காவி உடை வள்ளுவர்: மீண்டும் சர்ச்சையைக் கிளப்பிய கவர்னர்
ஆண்டுதோறும் தை இரண்டாம் நாள் மாட்டுப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அன்றைய தினம் திருவள்ளுவர் தினமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று தமிழகம் முழுவதும் மாட்டுப் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என கூறிய அய்யன் திருவள்ளுவர் தினத்தையொட்டி பல்வேறு இடங்களில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து திருவள்ளுவர் விருது மற்றும் தமிழ்நாடு அரசின் விருதுகளை வழங்கி, "வள்ளலார் பல்லுயிர் காப்பகங்கள்" திட்டத்தின் கீழ் ஐந்து தொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவியும் வழங்கினார்.
இதனிடையே தமிழகத்தின் கவர்னராக உள்ள ஆர்.என்.ரவி அவ்வப்போது, சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்து, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறார். சனாதனம், இந்து மதம் எனத் தொடர்ந்து அவர் பல்வேறு கருத்துக்களைத் தெரிவித்து வருகிறார். இந்த நிலையில், மீண்டும் ஒரு புதிய சர்ச்சையை அந்த ரவி கிளப்பியுள்ளார். அதாவது வெள்ளை உடை அணிந்த திருவள்ளுவர் புகைப்படத்தையே தமிழக அரசு 50 ஆண்டுகளுக்கு மேலாக அதிகாரப்பூர்வமாக பயன்படுத்தி வருகிறது. ஆனால் பாஜக தலைவர்கள் சிலர் அவ்வபோது காவி உடையணிந்த திருவள்ளுவர் பயன்படுத்துவதும், அவரை சனாதனவாதி என்றும் குறிப்பிட்டு வருகின்றனர். இந்த சூழலில் இன்று உலகம் எங்கும் உள்ள தமிழர்கள் தமிழர் திருநாளாகவும், திருவள்ளுவர் நாளாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி காவி உடையுடன் உள்ள வள்ளுவர் புகைப்படத்தைப் பகிர்ந்து திருவள்ளுவர் நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஆளுநர் திரு. ஆர்.என். ரவி, திருமதி. லக்ஷ்மி ரவி அவர்கள், திருவள்ளுவர் தினத்தில் தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
Governor Thiru R. N. Ravi and Lady Governor Tmt Laxmi Ravi paid floral tributes… pic.twitter.com/Qb3LUJ4dIQ
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) January 16, 2024
அதில், “திருவள்ளுவர் தினத்தில், ஆன்மிக பூமியான நமது தமிழ்நாட்டில் பிறந்த பெரும்புலவரும், சிறந்த தத்துவஞானியும் பாரதிய சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவியுமான திருவள்ளுவருக்கு எனது பணிவான மரியாதையைச் செலுத்துகிறேன்.அவரது ஞானம் நமது தேசத்தின் சிந்தனை மற்றும் அடையாளத்தை வடிவமைத்து, வளப்படுத்தி ஒட்டுமொத்த மனிதக் குலத்துக்கு வழிகாட்டியாகவும் உத்வேகத்தின் ஆதாரமாகவும் நீடிக்கிறது. இந்த புனிதமான நாளில், அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். - கவர்னர் ரவி`` என்று தெரிவித்துள்ளது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.