தாய்ப்பால் விற்பனையா?-இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் கடும் எச்சரிக்கை
பாலூட்டி உயிரினங்களுக்குக் கிடைக்கும் முதல் ஊட்டச்சத்து தாய்ப்பால் மட்டுமே. மனித இனமும் இதற்கு விதிவிலக்கல்ல.தாய்ப் பாலுக்கு, பெரும் மகத்துவம் உண்டு. ஒவ்வொரு குழந்தைக்கும், பிறந்த முதல் ஆறு மாதங்களுக்கு கண்டிப்பாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பது, உலகம் முழுவதும் உள்ள இளம் தாய்மார்களுக்கு, டாக்டர்கள் கொடுக்கும் அறிவுரை.விட்டமின், நோய் எதிர்ப்பு சக்தி, எளிதில் ஜீரணமாகும் சக்தி உள்ளிட்ட, குழந்தைகளுக்கு தேவையான, அனைத்து ஊட்டச்சத்துகளும் தாய்ப்பாலில் இருப்பது தான், டாக்டர்களின் இந்த அறிவுரைக்கு காரணம். தாய்ப் பாலுக்கு நிகரான சத்து, குழந்தைகளுக்கு வேறு எதிலும் கிடைப்பது இல்லை. அந்த மகத்துவத்தைச் சுட்டிக் காட்டி அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மேற்கத்திய நாடுகளில் மட்டுமின்றி நம் இந்தியாவிலும் தாய்ப்பாலை விற்பனை கல்லா கட்டுவோர் கும்பல் அதிகரித்துக் கொண்டே போகிறது. நம் நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பெண்களிடமிருந்து பெறப்பட்ட மனித தாய்ப்பாலை, விற்பனை நோக்கங்களுக்காகத் தூள் வடிவில் பதப்படுத்தும் பல நிறுவனங்கள் உருவாகியுள்ளன.இன்ஸ்டாகிராம் உட்பட ஆன்லைன் மூலம் தாய்ப்பால் விற்பனை தற்போது அமோகமாக நடைபெற்று வருவதாக சமீபகாலமாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் தான் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
அதாவது தாய்ப்பாலை பதப்படுத்தவோ அல்லது விற்கவோ அங்கீகாரம் அளிக்கவில்லை. எனவே, அதற்கான உரிமங்களை வழங்குவதைத் தவிர்க்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) உத்தரவிட்டுள்ளது.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வெளியிட்டுள்ள அறிவுரையில், “`தாய்ப்பால் மற்றும் அதன் தயாரிப்புகளை வணிகமயமாக்குவது தொடர்பாக பல்வேறு பதிவுசெய்யப்பட்ட சங்கங்களிலிருந்து பல அனுமதிப் படிவங்கள் வந்திருக்கின்றன. பொதுச் சுகாதார பாலூட்டும் மையங்கள் (LMC) வழிகாட்டுதல்களின்படி, நன்கொடையாளர் தாய்ப்பாலை எந்தவொரு வணிக நோக்கத்திற்கும் பயன்படுத்த முடியாது. குழந்தைகளுக்கு மட்டுமே இது வழங்கப்பட வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய பெண்களிடமிருந்து பெறப்பட்ட மனித தாய்ப்பாலை, விற்பனை நோக்கங்களுக்காகத் தூள் வடிவில் பதப்படுத்தும் பல நிறுவனங்கள் உருவாகியுள்ளன.
தாய்ப்பால் மற்றும் அதன் தயாரிப்புகளின் வணிகமயமாக்கல் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. தாய்ப்பாலை வணிக நோக்கத்தில் பயன்படுத்துவது விதி மீறலாகும். FSSAI, உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைச் சட்டம், 2006 மற்றும் அதன் தொடர்புடைய விதிமுறைகளின் கீழ் எந்தவொரு மீறலும் தண்டனைக்குரிய நடவடிக்கைகளுக்கு வழிவகுக்கும்.
நியோலாக்டா எனும் இங்கிலாந்து நாட்டை சேர்ந்த நிறுவனம் பெங்களூரில் செயல்பட்டுவருகிறது. இந்த நிறுவனம் மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்திடமிருந்து உரிமம் பெற்று, தாய்ப்பாலை வணிகமயமாக்குவதில் ஈடுபட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. பி.பி.என்.ஐ-யின் புகாரைத் தொடர்ந்து அந்த உரிமம் ரத்து செய்யப்பட்டது. மேலும், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டிருக்கிறது." எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.