சாகித்ய அகாடமி விருது: நெல்லை புனித சவேரியார் கல்லூரி தமிழ் துறை பேராசிரியை பா.விமலா தேர்வு!
இந்திய அளவில் இலக்கியத்தில் சாதனை படைத்தவர்களுக்காக ஆண்டுதோறும், மத்திய அரசால் வழங்கப்படும் மிக உயரிய விருது சாகித்ய அகாடமி விருது. மத்திய அரசால் 1954-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சாகித்ய அகாடமி இந்த விருதுகள் ஆண்டுதோறும் வழங்கி வருகிறது. 24 இந்திய மொழிகளில் சிறுகதை, நாவல், இலக்கிய விமர்சனம் போன்றவற்றுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. பரிசுத் தொகையாக ரூ.1 லட்சமும், பட்டயமும் வழங்கப்படுகின்றன. மேலும், இந்திய மொழிகளில் வெளி வந்த சிறந்த படைப்புகளை பிற இந்திய மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்வோருக்கும் சாகித்ய அகாடமி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.அதன்படி இந்தாண்டுக்கான சிறந்த மொழி பெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு 21 மொழிகளில் இருந்து நூல்கள் தேர்வு செய்யப்பட்டன. இதில், மலையாளத்தில் நளினி ஜமிலா எழுதிய "எண்ட ஆண்கள்" என்ற நூலை "எனது ஆண்கள்" என்ற தலைப்பில் தமிழில் மொழிப்பெயர்த்த விமலாவுக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நளினி ஜமீலாவின் வாழ்க்கை அனுபவங்களை வெளிப்படுத்தும் முக்கிய அம்சங்களை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது.! இந்த நூலை தனித்துவமான தமிழாக்கம் மூலமாகவும், விரிவாக இலக்கிய நயத்துடனும் மொழிபெயர்த்துள்ளார் பேராசிரியை விமலா என்பதே இவ்விருது பெற காரணம்.
அது சரி இந்த பேராசிரியை விமலா?
மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள விமலா, கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர். தற்போது அவர் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள தூய சவேரியார் கல்லூரியின் தமிழ்த் துறையில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். மிகவும் எளிய பின்னணி கொண்ட விமலா டெல்லியில் உள்ள ஜவர்ஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி படிப்பினை முடித்துள்ளார். இதுவரை நான்கு நூல்களை மொழி பெயர்த்துள்ள விமலாவுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
இது குறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "அப்பா இல்லாமல் எனது அம்மா எங்களை மிகவும் கஷ்டத்துடன் வளர்த்தார்கள். மருத்துவமனையில் வெந்நீர் விற்கும் வேலை பார்த்து அம்மா எங்களை வளர்த்தார்கள். ஒரு முறை அம்மாவின் இடுப்பில் வெந்நீரின் வெப்பத்தால் புண் ஏற்பட்டதை பார்த்து நான் மிகவும் வருத்தப்பட்டேன். வெந்நீர் விற்பதன் மூலம் கிடைக்கும் சொற்ப வருமானத்தில் எங்களை படிக்க வைத்தார்கள்.
நான் இளங்கலை பட்டப் படிப்பை தொலைதூரக் கல்வியில் படித்ததால், பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் எனக்கு ஆராய்ச்சி படிப்பில் இடம் கிடைக்கவில்லை. அந்த நேரத்தில் தான் டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தது. அங்கு ஆராய்ச்சி படிப்பு மேற்கொள்ள இரண்டு மொழிகள் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும். அப்போது தான் நான் மலையாளத்தை கற்றுக் கொண்டேன்.
அதன் மூலம் ஏற்பட்ட அனுபவத்தை வைத்து மொழிபெயர்ப்பு பணிகளைத் தொடங்கினேன். மொழிபெயர்ப்பு என்பது எனக்கு மிகவும் விருப்பமான பணி. அந்த வகையில் நளினி ஜமீலா எழுதிய "எண்டே ஆண்கள்" புத்தகத்தை தமிழில் மொழி பெயர்த்தேன். தற்போது எனக்கு சாகித்ய அகடமி விருது கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. விருது கிடைக்கும் என நான் எதிர்பார்க்கவில்லை. இந்த விருதை எனது அம்மாவுக்கும் உறவினர்களுக்கும் சமர்ப்பிக்கிறேன். இதுவரை நான்கு நூல்களை மொழிப்பெயர்த்துள்ளேன். தொடர்ந்து மொழிபெயர்ப்பில் ஈடுபட வேண்டும் என்பதுதான் எனது லட்சியம்." என கூறினார்.