டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிரான தனித் தீர்மானம்: சட்டசபையில் நிறைவேற்றம்
மதுரை டிஸ்ட்ரிக் மேலூர் வட்டம் நாயக்கர்பட்டி கிராமத்தில் இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்திடவும், மாநில அரசின் அனுமதியின்றி எந்த சுரங்க உரிமத்தையும் வழங்கக்கூடாது என்று மத்திய அரசை வலியுறுத்தியும் தமிழக சட்டசபையில் கொண்டு வரப்பட்ட தனித்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டியில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்யவும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி, சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக்கூடாது என்றும், மத்திய அரசை வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டு வந்தார். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டசபையில் தீர்மானத்தை முன்மொழிந்தார்.
அப்போது துரைமுருகன் பேசியது:–
மாநில அரசுகளின் அனுமதியின்றி எந்த சுரங்க அனுமதியையும் வழங்கக் கூடாது. சுரங்கத்திற்கு தேர்வான பகுதி ஏற்கனவே பல்லுயிர் பெருக்கத் தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுரங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசும், மக்களும் ஏற்க மாட்டார்கள். அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
இதனையடுத்து சட்டசபையில் தீர்மானம் மீது விவாதம் நடத்தப்பட்டது. இந்நிலையில் சட்டமன்றத்தில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிரான தனித் தீர்மானம் மீது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பினார். அவர் கேட்ட கேள்விக்கு அவை முன்னவர் துரை முருகன் பதிலளித்து பேசினார். இதனால் சட்டசபையில் காரசார விவாதம் நடைபெற்றது.
எடப்பாடி பழனிசாமி பேசுகையில், மக்கள் போராட்டத்திற்கு பின் வேறு வழியின்றி பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதியுள்ளார். ஆரம்பக் காலத்திலேயே ஒப்பந்தபுள்ளி கோரும் போதே, இந்த விவரத்தை மத்திய அரசுக்கு தெரிவித்து இருந்தால், ஏலத்தை தடுத்து இருக்கலாம்.முதல்வர், அமைச்சர் எழுதிய கடிதத்தின் முழு விபரம் வெளியிடப் படவில்லை. தமிழக மக்களை பாதிக்கும் திட்டங்களை தி.மு.க. உறுப்பினர்கள் தடுப்பதில்லை. பார்லிமென்டில் தி.மு.க. எம்பிக்கள் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை.மாநில உரிமைகள் பறிபோகும் போது, தி.மு.க. எம்.பி.,க்கள் ஏன் அழுத்தம் தரவில்லை. டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் 10 மாத காலமாக தி.மு.க. அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. நீங்கள் தனித்தீர்மானம் கொண்டு வருவீர்கள், அதற்கு நாங்கள் விளக்கம் கேட்க கூடாதா? அதுபற்றி நாங்கள் பேசக்கூடாதா? தலையாட்டி, தீர்மானத்தை ஆதரிக்க வேண்டுமா? 10 மாதமாக என்ன செய்தீர்கள்? அப்போது ஏன் எதிர்க்கவில்லை? முழு விவரங்களை தராமல் தீர்மானம் போட்டல் நாங்கள் ஆமாம் போட வேண்டுமா? முதல்வர் எழுதிய கடிதத்தில் என்ன அம்சம் இருந்தது என தெரியப்படுத்தவில்லை. சட்டம் நிறைவேறிய பின் தீர்மானம் கொண்டு வந்தது எதற்காக? மனித உரிமையை காக்க பார்லிமென்டில் உரிய அழுத்தம் தராமல் என்ன செய்தீர்கள்? மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுங்கள் என்றார்.
