மோனாலிசாவை (ஏண்டா) பார்த்தேன்?!
'பாரீஸுக்கு தங்கம் வாங்க வந்தவங்களெல்லாம் கிடைச்சதை வாங்கிட்டு கிளம்பிட்டாங்க. நாம மட்டும் சும்மா போறதா?அட்லீஸ்ட், நம்ம மோனாலிசாவையாவது ஒரெட்டு பார்த்துட்டு போயிடலாம்'னு தான் 'உலகிலேயே மிகப் பெரிய, அதிக பார்வையாளர்கள் வந்து செல்லும் அருங்காட்சியகம்'னு சொல்ற 'லுவ்ரே மியூசிய'த்துக்குள் போனோம்.
அங்கே என்னடான்னா கட்டித் தழுவுற மாதிரி தடவித் தடவி, செக் பண்ணிட்டுதான் உள்ளயே விடுறாங்க...!1517ல் வரைந்து முடிக்கப்பட்ட மோனாலிசாவோட ஓவியம் 1797 முதல் இந்த மியூசியத்துல காட்சிப் பொருளா வெச்சிருக்காங்க. 1911ல Vincenzo Peruggia ன்னு ஒருத்தன் அதை ஆட்டையப் போட்டதால் இன்னி வரைக்கும் ஒரே பரிசோதனையா நடக்குது. (உள்ளே போறப்போ நடக்குற செக்கிங் வெளியே வர்றப்போ இல்லைங்கறது வேறு கதை. திருட்டு போனாலும் பரவாயில்லையோ)
அது சரி எங்கப்பா மோனாலிஸா?ன்னு உள்ளே நுழைஞ்சா...9000 ஆண்டுகளுக்கு முன் இருந்ததா, உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து கண்டெடுக்கப்பட்ட (சுட்ட) தொல்லியல் அகழ்வாராய்ச்சிப் பொருட்கள் அப்படீன்னு 6,16,000 க்கும் அதிகமான பல்வேறு சமாச்சாரங்களை (35000 தான் நம்ம கண்ணுல காட்டுறாங்க. இதையெல்லாம் பாக்கணும்னாலே அஞ்சாறு நாளைக்கு தேவையான வெரைட்டி ரைஸ் கட்டிகிட்டு உள்ளே எங்கயாவது பதுங்கினாத்தாங்க முடியும்) எல்லாம் வெச்சிருந்தாங்க. அதை எல்லாம் பொறுமை இல்லாம 'கண்டு களித்து', பல்வேறு காலகட்டங்களில உருவான அட்டகாச மார்பிள் சிற்பங்களையும் கடந்து... ஓவியக் கலையோட பல்வேறு பரிணாமங்களையும் பரிமாணங்களையும் ரசித்து...பெரிய ஹால் ஒண்ணுக்குள்ளே நுழைஞ்சோம்.
எங்கே அந்த வெண்ணிலா ...?உள்ளே நுழைஞ்சா அங்கே ஏகப்பட்ட கூட்டம். எல்லா சுவர்லயும் தேடினோம், பின்னாடி சுவரிலப் பாத்தா, Paolo Veronese சினிமா பேனர் சைஸ்ல வரைஞ்ச The Wedding feast at Kana ன்னு ஒரு பெரிய ஓவியம். ஹால் முழக்க தேடினேன். வேறு வேறு சைஸ்ல படங்கள்.அந்தம்மாவை மட்டும் காணோம்.
ஓடினேன்...ஓடினேன்...னு பராசக்தி சிவாஜி மாதிரி ஹாலின் கடைசி வரைக்கும் ஓடினேன். தெருவில பொருள் வாங்குற கும்பல் மாதிரி சிலர் சுத்தி நின்னுட்டு இருந்தாங்க. எட்டிப் பார்த்தேன். எதிர் சுவர்ல 30 x 21 இஞ்சு சைஸ்ல சின்னதா ஒரு படத்தை மாட்டியிருந்தாங்க.
அட, இப்படி துக்குனூண்டு படத்தை கா(மா)ட்டி ஏமாத்திட்டாங்களே.. ஒரு வேளை அடுத்த ஹால்ல இதை விட பெரிசா வெச்சிருப்பாங்களோ.. இது Sample ஆக இருக்குமோன்னு சந்தேகமே வந்துருச்சு. ஆனா அந்த சின்னப் படத்தையே நெருங்க விடாம ஊழியர்கள் வேலி போட்டு தடுத்திருந்ததால இது தான் ஒரிஜினல்னு சமாதானம் ஆயிட்டேன்.(ஆனாலும் டாலின்ஸி, இன்னும் கொஞ்சம் பெரிசா வரைஞ்சிருக்கலாமே. இது ஏமாத்துற மாதிரி இல்லே, இருக்குன்னு மனசு சொல்லுச்சு)
நம்மை பார்த்ததும் அதுல இருந்த மோனலிஸா (என்னை புரிஞ்சுகிட்டு) லேசா புன்னகை பூத்தாங்க. பதிலுக்கு நாமும் ஏமாந்ததை மறைச்சு, சினிமாஸ்கோப் அகலத்துல சிரிச்சேன்.சேர்ந்தும் தனியாகவும் போட்டோவும் எடுத்துக்கிட்டேன். 25 கோடி ஓணம் பம்பர் லாட்டரி எடுத்து ஏமாந்தவன் போல கடைசில வெளியே வந்தேன்."பிலிம் காட்றான்"னு கேள்விப்பட்டிருக்கோம். அது தானா இது... !?