சவுக்கு சங்கர் - தீர்ப்பில் ஒரு வேண்டுகோள்!
சவுக்கு சங்கர் கைதுக்கு எதிரான ஆட்கொணர்வு மனு (habeas corpus) வழக்கு விசாரணையில் நேற்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாநில அரசுக்கும் காவல் துறைக்கும் எதிராக கடுமையாகப் பேசி இருக்கின்றனர். 'டிவியில், யூடியூபில் பொய் செய்தி பகிர்பவர்களை எல்லாம் தேடித் தேடி கைது செய்யப் போகிறீர்களா? எத்தனை பேரை உங்களால் அப்படிக் கைது செய்து விட முடியும்? சவுக்கு சங்கர் பேசிய விஷயத்தின் மூலம் சமூகத்தில் எந்த விதத்தில் அமைதி கெட்டு விட்டது? அவர் பேசியதில் எங்கேயாவது வன்முறை அரங்கேறி இருக்கிறதா?
சவுக்கு சங்கர் பேசியது அவலமான வார்த்தைகள்தான். அதற்காக அவர் மீது தனியாக வழக்குத் தொடுத்திருக்கிறீர்கள். அந்த வழக்கின் மூலம் அவருக்கு தண்டனை வாங்கித் தர முயற்சி செய்யுங்கள். நாங்கள் குறுக்கே நிற்க மாட்டோம். அதை விட்டு விட்டு அவர் மீது குண்டர் சட்டத்தை ஏவியது பெருந்தவறு! கருத்துரிமையை நசுக்கும் முயற்சிகளை நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.' என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கருத்துரிமை குறித்து நான் பதிந்த அனைத்துப் பதிவுகளிலும், வீடியோக்களிலும் நீதிபதிகளின் இதே வரிகளைத்தான் தொடர்ந்து குறிப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். ஆட்சேப கருத்துகளுக்காக முன் கூட்டிய கைது என்பது கொடுங்கோல் அணுகுமுறை. நீதிமன்றமும் இதையே தெரிவித்திருப்பது என் சிந்தனை நிலைப்பாட்டை உறுதி செய்கிறது. சங்கரின் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை நேற்றோடு முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இறுதி விசாரணையில் நீதிபதிகள் இப்படிப் பேசி இருப்பதன் மூலம் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பதையும் யூகிக்க முடிகிறது.
குண்டர் சட்ட வழக்கு தூக்கி எறியப்பட்டு விரைவில் சவுக்கு சங்கர் விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கிறேன். அந்தத் தீர்ப்பிலும் கூட இதே வரிகளை சேர்த்துப் போட்டு, கூடவே காவல் துறை மீதும், மாநில அரசு மீதும் சில பல கண்டனங்களையும் இணைத்து அந்த விடுதலை தீர்ப்பை நீதிமன்றம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகளை கேட்டுக் கொள்கிறேன். அப்படி செய்தால், நாளை இது போன்ற அடாவடிக் கைதுகள் செய்வதற்கு முன் இவர்கள் கொஞ்சமேனும் தயங்கக் கூடும்.