பாரிஸ் ஒலிம்பிக்கின் பாய்மர படகுப் போட்டி; தமிழக வீராங்கனை நேத்ரா குமணன் தகுதி!
பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் பாய்மர படகுப் பிரிவு போட்டியில் பங்கேற்கும் இரண்டாவது போட்டியாளராக நேத்ரா தகுதி பெற்றுள்ளார். இன்று பிரான்ஸ் நாட்டின் ஹையரெஸில் நடைபெற்ற ஒலிம்பிக் தகுதி சுற்றுக்கான இறுதி வாய்ப்பில் அவர் பங்கேற்று இந்த வாய்ப்பை உறுதி செய்துள்ளார். இதில் பாய்மரப் படகுப் போட்டியில் வளர்ந்து வரும் நாடுகளை சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்றனர். இப்போட்டியில் நேத்ரா குமணன் 67 புள்ளிகள் பெற்று டாப் 5-ல் ஒருவராக நேத்ரா தகுதி பெற்றுள்ளார். மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் டோக்கியோ ஒலிம்பிக்கில் மகளிருக்கான ILCA 6 பிரிவில் அவர் பங்கேற்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா உட்பட சர்வதேச நாடுகளை சேர்ந்த சுமார் 10,500 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். நேத்ரா குமணன் எம்.பி.ஏ முதலாம் ஆண்டு பயின்று வருகிறார்.
23 வயதாகும் நேத்ரா குமணன் சென்னையை சேர்ந்தவர். கோடை விடுமுறைகளில் சிறுவர்களுக்கான பயிற்சி முகாம்களில் கலந்துக்கொண்டு பல திறமைகளை வளர்த்தெடுத்திருக்கிறார். நடனம், இசை என ஒவ்வொரு கோடை விடுமுறையிலும் ஒவ்வொரு புதுவிதமான கலையை கற்றவர், ஒரு கோடைவிடுமுறையில் கற்றுக்கொண்ட படகோட்டுதலை மட்டும் கெட்டியாக பிடித்துக் கொண்டார்.
பெற்றோர்கள்தான் இந்த கோடைவிடுமுறை முகாம்களில் நேத்ராவை சேர்த்துவிட்டார்கள் என்பதால் இயல்பிலேயே அவர்களுடைய ஆதரவும் நேத்ராவுக்கு இருந்தது. பெரும் பொருட்செலவுமிக்க விளையாட்டு என்றாலும் நேத்ராவுக்காக அவருடைய பெற்றோர் எதையும் செய்ய தயாராக இருந்தனர். படகோட்டும் போட்டிகளுக்கும் பயிற்சிகளுக்கும் அடிக்கடி வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும் என்பதால் பள்ளிப்படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. பத்தாம் வகுப்பிற்கு பிறகு வீட்டிலிருந்தே படித்துக் கொண்டு படகோட்டுதலில் முழுக்கவனத்தையும் செலுத்தியவர், இப்போது பொறியியல் படித்துக் கொண்டிருக்கிறார்.
Laser Radial Class event அதாவது ஒற்றை ஆளாக படகை இயக்கும் பிரிவில் தன்னுடைய திறமையை மெருகேற்றிக் கொண்டார். 2014 மற்றும் 2018 ஆசிய போட்டிகளில் பங்கேற்றிருக்கிறார். இதில், 2018 ஆசிய போட்டியில் நூலிழையில் பதக்க வாய்ப்பை இழந்து நான்காம் இடம் பிடித்தார். தோல்விகள் ஏமாற்றம் கொடுத்தாலும் சீக்கிரமே வெற்றி அவரை தேடி வந்தது.2020 உலகக்கோப்பை படகோட்டும் போட்டியில் வெண்கலம் வென்று சாதனை படைத்தார். இந்தியா சார்பில் படகோட்ட போட்டியில் பதக்கம் வென்றிருக்கும் ஒரே பெண் என்கிற பெருமையை பெற்றார்.
இவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, தமிழக விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். இதுகுறித்து உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் ELITE திட்ட வீராங்கனையான தங்கை நேத்ரா குமணன், பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கான தகுதிச்சுற்றில் வெற்றி பெற்று, 2-ஆவது முறையாக இந்தியா சார்பில் ஒலிம்பிக் படகுப்போட்டியில் களம் காணவுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு என் பாராட்டுகள். டோக்யோ ஒலிம்பிக்கில் பங்கேற்றதன் மூலம், இந்தியாவிலிருந்து ஒலிம்பிக் படகுப்போட்டிக்கு தேர்வான முதல் பெண்மணி என்ற பெருமையைப் பெற்ற தங்கை நேத்ரா, எதிர்வரும் ஒலிம்பிக் 2024-ல் வெற்றி வாகை சூடிட என் அன்பும், வாழ்த்தும்’ என்று தெரிவித்துள்ளார்