For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

குப்பை மேலாண்மை உட்கட்டமைப்புகளை மூடுவதா?

01:36 PM Mar 04, 2025 IST | admin
குப்பை மேலாண்மை உட்கட்டமைப்புகளை மூடுவதா
Advertisement

சென்னைப் பெருநகர மாநகராட்சி தன்னிடமிருக்கும் 168 உரமாக்கும் நிலையங்களை மூட முடிவு செய்திருப்பதாக வெளியான செய்திகள் கடும் அதிர்ச்சியளிக்கிறது. இத்தோடு, மட்காதக் கழிவுகளிலிருந்து மறுசுழற்சிக்கான பொருட்களைப் பிரித்தெடுக்கும் 88 ‘Material recover facility’ களையும் மூடுவதாக மாநகராட்சி அறிவித்திருக்கிறது.

Advertisement

நம் கழிவுகளில் சரிபாதி மட்கும் கழிவுகளாக இருக்கும் நிலையில், திறன்மிக்கத் திடக்கழிவு மேலாண்மையில் மிக முக்கியப் பங்கு வகிப்பவை ‘Micro Composting Centers’ (MCC) எனப்படும் அங்ககக் கழிவுகளை மட்கச் செய்து உரமாக்கும் நிலையங்கள்தான். சென்னையில் உருவாகும் மட்கும் கழிவுகளை மட்கச் செய்ய முழுமையான உட்கட்டமைப்பை மாநகராட்சி இன்னும் உருவாக்காத நிலையில் தற்போது செயல்பாட்டிலிருக்கும் கட்டமைப்புகளை மூடுவது மிகவும் கண்டனத்திற்குரியது. கடுமையான தூர்நாற்றம் வீசுவதால் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று இம்முடிவை எடுத்திருப்பதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. MCC நிலையங்களை திறம்படக் கையாண்டு அங்குள்ள சிக்கல்களைக் களைய முயல்வதே சரியானத் தீர்வாக இருக்கும்.

Advertisement

மட்கும் கழிவுகளை, அவை உருவாகும் இடங்களுக்கு அருகாமையிலேயே மட்கச்செய்து உரமாக்குவதே மிகவும் எளிமையான, பாதுகாப்பான, கழிவை உரமாக மாற்றுவதன்மூலமாக பொருளாதார அளவில் பயன்தரக்கூடிய, வேலை வாய்ப்புகளையும் அதிகரிக்கும் வழிமுறையாக இருக்கிறது. சரியான திட்டமிடல், முறையான உட்கட்டமைப்புகள், பராமரிப்பு மற்றும் மேலாண்மை, இவற்றுக்கான பணியாளர்கள் இல்லாமல் போகும்போது இவை அருகாமையில் வசிப்போருக்கு அசவுகரியங்களை உருவாக்குவதுண்டு. தூர்நாற்றம் வீசுகிறது என்று மக்கள் புகாரளிக்கிறார்கள் என்றால் இதன் போதாமைகளைச் சரிசெய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமேயொழிய மூடுவது தீர்வாகாது. வடசென்னை மக்கள் மற்றும் சூழலியலாளர்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி அபாயகரமான குப்பை எரிவுலைகளை நிறுவ முயலும் மாநகராட்சியானது, மேற்கண்ட உட்கட்டமைப்புகளை மூடுவதற்காகச் சொல்லும் காரணம் முரண்பட்டதாக இருக்கிறது.

மேலும் சரியாக வகைபிரித்துக் கையாளப்படும் கழிவுகளில் நெகிழி உள்ளிட்ட மட்கும் கழிவுகள் எந்த நெடியையும் உருவாக்குவதில்லை. பழைய பொருட்களை சேகரித்து விற்பனை செய்யும் ஆயிரக்கணக்கான தனியார் வளாகங்கள், அவற்றை சிறப்பாகச் சேமித்து வைத்துக் கையாளும்போது, மாநகராட்சியானது இவை எளிதில் தீப்பிடிக்கும் வாய்ப்புள்ளது என்று குறிப்பிடுவதும் ஏற்கும்படியாக இல்லை.அப்படி மூடுவதுதான் ஒரே தீர்வென்றால் இம்மையங்கள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றிதான் செயல்பட்டனவா என்பதை இத்துறையில் நிபுணம் பெற்ற ஒரு குழுவை நியமித்து முதலில் ஆய்வு செய்திருக்க வேண்டும். அப்படி ஏதேனும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தால் சென்னை மாநகராட்சி அவ்வாய்வை பொதுவெளியில் வெளியிட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

