எஸ்பிஐ எச்சரிக்கை: 'போலி தேர்வுக் கடிதம் அனுப்பும் மோசடி நடக்குதுங்கோ'
எஸ்.பி.ஐ. எனப்படும் பாரத ஸ்டேட் வங்கி ( SBI ) என்பது ஒரு இந்திய பன்னாட்டு பொதுத்துறை வங்கி மற்றும் மகாராஷ்டிர மாநிலம் மும்பையை தலைமையிடமாகக் கொண்ட நிதிச் சேவைகள் சட்டப்பூர்வ அமைப்பாகும் . SBI மொத்த சொத்துக்களின் அடிப்படையில் உலகின் 48வது பெரிய வங்கியாகும் , மேலும் 2020 ஆம் ஆண்டின் உலகின் மிகப்பெரிய நிறுவனங்களின் பார்ச்சூன் குளோபல் 500 பட்டியலில் 221வது இடத்தைப் பிடித்துள்ளது, பட்டியலில் உள்ள ஒரே இந்திய வங்கியாகும். இது ஒரு பொதுத்துறை வங்கி மற்றும் இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாகும் . இப்பேர்பட்ட வங்கியின் பெயரில் அதன் பல்வேறு பணி நியமனங்களுக்கான பெயர்ப் பட்டியலை வெளியிடும் இணையதளங்கள் குறித்து, எச்சரிக்கையாக இருக்குமாறு விண்ணப்பதாரர்களை ஸ்டேட் பாங்க் நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
ஸ்டேட் பேங்க ஆப் இந்தியா என்பது இந்தியத் துணைக்கண்டத்திலேயே பழமைவாய்ந்த வங்கி. 1806ஆம் ஆண்டு கல்கத்தா வங்கி என துவங்கியது பாரத இம்பீரியல் வங்கியாக உருவெடுத்து பின்னர் பாரத ஸ்டேட் வங்கியானது. 1955ஆம் ஆண்டு இந்திய அரசு பாரத இம்பீரியல் வங்கியை நாட்டுடமையாக்கியபோது பாரத ரிசர்வ் வங்கி 60% முதலீடு செய்து பாரத ஸ்டேட் வங்கி என பெயரிடப்பட்டது. 2008ஆம் ஆண்டு பாரத ரிசர்வ் வங்கியின் பங்குகளை இந்திய அரசே வாங்கியது. அதன் மூலம் ரிசர்வ் வங்கியின் முகமை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி அரசு வங்கியானது. அந்த வங்கி பணியிடங்களை நிரப்புவது தொடர்பாக, விண்ணப்பதாரர்களின் பெயர்ப் பட்டியலை சில இணையதளங்கள் வெளியிட்டு வருகின்றன. அந்த தளங்களை தொடர்பு கொள்ளும் பணி நாடுநர் மோசடிக்கு ஆளாவதும் நடக்கிறது. இது குறித்த புகார்கள் ஸ்டேட் பாங்க் நிர்வாகத்தை எட்டியதை அடுத்து, வங்கி தரப்பில் பொதுமக்களுக்கான எச்சரிக்கை குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஸ்டேட் பாங்க் வெளியிட்டுள்ள அந்த அதிகாரபூர்வ அறிவிப்பில், “சில மோசடியாளர்கள், பாரத ஸ்டேட் வங்கியின் இணையதளங்களைப் போன்று தோற்றமளிக்கும் வகையில் போலி தளங்களை ஹோஸ்ட் செய்துள்ளதாக எங்களுக்குத் தெரிய வந்துள்ளது. இந்த இணையதளங்களில், எஸ்பிஐ பெயரில் போலி நியமனக் கடிதங்களும் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. ஸ்டேட் பாங்க் இணையதளத்தில் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பெயர்கள் ஒருபோதும் வெளியிடுவதில்லை என்பதை தெளிவுபடுத்துகிறோம். விண்ணப்பதாரரின் வரிசை எண் மற்றும் பதிவு எண் உள்ளிட்ட விவரங்கள் மட்டுமே எஸ்பிஐ அதிகாரபூர்வ தளத்தில் வெளியிடப்படும்.
மேலும் தேர்வான விண்ணப்பதாரர்களுக்கு தனித்தனியாக எஸ்எம்எஸ், மின்னஞ்சல் மற்றும் தபால் வாயிலாக உரிய தகவல்கள் தெரிவிக்கப்படும். காலிப்பணியிடங்கள் நிரப்பப்படுவது தொடர்பான அறிவிப்பு, நேர்காணல் அட்டவணை, தேர்வானவர்கள் விவரம் உள்ளிட்ட அனைத்தும்https://www.sbi.co.in/web/careers & https://bank.sbi/web/careers ஆகிய அதிகாரபூர்வ தளத்தில் மட்டுமே வெளியிடப்படும்" என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆக ஸ்டேட் பாங்க் பணியிடங்கள் நிரப்பப்படும் நடைமுறையை குறிவைத்து, விண்ணப்பதார்களை ஏமாற்றும் மோசடியாளர்களின் நூதன உத்திகளை இவ்வாறு எஸ்பிஐ நிர்வாகம் அம்பலப்படுத்தி உள்ளது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.