தமிழகம்இந்தியாஉலகம்சினிமா செய்திகள்டெக்னாலஜி
Advertisement

இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் சாவித்திரிபாய் புலே!

06:06 AM Jan 03, 2024 IST | admin
Advertisement

ற்பதற்கு பொன்னான வாய்ப்பு கிடைத்திருக்கிறது
எனவே கற்றுக்கொள்
சாதியின் தொடர் சங்கிலி அறு
பார்ப்பனீய வேதங்களைத் தூக்கி எறி".

Advertisement

கல்வி பெற்றால் சாதியையும், வேதங்களையும் தூக்கி எறியும் அறிவும் வந்து விடும் என்கிற இந்த கவிதை வரிகளுக்குச் சொந்தக்காரர் சாவித்திரி பாய் பூலே.

சாதியக் கொடுமைகள், மூடத்தனங்கள், பெண்ணடிமைத்தனம் போன்ற பிற்போக்குத்தனங்கள் மிகுந்திருந்த 19-ம் நூற்றாண்டு காலகட்டத்திலேயே முதல் பெண் ஆசிரியராக, எழுத்தாளராக, கவிஞராக, பெண்ணுரிமை செயல்பாட்டாளராக, சமூக சீர்திருத்தவாதியாக என பல பரிமாணங்களுக்கு உரியவராய் வாழ்ந்தவர் சாவித்திரி பாய் பூலே.

Advertisement

1831-ம் ஆண்டு ஜனவரி 3-ம் நாள் மகாராஷ்டிரா மாநிலத்தின் நைகெளன் என்ற சிற்றூரில் பிறந்தார். கணவர் ஜோதிராவ் பூலே. இவரின் 9 வயதிலேயே திருமணம் நடைபெற்றது. ஜோதிராவ் பூலேவுக்கு அப்பொழுது வயது 13. பின்னாளில் அண்ணல் அம்பேத்கரால் "சமூக சீர்திருத்தத்தின் மகாத்மா" என்று போற்றப்பட்டவர் ஜோதிராவ் பூலே. அவரே தனது மனைவி சாவித்திரிபாய் பூலேவிற்கு எழுதவும், படிக்கவும் சொல்லிக் கொடுத்தவர். கல்வியின் முக்கியத்துவத்தை அறிய வைத்தவர்.

அதை அடுத்து இவர் தன் கணவர் மகாத்மா ஜோதிராவ் புலேயுடன் (Mahatma Jyotirao Govindrao Phule) இணைந்து, ஆங்கிலேயர் காலத்தில் பெண் உரிமைக்காகவும், கல்விக்காகவும் பாடுபட்டவர். இவர்கள் பெண் கல்விக்காக முதல் பள்ளியை பூனாவில் நிறுவினர்.ஆசிரியப் பணி: ஆசிரியப் பயிற்சியை நிறைவு செய்த சாவித்ரிபாய், புனேயில் முதல் தொடக்கப்பள்ளியைத் தொடங்கி, அதன் தலைமை ஆசிரியையாகப் பொறுப்பேற்றார். இதற்கு பல எதிர்ப்புகள் தோன்றினாலும், மனம் தளராமல் கல்விப் பணியைத் தொடர்ந்தார். ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி போதித்தார். இந்தியாவின் முதல் பெண் ஆசிரியர் என்ற புகழைப் பெற்றார். ஆம்.. ஆனால் நமக்குச் சொல்லித்தந்த பெண்ணியவாதிகளின் வரிசையில் சாவித்ரிபாயின் பெயர் என்றுமே இருந்ததில்லை. அவர் ஏன் மறைக்கப்பட்டார்? ஏனெனில், அவர் வீட்டுக்குள்ளே பெண்கள் பூட்டிக்கிடந்த காலத்தில் முதல் பெண் ஆசிரியை ஆனார், மேட்டிக்குடி ஆண்களால் கல்லடி, சொல்லடி பட்டு முதன் முதலில் பெண்களுக்கான கல்விக்கூடத்தை நடத்தினார். முதன் முதலில் முதியோருக்கு கல்விக் கற்றுக் கொடுத்தார், முதன் முதலில் ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட வர்க்கத்துக்கு கல்வி போதித்தார்.

