For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

செபியும், அம்பானியும்- சோற்றில் மறைந்த பூசணிகள்!

07:52 PM Aug 25, 2024 IST | admin
செபியும்  அம்பானியும்  சோற்றில் மறைந்த பூசணிகள்
Advertisement

ரு வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனத்தை ஆரம்பிக்கிறார்கள் . அதற்கு ஆயிரக்கணக்கான கோடிகளில் முதலீடு பெறப்படுகிறது , நிறுவனத்தில் பெயர் மீது நம்பிக்கை வைத்து நல்ல முதலீடு வந்து சேர்கிறது. வங்கிகளிடமும் தாராளமாக கடன் வாங்குகிறார்கள் . ஆனால் அப்படி வாங்கப்பட்ட பணம் , உண்மையாக வீட்டுக்கடன் தேவைப்படுவோருக்கு கடனாக அளிக்காமல் தங்களுக்கு சாதகமான நிறுவனங்களுக்கு அளிக்கிறார்கள் . அதில் பல நிறுவனங்கள் பெயரளவில் மட்டுமே இயக்குபவை , சில நஷ்டத்தில் இயங்குபவை . மொத்தத்தில் வாங்கின கடனை திருப்பி அளிக்கும் நிலையில் இல்லாதவை .அந்த நிறுவனம் மொத்தம் இப்படி கடனாக வழங்கிய 14,500 கோடிக்கும் அதிகமான தொகையில் , கிட்டத்தட்ட 12,500 கோடி இப்படி சுற்றி வளைத்து தங்களுடையே ஆட்களுக்கே கொடுத்துக்கொள்கிறார்கள் . இதை PILE என்கிறார்கள் 'potentially indirect linked entities' . எளிமையாக சொல்ல வேண்டுமானால் நாமே கடன் கொடுத்து நாமே வாங்கிக்கொள்ளும் 'நமக்கு நாமே திட்டம்'.

Advertisement

2018 /2019 வாக்கில் நடந்த விஷயம் இது . இதில் கிட்டத்தட்ட 2700 கோடி ஏற்கனவே வாராக்கடன் என்று கழித்துவிட்டார்கள் . இன்னும் எவ்வளவு இப்படி கழிக்கப்படுமோ தெரியவில்லை. வெளியே இருந்து வந்து இந்த கணக்கை பார்த்த ஆடிட்டர்கள் , திகைத்துப் போய் கையெழுத்திட மறுத்துவிட்டார்கள் . இதை நாங்கள் ஆடிட் செய்ய முடியாது என்று விலகிக்கொள்ள அப்படித்தான் இந்த 'குட்டு' வெளிப்பட்டது. இது குறித்து நான் 2022 ல் எழுதினேன் , அப்போதே செபி இதை விசாரித்துக்கொண்டிருந்தது. இப்போது செபி தலைவர் மீதே conflict of interest புகார் எழுந்திருக்கிறது. அவரே நியாயப்படி பதவி விலகியிருக்க வேண்டும் ஆனால் அதுவே இன்னுமே இழுபறியில் உள்ளது .

Advertisement

சரி அது ஒருபுறம் இருக்க , இப்போது இந்த விசாரணையின் முடிவு என்னவென்று பார்த்தால் இந்த நிறுவனத்தின் சேர்மன் உட்பட அங்கு பணிபுரிந்த பல மூத்த அதிகாரிகளுக்கு செபி 'பைன்' போட்டிருக்கிறார்கள் . இன்னும் 5 வருடங்களுக்கு ஸ்டாக் மார்கெட் பக்கமே போகக்கூடாது என்று தடை வேறு . அந்த குரூப் சேர்மன் தான் அனில் அம்பானி , அந்த நிறுவனம் Reliance Housing Finance Limited (RHFL). அனில் அம்பானிக்கு செபி 25 கோடி பைன் போட்டிருக்கிறது. அதே போல மூத்த அதிகாரிகளுக்கும் அதே அளவு பைன் என்று மொத்தம் 600 கோடிக்கு மேல் பைன் போட்டிருக்கிறது. சம்பளத்திற்கு வேலை செய்வோர் இந்த பைன் கட்ட எங்கிருந்து பணம் வரும் என்பதெல்லாம் தெரியவில்லை.

இது குறித்த செபியின் தீர்ப்பும் பட்டும் படாமல் தான் வந்திருக்கிறது. இதை விதி மீறல் என்கிறதே ஒழிய இது ஏமாற்றுவேலை என்று தெளிவாக குறிப்பிட தயங்குகிறது. நாம் மீண்டும் மீண்டும் பார்க்கும் பொருளாதார குற்றங்கள் , போகிற போக்கில் நடத்தப்படும் விதி மீறல்கள் அல்ல , "மீறிப்போனால் என்ன தண்டனை கிடைக்கும்?" என்பது வரை திட்டமிட்டு செய்யப்படும் மோசடிகள் . இதுவே கூட இவர்களுக்கு கடன் கொடுத்த பாங்க் ஆஃப் பரோட வங்கி தனிப்பட்ட முறையில் ஆடிட்டர்களை நியமித்து கண்டறிந்தது.இப்படி பெரும் கடன் சுமையை கொண்ட RHFL , சென்ற வருடம் , அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டது. அதை Authum என்ற நிறுவனம் வாங்கியிருக்கிறது.

இதன் போர்டில் உள்ள சஞ்சய் டங்கி ஏற்கனவே CBI விசாரணையின் கீழ் இருப்பவர் . இதே போல DHFL என்ற நிறுவனத்தில் நடந்த மோசடி தொடர்பாக . தேர்தல் நிதியாக 25 கோடி நிதி அளித்ததும் இந்த நிறுவனமே .யாருக்கு என்று நான் தனியாக விளக்க தேவையில்லை என்று நினைக்கிறேன் .நிலமை சிக்கலானால் இவரும் வெளிநாட்டில் போய் செட்டிலாகிவிடுவார் என்பது என் யூகம் .

நம் ஊர் கிராமங்களில் எந்த விழாவுக்குப் போனாலும் பார்க்கும் எல்லோரும் எப்படியோ சொந்த பந்தம் அல்லது தெரிந்தவர்களாக இருப்பார்கள் இல்லையா . அப்படிதான் இந்தியாவின் நிதித்தொடர்புகள் , மிகச்சிறிய ஒரு வட்டத்திற்குள் எந்த வித கண்காணிப்பும் இல்லாமல் இப்படி பெரும் மோசடிகள் நடக்கின்றன . ஒருவரை ஒருவர் "கவர்" செய்து கொள்கிறார்கள் ஏனென்றால் எல்லோருமே ஏதோ ஒரு விதத்தில் இதில் உடந்தை அல்லது இதனால் லாபம் பெறுகிறவர்கள்.The rot goes deep and wide.

இந்தியாவில் இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிசம் என்பதே கிட்டத்தட்ட மரித்துவிட்டது . இரண்டு ஜர்னலிஸ்டுகள் இரண்டு நாள் இதில் கவனம் செலுத்தினாலே போதும் லட்டு மாதிரி பல விஷயங்களை வெளி கொண்டுவர முடியும்.இப்படி மறைக்கவே முடியாது என்னும் பூசணிக்காய்கள் மட்டும் தான் தற்போது வெளியே வருகின்றன . வசதியாக மறைக்கப்பட்ட பூசணிக்காய்கள் எவ்வளவோ .

கார்த்திக்வேலு

Tags :
Advertisement