உலகின் அமைதியைக் கூறி கொண்டே இருக்கும் சடாகோ சசாகி நினைவு நாள்!
‘சடாகோ சசாகி’ என்பது அந்தப் பெண்ணின் பெயர்.
1945-ம் ஆண்டு, ஆகஸ்ட் 6-ம் தேதி - வீட்டுக்குள் சமர்த்தாகப் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தாள் அந்த இரண்டு வயதுப் பெண் குழந்தை சசாகி. திடுமென பூமிப்பந்தே இரண்டாகப் பிளப்பதுபோல் நிலம் அதிர, அவள் ஜன்னல் வழியாக வெளியே தூக்கியெறியப்பட்டாள். பதறிப்போன அம்மா ஓடிச்சென்று குழந்தையைத் தூக்கிக்கொண்டாள். நல்லவேளை... குழந்தை உயிருடன் இருந்தது.
ஒரு ‘குட்டிப் பையன்’ செய்த அயோக்கியத்தனம் அது. அவன் அது மட்டுமா செய்தான்... அன்றைய தினம், ஒரு லட்சம் பேருக்கு மேல் கொன்று தீர்த்துவிட்டான். இரண்டாம் உலகப்போரில், ஜப்பான்மீது அமெரிக்கா போட்ட அணுகுண்டுகளில் ‘ஹிரோஷிமா’ நகரில் விழுந்த குண்டின் பெயர்தான் ‘குட்டிப் பையன்’ (லிட்டில் பாய்).
சுமார் 2 கி.மீட்டர் தொலைவுக்கு அப்பால் விழுந்த குண்டின் அதிர்ச்சியே குழந்தை சசாகியை அலாக்காகத் தூக்கி, வீட்டுக்கு வெளியே வீசியெறிந்தது. எனில், அந்த அணுகுண்டு எவ்வளவு வீர்யம் வாய்ந்தது, எவ்வளவு சேதம் விளைவித்திருக்கும் என யோசித்துப் பாருங்கள்.
ஹிரோஷிமா நகரமே பூண்டோடு அழிந்தது. 1946 ஆகஸ்ட் 10-ம் தேதி ஹிரோஷிமா நகராட்சி வெளியிட்ட அறிக்கையின்படி, அணுகுண்டு வீச்சில் 1,18,661 பேர் இறந்துவிட்டார்கள்; 79,130 பேர் காயப்பட்டார்கள்; 30,524 பேர் உடல் சிதைந்து போனார்கள்; 3,677 பேரைக் காணவில்லை. இயற்கைச் சீற்றங்கள்கூட ஒட்டுமொத்தமாக இவ்வளவு பெரிய உயிர்ச் சேதத்தை நிகழ்த்தியதில்லை.
குழந்தை சசாகி உயிர் தப்பினாலும், பன்னிரண்டு வயதில் அவளின் கழுத்திலும் காதுகளிலும் வீக்கங்கள் ஏற்பட்டன. அணுகுண்டு வீச்சின் கதிரியக்கம் அந்தப் பெண்ணுக்குத் தந்த பரிசு அது. ரத்தப் புற்றுநோய். அதன்பின், சசாகி என்று அவளைக் கூப்பிடுவது போய், ‘ஹிபாகுஷா’ என்றே அவள் பரவலாக அறியப்பட்டாள். ஜப்பானிய மொழியில் ‘அணுகுண்டால் பாதிக்கப்பட்ட பெண்’ என்று பொருள்.
நாளாக நாளாக சசாகியின் உடல் மோசமாகிக்கொண்டு வந்தது. அவளின் நெருங்கிய தோழி சிஜுகோ அவளைப் பார்க்க வந்தாள். அவள் சசாகிக்கு தைரியமும் ஆறுதலும் சொல்லி, ஆயிரம் காகிதக் கொக்குகள் செய்து பிரார்த்தனை செய்துகொண்டால் உடம்பு குணமாகும் என்று சொன்னாள். ஜப்பானியர்களிடம் இப்படி ஒரு நம்பிக்கை உண்டு. காகிதத்தை மடக்கி மடக்கி உருவங்கள் செய்வது ஜப்பானியர்களுக்கே உரித்தான கலை.
தோழியின் யோசனைப்படி காகிதக் கொக்குகள் செய்யத் தொடங்கினாள் சசாகி. 644 கொக்குகள் வரை செய்தாள். அதன்பின் அவளின் உடம்பு ஓய்ந்துபோனது. அம்மா அழுதுகொண்டே, “என் கண்ணே, இதையாவது கொஞ்சம் சாப்பிடும்மா!” என்று ஜப்பானிய உணவு முறைப்படி, வடித்த சாதத்தில் கிரீன் டீயைக் கலந்து மகளுக்கு ஊட்டினாள். அதை ஒரு வாய் சாப்பிட்டுவிட்டு, “அரிசி டீ அருமையா இருக்கும்மா” என்று புன்னகைத்த சசாகி, சுற்றி நின்றிருந்த தன் உறவினர்கள், நண்பர்கள் ஒவ்வொருவரையும் பார்த்து நன்றி சொல்லிவிட்டுக் கண்களை மூடினாள். அதன்பின் அந்தக் கண்கள் திறக்கவில்லை.
அவள் உடலைப் பெற்றோரிடம் ஒப்படைப்பதற்கு முன், அணுகுண்டுத் தாக்குதலானது ஒரு மனித உடலில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அறிவதற்கான சோதனைகளைச் செய்துவிட்டே கொடுத்தது ‘அணுகுண்டு விபத்து ஆணையம்’. அவள் இறந்துபோவதற்கு முன்பேயேகூட இந்தச் சோதனைகளை அந்த ஆணையம் நடத்தியிருந்த விஷயம் பிறகுதான் வெளியில் கசிந்தது.
சசாகியின் மறைவால் விம்மி விம்மி அழுத அவளின் தோழிகள், சசாகி செய்தது போக மிச்சம் செய்ய வேண்டிய 356 கொக்குகளையும் செய்து, மொத்தம் ஆயிரம் கொக்குகளாக சசாகியின் உடலோடு சேர்த்துப் புதைத்தார்கள். அணுகுண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதியாக, ஓர் நினைவுச் சின்னமாக, ஹிரோஷிமா அமைதி நினைவுப் பூங்காவில் சிலையாக நின்றுகொண்டிருக்கிறாள் சசாகி. (அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில், சியாட்டில் நகரில் உள்ள அமைதிப் பூங்காவிலும் சசாகிக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது.)
ஹிரோஷிமாவில் குண்டு விழுந்தஆகஸ்ட் 6-ம் தேதியை ஒவ்வோர் ஆண்டும் ‘அமைதி நாளாக’க் கொண்டாடுகிறார்கள் ஜப்பானியர்கள். அன்று அவள் சிலைக்கு ஆயிரக் கணக்கில் காகிதக் கொக்குகளைச் சூட்டி அஞ்சலி செலுத்துகிறார்கள் ஜப்பானியக் குழந்தைகள்.
சசாகியின் சிலையின் பீடத்தில் இப்படிப் பொறிக்கப்பட்டுள்ளது... ‘இது எங்கள் அழுகை; இது எங்கள் பிரார்த்தனை. உலக அமைதி!’
இன்று சசாகியின் நினைவு நாள்!
நிலவளம்ரெங்கராஜன்