அந்தக் காலக்கட்டத்தில் பழமைவாதிகளும் மேல்சாதியினரும் சாவித்திரிபாய் கல்விப் பணி செய்வதைக் கடுமையாக எதிர்த்தனர். ஒடுக்கப்பட்டவர்கள் கல்வி பெறுவதையே இலட்சியமாகக் கொண்டு ஆசிரியரான சாவித்திரிபாய் பூலே சாதிய சமூகம் கொடுத்த அச்சுறுத்தல்களை கண்டு கொள்ளவில்லை. சாதியவாதிகளின் கோபம் அதிகரித்தது. எப்படியாவது அவரைத் தடுத்தாக வேண்டுமென ஆபாசச் சொற்களால் வசை பாடினர். அவற்றையும் அவர் செவிகளில் வாங்கிக் கொள்ளவில்லை. எவருடைய மனதையும் நிலைகுலையச் செய்யும் அருவருப்பான செயல்களையும் செய்யத் துவங்கினர். அவர் பள்ளிக்குச் செல்லும் வழியில் மறைந்திருந்து அவரின் மேல் கற்கள், சாணி, மற்றும் நாற்றம் தரும் பல வகையான கழிவுகளை வீசினர். மனம் வேதனையடைந்த அவர் கணவர் ஜோதிராவ் பூலேவிடம் முறையிட்டார். கணவர் அதற்குத் தீர்வாக "மாற்றுப் புடவை எடுத்துக் கொள். பள்ளிக்கு சென்றதும் மாற்றிக் கொள்" என்றார். சாவித்திரிபாய் பூலேவும் தீர்வு கிடைத்து விட்டதாக மாற்றுப் புடவை எடுத்துக் கொண்டு பள்ளிக்குச் சென்றார். ஒடுக்கப்பட்டவர்களுக்கு கல்வியளிக்க தனக்கு நேர்ந்த அவமானத்தையும், ஆதிக்க சமூகம் இழைத்த கொடுமையையும் தாங்கி உறுதியுடன் நின்று ஆசிரியர் பணி தொடர்ந்தவரே சாவித்திரி பாய் பூலே அவர்கள்.

பெண்கள் முன்னேறவும், சமத்துவம் பெறவும் கல்வியே மூலதனம் என்பதை ஆழமாய் உணர்ந்த சாவித்திரிபாய் பூலேவும், ஜோதிராவ் பூலேவும் இந்தியாவிலேயே முதன் முதலில் பெண்களுக்கான பள்ளியை 1848-ல் பூனேவில் துவங்கினர். இந்தப் பள்ளியில் தலைமை ஆசிரியராக சாவித்திரிபாய் பூலே பொறுப்பேற்றார். இந்தியாவின் முதல் பெண் ஆசிரியரும் அவரே. முதலில் 9 பெண்கள் கல்வி கற்க வந்தனர். பின்னர் 48 பெண்கள் வரை சேர்ந்தனர். அப்பொழுதும் ஆதிக்க சாதியினர் விடவில்லை. ஜோதிராவ் குடும்பத்திற்குள் பிளவு வருமளவுக்கு தொல்லைகள் கொடுத்தனர்.

இது மட்டுமல்ல விவசாயிகள், தொழிலாளர்கள் கல்வி கற்க 1855-ல் இரவுப் பள்ளியை நடத்தினார். குழந்தைகள் பள்ளிக்கு வர சத்துணவுத் திட்டமும் கொண்டு வந்தார். பிள்ளைகளை தவறாமல் பள்ளிக்கு அனுப்புவதற்கு பெற்றோர்களிடம் கல்வியின் அவசியம் குறித்து விழிப்பூட்டினார். வெளியூர்களிலிருந்து வரும் மாணவர்களுக்காக தங்கும் விடுதிகளும் அமைத்தார். இக்கட்டான சூழ்நிலைகள் சூழ்ந்த போதிலும் சோர்ந்திடாது தொடர்ந்து கல்வி சேவை செய்வதையே அவர் தனது வாழ்நாள் கடமையாகக் கருதினார்.

கல்விக்காக மட்டுமல்லாமல் நவீன இந்திய பெண்ணிய இயக்கத்தின் முன்னோடியாக சாவித்ரிபாய் புலெவை சொல்லலாம். 1800களில் வட இந்தியாவில் கணவனை இழந்த பெண்களுக்கு மொட்டை அடிப்பது, பிறகு முடி வளர்ந்தாலும் தொடர்ந்து மொட்டையடிப்பது மேட்டிக்குடியினரிடம் வழக்கத்தில் இருந்த ஒரு மூடப்பழக்கம். இதை எதிர்த்து சாவித்ரி, தன் இயக்கத்தின் மூலம் போராடினார். அதிலும் அந்தக் கொடுமையை அழித்தொழிக்க தங்கள் பகுதி சுற்றிலுமுள்ள நாவிதர்களைத் திரட்டி போராடி அவர்களே இனி இதனை நாங்கள் செய்ய மாட்டோம் என உறுதி மொழியும் எடுக்க வைத்தார். சனாதனவாதிகளின் கடும் சினத்தையும் எதிர்கொண்டு துணிவுடன் நின்ற அவரின் போராட்டக் குணத்தை அறிபவர்கள் மெய் சிலிர்ப்பதைத் தவிர்க்க முடியாது.

