சஹாரா குழுமம் சுப்ரதா ராய் காலமானார்!
சர்வதேச அளவில் இந்தியாவின் அடையாளமாக ஒரு காலக்கட்டத்தில் இருந்த சஹாரா குரூப் நிறுவனர் சுப்ரதா ராய் உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வந்தார். அவரின் உடல்நிலை மோசம் அடைந்ததைத் தொடர்ந்து மும்பையில் உள்ள கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்நிலையில், அவருக்கு நேற்று இரவு 12 மணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு காலமானார்.
பீகாரை பூர்வீகமாகக் கொண்ட சுப்ரதா ராய் 1978-ம் ஆண்டு சகாரா இந்தியா பரிவார் நிறுவனத்தை வெறும் 2,000 ரூபாயில் ஆரம்பித்தார். பின்னாளில் நிதி, உள்கட்டமைப்பு மற்றும் வீட்டுவசதி, ரியல் எஸ்டேட், விளையாட்டு, மின்சாரம் போன்ற வணிகத் துறைகளை இந்த குழு இயக்கி வருகிறது. .முன்னதாக சுப்ரதா ராய் குடும்பம் பின்னர் லக்னோவுக்கு இடம் பெயர்ந்தது. இதையடுத்து தனது கம்பெனியின் தலைநகரத்தை லக்னோவுக்கு மாற்றிக்கொண்டார் சுப்ரதா ராய். சிட்பண்ட், ஏர்லைன்ஸ், டிவி, மீடியா, ரியல் எஸ்டேட், கல்வி, சுற்றுலா என்று அவர் கைவைக்காத தொழிலே கிடையாது. அந்த காலத்தில் அமைச்சர்கள், எம்எல் ஏக்கள், எம்பிக்கள்; என்று பலரும் இவரின் அப்பாயிண்ட்மெண்டை பெறுவதற்கு கூட காத்திருந்தனர். அவரது தலைமையின் கீழ், சஹாரா இந்திய கிரிக்கெட் மற்றும் ஹாக்கி அணிகளுக்கு நிதியுதவி அளித்தது மற்றும் ஃபார்முலா ஒன் பந்தய அணியை சொந்தமாக வைத்திருந்தது. சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் அவரது இரண்டு மகன்களின் திருமணங்கள் இந்தியாவில் இதுவரை கண்டிராத பெரிய திருமணங்களில் ஒன்றாகும்.
ஆனால் "சஹாரா சிட் ஃபண்ட் மோசடி" என்று அறியப்படும் ஒரு வழக்கில் சஹாரா நிதி தொடர்பாக சுப்ரதா கடுமையான குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானார். இதனால் அவரின் நிறுவனம் பல சிக்கல்களை எதிர்கொண்டது. பங்கு சந்தையிலும் கடுமையான வீழ்ச்சியை அந்த நிறுவனம் சந்தித்தது .அதிலும் இந்திய கிரிக்கெட் அணிக்கு பல ஆண்டுகளாக ஸ்பான்சர்ஷிப் வழங்கி வந்த சகாரா நிறுவனம் பொது மக்களிடம் சட்டவிரோதமாக டெபாசிட்களை பெற்றதாக கூறி வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் சகாரா நிறுவனத்திடமிருந்து பணத்தை பறிமுதல் செய்து முதலீட்டாளர்களுக்கு கொடுக்கும்படி அமலாக்கப்பிரிவு மற்றும் செபிக்கு சுப்ரீம் கோர்ட் 2012-ம் ஆண்டு உத்தரவிட்டது. இதையடுத்து சஹாரா நிறுவனம் தொடர்ந்து கோர்ட் வழக்குகளை சந்தித்தது.
அதை அடுத்து பல்வேறு தொழில்கள் முடங்கின. அரசியல் ரீதியாக அவர்களுக்கு இருந்த ஆதரவும் கூட கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. முக்கியமாக சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் வழக்குகள் சஹாராவிற்கு எதிராக திரும்பியதால் அந்த நிறுவனம் மொத்தமாக முடக்கப்பட்டது. மேலும் 2014-ம் ஆண்டு கைது செய்யப்பட்ட சுப்ரதா ராய் 2016-வது ஆண்டு ஜாமீனில் வெளியில் வந்தார். சுப்ரீம் கோர்ட் ஜாமீன் கொடுத்தபோது 5,000 கோடி ரொக்கமாகவும் 5,000 கோடி வங்கி உத்தரவாதமாகவும் செலுத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இந்த நிதியை திரட்ட வெளிநாட்டில் உள்ள சொத்துகளை விற்பனை செய்ய சுப்ரதா ராய்க்கு சிறையில் வசதிகள் செய்து கொடுக்கப்பட்டன.
ஆனால் 10,000 கோடி ஜாமீன் தொகையை கொடுக்க முடியாமல் பல மாதங்கள் சிறையில் இருந்தார். இந்த சிரமத்தால் சுப்ரதா ராய் சஹாரா உடல்நல பிரச்சனை காரணமாகவும் அவதிப்பட்டு வந்தார். மெட்டாஸ்டேடிக் வீக்கம், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு வந்தார். இந்த சிக்கல்களுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த சுப்ரதா ராய் இதய சுவாசக் குழாய் பிரச்சனை காரணமாக பாதிக்கப்பட்டு கார்டியாக் அரஸ்ட் இறந்ததாக சஹாரா நிறுவனம் அறிக்கையில் கூறி உள்ளது.