வக்கீல்களுக்கு வழக்கு பட்டியலை ‘வாட்ஸ்அப்’ மூலம் அனுப்பும் திட்டம் - சுப்ரீம் கோர்ட் தகவல்
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு, நேற்று ஒரு வழக்கு பற்றிய விசாரணையை தொடங்கியது.
அப்போது, தலைமை நீதிபதி ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அது இதுதான்:
கோர்ட் செயல்பாடுகளை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கைகளை சுப்ரீம் கோர்ட் எடுத்து வருகிறது. இ-–கோர்ட் திட்டத்துக்கு மத்திய அரசு ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கி உள்ளது. சுப்ரீம் கோர்ட் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆன நிலையில், ஒரு சிறிய முயற்சியை தொடங்க போகிறோம். இது, பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவல்லது. சுப்ரீம் கோர்ட்டில் ஒவ்வொரு அமர்விலும் குறிப்பிட்ட நாளில் எடுத்துக் கொள்ளப்பட உள்ள வழக்குகளின் பட்டியல், ஆன்லைன் மூலம் பதிவான வழக்குகள் மற்றும் பட்டியலிடப்படும் வழக்குகள் குறித்த தகவல்கள் ஆகியவை பதிவு செய்த வக்கீல்களுக்கும், கோர்ட்டுக்கு நேரில் வரும் மனுதாரர்களுக்கும் ‘வாட்ஸ்அப்’ மூலம் தானியங்கி செய்திகளாக அனுப்பி வைக்கப்படும்.
மேலும், இணையதளத்தில் கிடைக்கும் உத்தரவுகள் மற்றும் தீர்ப்புகளும் ‘வாட்ஸ்அப்’ மூலம் அனுப்பப்படும். ‘வாட்ஸ்அப்’ அன்றாட வாழ்க்கையில் எங்கும் நீக்கமற நிறைந்து காணப்படுகிறது. தகவல் பகிர்வுக்கான வலிமையான தொடர்பு கருவியாக இருக்கிறது. அனைவரும் எளிதில் கோர்ட்டை அணுகும் வகையிலும், வெளிப்படைத்தன்மையை உருவாக்கவும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம். இதன் மூலம், காகிதம் சேமிக்கப்படும். பூமி பாதுகாக்கப்படும். எங்கள் பணி பழக்க வழக்கத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். மூலை முடுக்குகளில் இருப்பவர்களும் சாமானியர்கள் சம்பந்தப்பட்ட எளிய வழக்குகளையும் தெரிந்து கொள்ள முடியும். 8767687676 என்ற ‘வாட்ஸ்அப்’ எண்ணில் இருந்து சுப்ரீம் கோர்ட் பதிவாளர் இத்தகவல்களை அனுப்பி வைப்பார். இந்த எண்ணில் எந்த அழைப்பும் ஏற்கப்படாது.
இவ்வாறு தலைமை நீதிபதி கூறினார்.
‘‘இது மற்றொரு புரட்சிகரமான நடவடிக்கை’’ என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா பாராட்டு தெரிவித்தார்.