நா வந்துட்டேன்னு சொல்லு- அமெரிக்க அதிபர் டிரம்ப்!
உலகின் பெரியண்ணா என்று வர்ணித்துக் கொள்ளும் அமெரிக்காவின் அதிபர் தேர்தலில், பலத்தரப்பட்ட யூகங்களையும், கருத்துக் கணிப்புகளையும் பின்னுக்குத் தள்ளி, டிரம்ப் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்துள்ளார். அதிபராக இருந்தவர், அடுத்த தேர்தலில் தோற்று, மூன்றாம் முறை மீண்டும் வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.அவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஜனநாயக கட்சியின் வேட்பாளரும், தற்போதைய துணை அதிபருமான கமலா ஹாரிஸ் பின்னடைவை சந்தித்துள்ளார்.
இதை அடுத்து புளோரிடாவில் தனது ஆதரவாளர்களுக்கு மத்தியில் டிரம்ப் பேசியது:
“இது அமெரிக்காவின் பொற்காலம். நாங்கள் மக்களை நிச்சயம் பெருமை கொள்ள செய்வோம். எங்களது பணி மற்றும் செயல்பாடு அப்படி இருக்கும். துணை அதிபராக தேர்வாகி உள்ள ஜேம்ஸ் டேவிட் வான்ஸுக்கு எனது வாழ்த்துகள். அவர் அந்த பொறுப்புக்கு சரியான தேர்வு. நாட்டின் முதல் குடிமகள் ஆகவுள்ள என் மனைவி மெலானியாவுக்கு வாழ்த்துகள்.இந்த தேர்தலில் நமக்காக சிறந்த முறையில் பணியாற்றிய எலான் மஸ்குக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் ஒரு ஜீனியஸ். நாம் அவரை பாதுகாக்க வேண்டும். அது நம் பொறுப்பு. அவரைப் போலவே தேர்தலில் நமக்காக சிறந்த முறையில் பணியாற்றிய அனைவருக்கும் பாராட்டுகளை இந்நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.
இனி யாரும் செய்யாததை நாங்கள் செய்வோம். ஆட்சி பொறுப்பை ஏற்றதும் வரிகளை குறைப்போம். நம் எல்லைகளை வலுவாக்குவோம். ராணுவத்துக்கு பலம் சேர்ப்போம். நாட்டு மக்களுக்கு ஜனநாயக உரிமை மற்றும் சுதந்திரத்தை அளிப்போம். நாம் இணைந்து இந்த இலக்கை அடைவோம். நாட்டின் எதிர்காலத்தை வளம் ஆக்குவோம். அதனை பாதுகாப்போம்.உலகத்தின் மிக முக்கிய பணி இது. அதன் காரணமாக தான் இறைவன் எனது உயிரை காத்தார் என நினைக்கிறேன். உங்கள் அனைவருக்கும் நன்றி” என ட்ரம்ப் தனது வெற்றி உரையில் தெரிவித்தார்.
நம் நாட்டுக்கு கடுமையாக உழைக்கும் திறன் கொண்ட அதிபர் மீண்டும் கிடைத்துள்ளார் என டொனால்ட் ட்ரம்ப் ஆதரவாளர்கள் தெரிவித்தனர். புளோரிடாவில் உள்ள மாநாட்டு மையத்தில் குடியரசுக் கட்சியின் நிர்வாகிகள், தேர்தல் பொறுப்பாளர்கள், தன் குடும்பத்தினர் என அனைவருக்கும் மேடையில் இடம் கொடுத்திருந்தார் ட்ரம்ப். அவர் பேசி முடிக்கும் போதெல்லாம் ஆதரவாளர்கள் ஆரவாரம் செய்தனர்.
அடிசினல் ரிப்போர்ட்
அமெரிக்க அதிபர் தேர்தலில் உலகின் டாப் 10 பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் மிகவும் வெளிப்படையாகவே டிரம்புக்கு ஆதரவை தெரிவித்தார். டிரம்ப் பிரசாரத்துக்கு 375 கோடி ரூபாய் அளவுக்கு நிதி தர தயார் என்று எலான் மஸ்க் அறிவித்தார். தேர்தல் பிரசாரக்களத்தில் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அமைச்சர் பதவி அல்லது வெள்ளை மாளிகையில் ஆலோசகர் பதவி ரெடி என்று டிரம்பும் தம் பங்குக்கு கொளுத்திப் போட்டார்.டிரம்பின் அறிவிப்புக்கு வரவேற்பு தெரிவித்து எலான் மஸ்கும் நான் தயார் என்று பதில் அறிவிப்பை வெளியிட மெல்ல, மெல்ல நிலைமைகள் மாற தொடங்கின.
வெளிப்படையான ஆதரவு போதாது என்று தினமும் தமது எக்ஸ் வலை தள பக்கத்தில் டிரம்புக்கு ஆதரவான கருத்துகளை எலான் மஸ்க் வெளியிட்டுக் கொண்டே இருந்தார். அவரின் இந்நடவடிக்கை டிரம்பின் வெற்றிக்கு முக்கிய காரணமாக மாறியது தேர்தல் பிரசாரத்தில், அமெரிக்க முன்னேற்றம் பற்றிய தமது எதிர்கால திட்டங்களை டிரம்ப் அறிவித்தாலும் எலான் மஸ்கின் முழு ஆதரவு முக்கிய திருப்பமாக அமைந்தது என கூறலாம்.
தேர்தல் முடிவு வெளியான நாளில் கூட நிமிடத்துக்கு நிமிடம் தமது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவுகளை விடாமல் மாற்றிக் கொண்டே இருந்தார் எலான் மஸ்க்.டிரம்ப் அதிபராகிறார் என்று முடிவுகள் வெளியான அடுத்த சில நிமிடங்களில் லைக் பொத்தானை இதய வடிவில் சிவப்பாக மாற்றி தமது சந்தோஷத்தை பகிர்ந்திருக்கிறார் மஸ்க்.
பிரசாரக்களத்தில் வெற்றிக்கு எத்தனையோ காரணிகள் இருந்தாலும் சூறாவளியாய் மக்களிடம் ஆதரவு திரட்டியது, 2 முறை நிகழ்ந்த துப்பாக்கிச்சூடு, எலான் மஸ்கின் கணக்கிலடங்கா ஆதரவு போன்ற காரணிகள் டிரம்புக்கு வெற்றியை ஈட்டித் தந்திருக்கிறது.