எவ்வித ஆய்வுகளும் மேற்கொள்ளாமல் பல ஆண்டுகளாக மக்கள் வரிப்பணத்தால் உருவாக்கப்பட்ட பொருட்செலவுமிக்க கட்டமைப்புகளை மூடுவது சரியான முடிவாகாது என்பதை சென்னை மாநகராட்சி கருத்தில்கொள்ள வேண்டும். கவலைதரும் இச்செய்திகளோடு கூடவே, கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் குப்பை எரிவுலைத் திட்டத்தை உடனடியாக கொடுங்கையூரில் நிறுவும் பணிகளை சென்னை மாநகராட்சி துரிதப்படுத்துவதையும் சேர்த்துப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. பாதுகாப்பான குப்பை மேலாண்மை நடைமுறைகளை முடக்குவதே அபாயகரமான குப்பை எரிவுலையைக் கொண்டு வருவதற்காகத்தானோ என்ற அச்சம் நமக்கு ஏற்படுகிறது. இந்த அறிவிப்பின்மூலமாக நாங்கள் ஏற்கனவே சொல்லிவந்த குப்பை எரிவுலைகளுக்கு எதிரான கருத்துகள் உண்மையாகியிருக்கின்றன.

1. குப்பை எரிவுலைகள், திறன்மிக்க – சூழலுக்கும் மக்களுக்கும் பாதுகாப்பான கழிவு மேலாண்மை நடைமுறைகளுக்கும் எதிரானவை.

2. குப்பை எரிவுலைகள் மறுசுழற்சி செய்யத்தக்கக் கழிவுகளை எரித்து அழிப்பதன்மூலமாக இதனை நம்பியிருக்கும் ஆயிரக்கணக்கான எளிய மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கின்றன.

3. கழிவிலிருந்து மின்சாரம் எடுக்கும் திட்டங்கள் தொடர்ச்சியாக அதிக எரிதிறன் கொண்ட கழிவுகளின் தேவையை உள்ளடக்கியவை. ஆகவே, அவை குப்பைகள் உருவாவதைக் குறைக்கும் மாற்று உட்கட்டமைப்புகளை ஒழிக்கின்றன.

அண்மையில் உச்சநீதிமன்றமானது குப்பை எரிவுலைகளின் சூழல் மற்றும் உடல்நலப் பாதிப்புகள் குறித்து அறிக்கையளிக்க மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தைக் கேட்டிருக்கும் சூழலில், இத்திட்டத்தை மாநகராட்சி உடனடியாக மறுபரிசீலனை செய்ய வேண்டியது அவசியம். குஜராத்தில் அமையவிருந்த குப்பை எரிவுலைகளுக்கு 40 மில்லியன் டாலர்கள் நிதியுதவி அளிக்கவிருந்த உலக வங்கி இதிலிருந்து பின்வாங்கியிருப்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.

AanthaiReporter Council-AGENDA-1-117-27.02.2025

கடுமையான சூழல் மாசுபாட்டையும் புற்றுநோய், கருச்சிதைவு, சுவாசக்கோளாறுகள் உள்ளிட்டத் தீவிரமான உடல்நலப் பாதிப்புகளையும் ஏற்படுத்தவல்லவை குப்பை எரியுலைகள். சூழல் நீதிக்கும் காலநிலை மாற்றத்திற்கெதிரான நடவடிக்கைகளுக்கும் முரணான, பெரும் பொருட் செலவுமிக்க, வேலைவாய்ப்புகளை அழிக்கும் இக்குப்பை எரிவுலை அமைக்கும் முடிவைத் தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்.

சென்னையில் மட்டுமின்றி, தமிழ்நாட்டின் எந்த மூலையிலும் இத்திட்டத்தை அரசு செயல்படுத்தக் கூடாது என்றும் திறன்மிக்க மற்றும் பரவலாக்கப்பட்டக் குப்பை மேலாண்மை உட்கட்டமைப்புகளை மூடும் முடிவையும் கைவிட வேண்டுமென்று பூவுலகின் நண்பர்கள் சார்பில் தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை விடுக்கிறோம்.

தொடர்புக்கு
ஜீயோ டாமின்
7708020668

Tags :
Advertisement