில நொடிகளில் - சிலருக்கு மட்டுமே திருப்தி கொடுக்கும் படம்
மார்க் 2.5/5.