For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

ஒரு கிலோ ரூ.29 விலையில் ‘பாரத் அரிசி’விற்பனை; மத்திய அரசு அறிவிப்பு!

01:38 PM Feb 04, 2024 IST | admin
ஒரு கிலோ ரூ 29 விலையில் ‘பாரத் அரிசி’விற்பனை   மத்திய அரசு அறிவிப்பு
Advertisement

மோடி தலைமையிலான மத்திய அரசு ஏற்கனவே உணவு பணவீக்கத்தைக் குறைக்கும் திட்டத்துடன் மிகவும் குறைந்த விலையில் கோதுமை மாவு மற்றும் பருப்பு வகைகளைப் பார்த் பிராண்டின் கீழ் விற்பனை செய்தது. நவம்பர் மாதம் தானிய வகைகளின் விலை 10.27% உயர்ந்துள்ளது, உணவுப் பணவீக்கம் நவம்பரில் 8.70% ஆக இருந்தது, முந்தைய மாதத்தில் 6.61% ஆக இருந்தது. உணவுப் பணவீக்கம் ஒட்டுமொத்த நுகர்வோர் நிதி நிலையைப் பாதிக்கும் காரணத்தால் 2024 ஆம் ஆண்டுப் பொதுத் தேர்தலுக்கு முன்பு மக்களின் அடிப்படை பிரச்சனையைத் தீர்க்கும் வகையில் ஒரு கிலோ அரிசியை 25 ரூபாய்க்கு விற்கும் முடிவு கொண்டு வரப்பட்டு இருந்த நிலையில் மானிய விலை அரிசியான ‘பாரத் அரிசி' வரும் 9-ம் தேதி முதல் 29 ரூபாய்க்கு விற்பனைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது..!

Advertisement

கடந்த ஆண்டு மட்டுமின்றி நடப்பு ஆண்டும் ஐடி ஊழியர்களுக்கு மட்டுமல்ல, அரிசி ஏற்றுமதியாளர்களுக்கும் ஒரு சவாலான ஆண்டாகவே உள்ளது. ஏனெனில் அரசு வகுக்கும் கொள்கைகள், உள்நாட்டில் அரிசி விலை ஏற்றம் இதனால் அதிகம் பாதிக்கபடுவது அரிசி ஏற்றுமதியாளர்களும்தான். உள்நாட்டில் அரிசி விலை தொடர் உயர்வு ஏற்படும் பட்சத்தில், ஏற்றுமதி விரைவில் தடை செய்யப்படும் நிலையும் ஏற்படும். S&P Global Commodity Insights படி, 2023ல் இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகள், பாஸ்மதி அல்லாத வெள்ளை அரிசி ஏற்றுமதியை தடை செய்தல், புழுங்கல் அரிசி ஏற்றுமதிக்கு 20 சதவீதம் வரி விதித்தல் மற்றும் குறைந்தபட்ச ஏற்றுமதி விலை 950/மில்லியன் டன்கள் (எம்டி) பாஸ்மதி, சந்தையை தொடர்ந்து பாதிக்கிறது.கடந்த 2 ஆண்டுகளாக அரிசி ஏற்றுமதிக்கு தொடரும் கட்டுப்பாடுகள் இந்த ஆண்டும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறைந்தபட்சம் 2024 இன் முதல் பாதி வரை கட்டுப்பாடுகள் நீடிக்கும் என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

Advertisement

இதை அடுத்து கடந்த ஓராண்டில் இந்தியாவில் அரிசியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், மத்திய அரசு ‘பாரத் அரிசி’ என்ற பெயரில் மானிய விலை அரிசித் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி, 1 கிலோ அரிசி ரூ.29-க்கு விற்பனை செய்யப்படும். ‘பாரத் அரிசி' விற்பனை வரும் 9-ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரியவந்துள்ளது.

இது குறித்து மத்திய உணவுத் துறை செயலர் சஞ்சீவ் சோப்ரா செய்தியாளர்களிடம் கூறும் போது, “உள்நாட்டுத் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் மத்திய அரசு பல்வேறு வகையான அரிசிக்கு கட்டுப்பாடு விதித்துள்ளது. எனினும், அரிசியின் விலை 15 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தச் சூழலில் அரிசியின் விலையைக் கட்டுப்படுத்த தேசிய வேளாண் கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு (NAFED), தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு (NCCF) மற்றும் மத்திய அரசின் விற்பனை மையங்கள் (கேந்திரிய பந்தர்) மூலம் சில்லறை சந்தையில் மானிய விலையில் பாரத் அரிசியை ஒரு கிலோ ரூ.29-க்கு விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது” என்று தெரிவித்தார்.

முதற்கட்டமாக சில்லறை சந்தை விற்பனைக்கு 5 லட்சம் டன் அரிசி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் 5 கிலோ மற்றும் 10 கிலோ பைகளில் இது கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரத் அரிசி இணைய வழியிலும் விற்பனை செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அரிசி பதுக்கலைத் தடுக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. அரிசி கையிருப்பு விவரங்களை ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மத்திய உணவுத் துறை அமைச்சக வலைதளத்தில் தெரியப்படுத்த வேண்டும் என்று சில்லறை மற்றும் மொத்த விற்பனையாளர்களுக்கு மத்திய அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Tags :
Advertisement