தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

370-வது பிரிவு ரத்து செய்யப்பட்டது செல்லும்- சுப்ரீம் கோர்ட்!

01:32 PM Dec 11, 2023 IST | admin
Advertisement

2019-ம் ஆண்டுக்கு முன்பு வரை, அப்போதைய ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 370-ன்கீழ் சிறப்பு அந்தஸ்து இருந்தது. இந்தச் சிறப்பு அந்தஸ்தின்படி,ஜம்மு காஷ்மீருக்கென்று தனிக்கொடி, அரசியல் சாசனம், இரட்டைக் குடியுரிமை, வேறு மாநிலத்தவர்கள் அங்கு நிலம் வாங்க முடியாது உட்பட பல்வேறு சிறப்பு அந்தஸ்துகளை பிரிவு 370 வழங்கியிருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், இந்திய அரசியலமைப்புச் சட்டம் முழுவதுமாக ஜம்மு காஷ்மீருக்குப் பொருந்தாமல் இருந்தது. இச்சூழலில்தான் பா.ஜ.க. தலைமையிலான மத்திய ஆட்சி 2்-வது முறையாக மீண்டும் அமைந்த நிலையில், கடந்த 2019 ஆகஸ்ட் மாதம் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்டது. மேலும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது. இதை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்குகளை சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய், சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணை செய்தது.

Advertisement

இந்த வழக்குகளின் விசாரணை கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி 16 நாட்கள் நடைபெற்றது. இந்த வழக்குகளில் மத்திய அரசு முடிவுக்கு எதிராக கபில் சிபல், கோபால் சுப்ரமணியம், துஷ்யந்த் தேவ் மற்றும் ராஜீவ் தவான் என மொத்தம் 18 வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதாடினர். அதேபோல, அரசுத் தரப்பில் அட்டர்னி ஜெனரல் ஆர்.வெங்கடரமணி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மற்றும் சட்ட வல்லுனர்கள் அடங்கிய குழு மத்திய அரசுக்கு ஆதரவாக வாதங்களை முன்வைத்தனர். இருதரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்தது.இந்த நிலையில், தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு இன்று வழங்கிய தீர்ப்பில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது பிரிவை மத்திய அரசு நீக்கியது செல்லும் என்று தெரிவித்து உள்ளது

Advertisement

இன்று வழங்கியத் தீர்ப்பில் தலைமை நீதிபதி சந்திரசூட் ஒரு தீர்ப்பும், நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூர்யகாந்த் ஆகியோர் வேறு மாதிரியான தீர்ப்பும், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், சஞ்சீவ் கண்ணா ஆகியோர் மற்றொரு தீர்ப்பும் என 3 தீர்ப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதேசமயம், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், சஞ்சீவ் கண்ணா இருவருமே மற்ற 3 நீதிபதிகளின் தீர்ப்புடன் ஒத்துப்போவதாக அறிவித்திருக்கின்றனர். ஆகவே, தீர்ப்பு 3 வகையாக இருந்தாலும், ஒரே தீர்ப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தலைமை நீதிபதி சந்திரசூட் தெரிவித்திருக்கிறார்.

தொடர்ந்து, தலைமை நீதிபதி வாசித்த தீர்ப்பில், “ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி இருக்கும்போது, அம்மாநிலம் தொடர்பாக மத்திய அரசு முடிவுகளை எடுக்கக் கூடாது என்று கூற முடியாது. அப்படிக் கூறினால் அது அரசியலமைப்புப் பணிகளை தடுப்பது போலாகும். அதேபோல, ஒரு மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி இருக்கும் போது அங்கு மத்திய அரசு முக்கியமான மிகப்பெரிய நடவடிக்கைகளை எடுக்கக்கூடாது என்று தடை விதிக்க முடியாது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக மாறியது என்பது இந்திய அரசியலமைப்பின் 1 மற்றும் 370-வது பிரிவுகளில் இருந்து தெளிவாகிறது.மேலும், இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு விதி, அதிகார வரம்புகள் இருக்கின்றன. ஆனால், ஜம்மு காஷ்மீருக்கு “இறையாண்மை” என்பது கிடையாது. இந்தியாவுடன் இணையும்போது காஷ்மீருக்கு இறையாண்மை இல்லை. காஷ்மீர் அரசியல் சாசனத்திலும் இறையாண்மை இல்லை.

தவிர, ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370-வது சட்டம் தற்காலிகமானதே. அந்தச் சட்டம் நிரந்தரமான வசதியை கொடுக்கும் சட்டம் கிடையாது. சுதந்திரப் போர் காலத்தில் கொடுக்கப்பட்ட தற்காலிக வசதி. அதே சமயம் ஜம்மு காஷ்மீரின் சட்டமன்றம் கலைக்கப்பட்ட பிறகு, பிரிவு 370(3)-ன் அதிகாரம் நிறுத்தப்படவில்லை. பிரிவு 370 (1)(d)-ன்கீழ் அதிகாரத்தைப் பயன்படுத்தி 370-வது பிரிவைத் திருத்த முடியாது. ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370 சட்டப்பிரிவை ரத்துசெய்தது சட்டப்படி செல்லும். ஜம்மு காஷ்மீரை இரண்டாகப் பிரித்து, லடாக்கை யூனியன் பிரதேசமாக மாற்றியதும் செல்லும். ஜம்மு காஷ்மீரில், 2024 செப்டம்பருக்குள் தேர்தல் நடத்த வேண்டும். மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பது கூடிய விரைவில் நடைபெற வேண்டும்" ” என்று தலைமை நீதிபதி தீர்ப்பில் கூறியிருக்கிறார்.

Tags :
Article 370 of the ConstitutionJ&Kr Article 370SCSupreme CourtThe benchUnion of India
Advertisement
Next Article