பனி கண்டமான அண்டார்டிகாவின் மிக உயரமான வின்சன் சிகரத்தில் ஏறி கேரள வீரர் ஷேக் ஹசன்கான் சாதனை!- வீடியோ!
அண்டார்டிகா பனிக்கட்டியால் மூடப்பட்ட கண்டம். இந்த அண்டார்டிகா பூமியின் தென்முனையை சூழ்ந்திருக்கும் உலகின் 7-வது கண்டம். பூமியிலேயே மிகவும் குளிர்ந்த பகுதி இதுதான். புவியின் தென்முனையில் அமைந்திருப்பதனால் இப்பகுதிக்கு சூரியனின் வெப்பம் மிகக் குறைந்த அளவே வந்து சேர்கிறது.இதன் காரணமாக அண்டார்டிகா முழுவதும் ஏறக்குறைய பனிக்கட்டியினால் மூடப்பட்டுள்ளது. ஒரு வருடத்தில் 6 மாதங்கள் சூரியனின் வெளிச்சமே இங்கு இருக்காது.. ஆண்டு முழுவதும் 200 மில்லிமீட்டர் அளவு மட்டுமே மழை பெய்யும் பனி பாலைநிலம் அண்டார்டிகா. இங்கே நிரந்தர மக்கள் குடியிருப்பு எதுவும் கிடையாது.வெவ்வேறு உலக நாடுகளின் ஆய்கூடங்கள் மட்டுமே இருக்கின்றன. புவியில் உள்ள நன்னீரில் கிட்டத்தட்ட 70 வீதம் இங்கே உள்ளது. ஆனால் மக்களுக்கு பயன்படவில்லை.அண்டார்டிகாவில் ஏறத்தாழ 5 ஆயிரம் மீட்டர் (16 ஆயிரம் அடி) அளவுக்கு தரையில் ஆழ்துளையிட்டால் தான் மண்ணை பார்க்க முடியும். ஏனெனில் 98 விழுக்காடு பனிப்பாறைகளால் மூடப்பட்டுள்ளது. பலகோடி ஆண்டுகளாக உருகாத பனிப்பாலைவனமாக அண்டார்டிகா விளங்குவதால் எப்பொழுதும் தாங்க முடியாத குளிர்ச்சியே அங்கு இருக்கும். இப்படியாப்பட்ட அண்டார்டிகாவின் மிக உயரமான சிகரத்தில் ஏறி கேரள வீரர் ஷேக் ஹசன்கான் சாதனை படைத்து இருக்கிறார்.
அண்டார்டிகா 14.5 மில்லியன் சதுர கிலோ மீட்டர் பரப்பளவையும் கொண்டு, 5-வது பெரிய கண்டமாகவும் திகழ்கின்றது. உலகிலேயே கொடுமையான 89 டிகிரி செல்சியல் குளிர்நிலவுவதால் அண்டார்டிகாவில், எந்தவித உயிரினங்களும் நிலையாக வாழ்வதுமில்லை. துணிச்சலாக சென்ற பல சுற்றுலா பயணிகள் உயிரை இழந்து இருக்கிறார்கள்.அண்டார்டிகாவில் வின்சன் மாஸிப் என்ற 4892 மீட்டர் உயரமுள்ள மலை சிகரம் உண்டு. ஆனால் அது நமது எவரஸ்ட் சிகரத்தை விட பாதி உயரம்தான்.. அதே போல் அங்கே ரோஸ் ஐலன்ட் எனும் தீவில் மவுண்ட் எருபஸ் என்ற எரிமலையும் இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் அங்கே 70 அழகிய குடிநீர் ஏரிகளும் உள்ளன. கண்ணுக்கு எட்டிய தூரம் ஒரே பனிப்படலமாகக் காட்சியளிக்கும் அண்டார்டிகா, முதலில் பார்ப்பதற்கு மகிழ்ச்சியைதந்தாலும் தொடர்ந்து தாங்க முடியாத வெறுப்புணர்ச்சியை ஏற்படுத்தும்.திடீர் திடீரென அண்டார்டிகாவில் 300 கிலோ மீட்டர் வேகத்தில் பனிப்புயல் வீசும். அண்டார்டிகாவில் குளிரால் ஏற்படும் ஆபத்தை விட பனிப்புயலால் விளையும் ஆபத்தே அதிகம் என்று சொல்லலாம்.
இச்சூழலில் கேரளாவை சேர்ந்தவர் ஷேக் ஹசன்கான் (36). மாநில அரசு ஊழியரான இவர் தனது ஓய்வு நாட்களில் உலகின் மிக உயர்ந்த மலை சிகரங்களில் ஏறி சாதனை செய்து வருகிறார். அந்தவகையில் எவரெஸ்ட், தெனாலி (வட அமெரிக்கா), கிளிமாஞ்சாரோ (ஆப்பிரிக்கா), எல்ப்ரஸ் (ஐரோப்பா) ஆகிய சிகரங்களில் ஏற்கெனவே ஏறியுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக முற்றிலும் பனி சூழ்ந்திருக்கும் அண்டார்டிகாவில் உள்ள மிக உயரமான சிகரமான வின்சனில் ஏற முடிவு செய்தார். இதற்காக அங்கு சென்ற ஷேக் ஹசன்கான், கடும் சவால்களை கடந்து வின்சன் சிகரத்தில் ஏறி இந்திய கொடியை பறக்க விட்டுள்ளார்.
உறைய வைக்கும் குளிரையும் பொருட்படுத்தாமல் வின்சன் சிகரத்தில் இந்திய கொடியை பறக்கவிட்டு நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள ஷேக் ஹசன்கானுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.