கணவனை இழந்த இளம்பெண்களை மேட்டுக்குடி ஆண்கள் பாலியல் பலாத்காரம் செய்வது அந்தக் காலத்தில் சமூக அங்கீகாரம் பெற்ற கொடூரங்களில் ஒன்று. சமூகத்தால் ஒதுக்கப்பட்ட கைம்பெண்கள் தங்களது வாழ்வாதாரத்துக்காக ஆண்களின் பாலியல் சுரண்டலுக்கு ஆளானதும் நடந்தது. இப்படி பாலியல் சுரண்டல்களால் சில பெண்கள் கருவுற்று, அது வெளியே தெரியவந்தால் என்னவாகும் என பயந்து தற்கொலை செய்வதும் அதிகமாக இருந்தது. இப்படி பாதிக்கப்பட்ட ஒரு பிராமணப் பெண்ணை தற்கொலையிலிருந்து மீட்டு அவருடைய குழந்தையை தத்தெடுத்துக் கொண்டனர். முதன் முதலில் இப்படி பிறக்கும் சிசுக்களுக்கென்று தனி இல்லத்தையும் புலே தம்பதி ஆரம்பித்தனர். இதோடு, சாவித்ரி நவீன பெண்ணிய கவிதைகளின் முன்னோடியாகவும் கருதப்படுகிறார் !

1873-ல் 'சத்யஜோதக் சமாஜ்' என்னும் மறுமலர்ச்சி இயக்கத்தைத் துவங்கினர். இங்கு புரோகிதம் மறுத்து எளிமையான முறையில் திருமணங்கள் நடத்தப்பட்டன. குழந்தைகளைப் படிக்க வைப்போம் என்று மணமக்கள் உறுதிமொழி ஏற்றே திருமணங்கள் நடத்தி வைக்கப்பட்டது. சமத்துவம் நேசிப்பவர் எவராயினும் உறுப்பினராகலாம் என்பதை விதியாகக் கொண்டு அந்த அமைப்பு செயல்பட்டது. ஜோதிராவ் பூலே மறைவிற்கு பின் இதன் தலைவரானார் சாவித்திரிபாய் பூலே. 1876-ம் ஆண்டு பெரும் பஞ்சம் ஏற்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்கள் குறிப்பாக ஏழை மக்கள் உணவின்றி மாண்டனர். அந்த சமயத்தில் ஊர் ஊராகச் சென்று நிதி திரட்டி 52 இடங்களில் உறைவிடமும், உணவு முகாமும் அமைத்து அவர்களின் பசிப்பிணி போக்கிய அன்னை இவர்.

இவரின் கல்வித் தொண்டிற்காக 1852-ல் பிரிட்டிஷ் அரசு சிறந்த ஆசிரியர் விருது கொடுத்து கவுரவித்தது. 1998-ல் இந்திய அஞ்சல் துறை இவரின் அஞ்சல் தலையை வெளியிட்டது. புனே பல்கலைக்கழகத்திற்கு இவரின் பெயர் மாற்றப்பட்டது.

இவரின் இறுதிப் பயணமும் சமூக சேவையுடன் தான் முடிந்தது. 1896-97-களில் 'புபோனிக் பிளேக்' எனும் கொடுந்தொற்று பரவியது. மக்கள் கொத்து கொத்தாக இறந்து கொண்டிருக்க பிரிட்டிஷ் அரசு சாதிப் பிரிவினை பார்க்காமல் அனைவருக்கும் மருத்துவம் பார்க்கும்படி ஆணையிட்டது. ஆனால் பார்ப்பன மருத்துவர்கள் சூத்திரர்களுக்கும், தலித்துகளுக்கும் மருத்துவம் செய்ய மாட்டோம் என்று மறுத்து விட்டனர். அந்த சமயத்தில் ஆப்பிரிக்காவில் மருத்துவம் பயின்று கொண்டிருந்த தனது வளர்ப்பு மகனை வரவழைத்தார் சாவித்திரி பாய் பூலே. பூனேவில் மருத்துவ சிகிச்சை முகாம் அமைக்கப்பட்டது. அப்போது இந்த நோயால் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுவனை காப்பாற்ற தூக்கி வந்த இவருக்கும் இந்த நோய் தொற்றியது. சிறுவன் பிழைத்து விட்டான். சாவித்திரிபாய் பூலே மறைந்தார். தனது 1897 ம் ஆண்டு 66-வது வயதில் தனது பணிகளின் பயணத்தை முடித்துக் கொண்டார் சாவித்திரி பாய் பூலே.

ஆக பெண் குழந்தைகளின் கல்வி தினமாகக் கொண்டாடப்பட வேண்டிய  அம்மனுஷியின் பிறந்த தின சிறப்புக் கட்டுரை

✍️அகஸ்தீஸ்வரன்©️

Tags :
dealtIndia's first female teacherpoetSavitribai Phulesocial reformer
Advertisement
Next Article