அனில் அம்பானி பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்யத் தடை!
அனில் அம்பானி பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்ய 5 ஆண்டுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் ரூ. 25 கோடி அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி.
நம் நாட்டின் டாப் பில்லியனரும், தொழிலதிபருமான அனில் அம்பானியின் நிறுவனங்கள் ஒவ்வொன்றாக திவாலாகி நஷ்டத்தில் மூழ்கி வருகின்றன. அதனால் அவருக்கு மட்டுமின்றி, முதலீட்டாளர்களுக்கும் பெரும் நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது.னில் அம்பானி மற்றும் அவருடன் தொடர்புடைய நிறுவனங்கள் மீது கடன்கள் ஒப்புதல் வழங்குவதில் விதிமீறல்கள், நிதி முறைகேடுகள் உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்தன. இந்த புகார்கள் குறித்து செபி தீவிர விசாரணை மேற்கொண்டது.
இதில், அனில் அம்பானி மற்றும் அவரது முக்கிய சகாக்கள் பல்வேறு நிதி முறைகேட்டில் ஈடுப்பட்டிருந்தது தெரியவந்தது என்று செபி கூறியுள்ளது. குறிப்பாக, கடன் என்ற பெயரில் அனில் அம்பானியுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு முறைகேடாக நிதி வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ள செபி, இது தீவிரமான விதிமீறல் என்றும் தெரிவித்துள்ளது.
எனவே இதற்கு தண்டனையாக அனில் அம்பானி, அவரது நிறுவனத்தின் மூன்று முக்கிய உயரதிகாரிகள் மற்றும் அவருடன் தொடர்புடைய 23 நிறுவனங்கள், ஐந்தாண்டுகளுக்கு பங்குச் சந்தை வர்த்தகத்தில் ஈடுபட தடைவிதிக்கப்படுகிறது. இந்த உத்தரவு பிறப்பிக்கப்படும் தேதியிலிருந்து இத்தடை அமலுக்கு வருகிறது. இந்த காலக்கட்டத்தில் அம்பானி உள்ளிட்ட நபர்களும், குறிப்பிட்ட நிறுவனங்களும் பங்குகளை வாங்கவோ, விற்கவோ கூடாது. மேலும் பங்குச் சந்தை வர்த்தகத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ இவர்கள் ஈடுபடக்கூடாது என்றும் தனது 222 பக்க இறுதி உத்தரவில் செபி தெரிவித்துள்ளது.
மேலும், ரிலையன்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் லிமிடெட் (RHFL) நிறுவனம் மூலம், மோசடி திட்டத்தை அனில் அம்பானி செயல்படுத்தியுள்ளதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதற்காக, அனில் அம்பானிக்கு 25 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படுவதாகவும் செபி தனது உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.