இதற்கு அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்து பேசுகையில்,''எடப்பாடி பழனிசாமி திரும்பத் திரும்ப தவறான கருத்தை பதிவு செய்கிறார். மீண்டும் மீண்டும் தவறான கருத்தை பதிவிடக் கூடாது. சுரங்கத்துக்கு ஒப்பந்தம் விடுவதற்கான சட்டத்தில் மத்திய அரசு தானே ஒரு திருத்தத்தை செய்துவிட்டது. யாரையும் கேட்கவில்லை. சட்டத்தைத் திருத்திவிட்டு மத்திய அரசு என்ன சொல்கிறது என்றால், சுரங்கத்துக்கான ஏலம் விடும் அதிகாரம் மத்திய அரசுக்கே உள்ளது. மேலும், மத்திய அரசு தேர்வு செய்யும் ஏலதாரருக்கு சுரங்கத்தை குத்தகை விடும் அதிகாரம் மட்டுமே மாநிலத்துக்கு உள்ளது என்று கூறியிருக்கிறது.எனவே, இந்த சட்டத்தின் மூலம் மாநில அரசின் சுயமரியாதைக்கு மத்திய அரசு சவால் விட்டுள்ளது. நாங்கள் தேர்ந்தெடுத்துவிட்டோம், அவர்களுக்கு சுரங்கத்தைக் கொடுங்கள் என்றால், மத்திய அரசு என்ன எஜமானர்களா? தமிழக அரசு என்ன கைகட்டி நிற்கும் வேலைக்காரனா? என்றார்.தொடர்ந்து, சுரங்கம் அமைக்கப்படும் இடத்தின் விவரங்களை புள்ளிவிவரத்தோடு விளக்கம் கொடுத்து பதில் அளித்தோம். ஆனால், அதையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, சுரங்கத்துக்கு மத்திய அரசு ஏலம் விட்டது எனவும் சொன்னார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், தி.மு.க. உறுப்பினர்கள் அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு எதிராக நாடாளுமன்றத்தில் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். நாடாளுமன்றத்தில் கனிமவள மசோதா நிறைவேறும் போது, தி.மு.க. எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் தவறான தகவலை அவையில் பதிவு செய்யக் கூடாது. எங்களின் ஆதரவுடன் அந்த சட்டம் நிறைவேறவில்லை என்பதை அவர் தெரிந்துகொள்ள வேண்டும்.தி.மு.க. அரசு மக்களின் எந்த பிரச்சினையிலும் அலட்சியமாக இருக்கவில்லை. இந்த அரசை பொருத்தவரையில் அரிட்டாபட்டி சுரங்கத்திற்கு அனுமதி வழங்க மாட்டோம். உறுதியாக சொல்கிறேன். நான் முதலமைச்சராக இருக்கிறவரை நிச்சயமாக மத்திய அரசு இந்தத் திட்டத்தை கொண்டுவர முடியாது. அது வந்தாலும் தடுத்தே தீருவோம் என்றார்.
இதனையடுத்து அமைச்சர் துரைமுருகன் பேசுகையில், சட்டத்தை திருத்தி டங்ஸ்டன் ஏலம் விடும் அதிகாரத்தை மத்திய அரசு எடுத்தது. தவறான செய்திகளை திருப்பி திருப்பி பதிவு செய்யக்கூடாது. மத்திய அரசுக்கு கைகட்டி நிற்கும் வேலைக்காரனா மாநில அரசு. மத்திய அரசு மாநில அரசின் சுயமரியாதைக்கு சவால் விடுத்தது. ஆண்டான் அடிமை மனநிலையில் மத்திய அரசு செயல்படுகிறது. டங்ஸ்டன் சுரங்கத்தை தடுக்க மாநில அரசு அனைத்து நடவடிக்கையும் எடுத்தது. ஏலம், குத்தகை உரிமையை மாநில அரசுக்கு அளிக்க கோரி கடிதம் எழுதினேன் என்றார். அமைச்சர் கடிதம் எழுதியது எங்களுக்கு எப்படி தெரியும் என எடப்பாடி எதிர் கேள்வி எழுப்பினார்.நீங்கள் முதலமைச்சராக இருந்தபோது எத்தனை கடிதத்தை வெளியிட்டீர்கள். கடிதங்களில் இருந்த விபரங்களை அவையில் கூறி விட்டேன் என்று துரைமுருகன் கூறினார்.
பின்னர் மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிராக சட்டசபையில் கொண்டு வரப்பட்ட தனித்தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.