For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

சாமானியன் - விமர்சனம்!

08:26 PM May 24, 2024 IST | admin
சாமானியன்   விமர்சனம்
Advertisement

ம் நாட்டில் சொந்த வீடு வாங்குவது என்பது வாழ்நாள் சாதனையாகவும், மனதுக்கு மற்றும் குடும்பத்துக்கு நெருக்கமான ஒன்றாகவும் கருதப்படுகிறது. அந்த வகையில் இன்று பலரின் சொந்த வீட்டுக்கனவை நிறைவேற்றிக் கொண்டிருக்கின்றன வீட்டுக் கடன்கள். அப்படி பேங்க் லோன் வாங்கி பல்வேறு சாதாரண குடும்பங்கள் பட்ட/படும் அவஸ்தையையும், சில வங்கிகளுடன் சில கட்டுமான நிறுவனங்கள் இணைந்து செய்யும் கோல்மால் மற்றும் செய்ல்பாடுகளால் பலர் அவதிப்படுவதையும் சொல்ல முயன்று இருக்கிறார்கள்

Advertisement

கதை என்னவென்றால் சென்னையில் பிரபல வங்கிக்குள் நுழையும் ரிட்டயர்ட் மிலிட்டரிமேன் சங்கர நாராயணன் (ராமராஜன்) கையில் துப்பாக்கி, சூட்கேசில் rdx வெடிகுண்டு வைத்துக்கொண்டு வங்கி மேனேஜரையும், உதவி மேனேஜரையும் தனது கட்டுக்குள் கொண்டு வந்து மிரட்டுகிறார். அதேசமயம் சங்கர நாராயணனின் நண்பர்கள் இருவர் மேனேஜர் வீட்டிற்கும், உதவி மேனேஜர் வீட்டிற்கும் சென்று அங்குள்ள பெண்களை துப்பாக்கி முனையில் நிறுத்துகின்றனர். வங்கியில் கொள்ளையடிக்க வந்திருப்பார் களோ என்று எண்ணும்.நிலையில் வங்கியின் உதவி மேலாளரிடம் இருந்து ரூ.2.75 லட்சம் மட்டும் கேட்பவர், வங்கி மேலாளரிடம் ரூ.3.50 லட்சத்திற்கான மூன்றாண்டுகள் வட்டியை மொத்தமாக கேட்கிறார். மூன்றாவதாக, வங்கியின் மற்றொரு அதிகாரி வசித்து வரும் வீட்டை காலி செய்து, மதுரையில் உள்ள இளம் தம்பதி மற்றும் அவர்களது குழந்தையை அழைத்து வந்து குடி வைக்க வேண்டும் என்று நிபந்தனை வைக்கிறார். இப்படி ராமராஜனின் நிபந்தனைகள் மிக எளிமையானவையாக இருந்தாலும், இதற்கு பின்னணியில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் காவல்துறை குழப்பமடைவதோடு, தமிழகமே இந்த விசயத்தை உற்று நோக்க ஆரம்பிக்கிறது. இந் நிலையில், ஒரு கட்டத்தில் ராமராஜன் மதுரையில் இருந்து அழைத்து வர சொன்ன இடத்திற்கு காவல்துறை சென்று பார்க்கும் போது, அங்கு மூன்று சமாதிகள் மட்டுமே இருக்க, இறந்து போனவர்களுக்கும் ராமராஜனுக்கும் என்ன தொடர்பு, அவருடைய இத்தகைய செயலின் பின்னணி என்ன? என்பதை சாமானிய மக்களுக்கான விழிப்புணர்வு கலந்த எச்சரிக்கையுடன் சொல்வதே இந்த சாமானியன்

Advertisement

முன்னொரு காலத்தில் டூயட், ஹீரோயின் என்று அசத்தியவர் காலத்திற்கேற்ப மாறி தன் வயதிற்கேற்ப கதையைத் தேர்வு செய்ததில் முதலில் ராமராஜனுக்கு பாராட்டுக்களைத் தெரிவிக்கலாம். ஆனாலும் வயோதிகம் காரணமாக மிகவும் பலவீனப்பட்டு இருப்பது அப்பட்டமாக தெரிகிறது. பலக் காட்சிகளை ராமராஜனை உட்கார வைத்தே எடுத்து சமாளித்திருக்கிறார்கள். ஆனாலும். மகள் மீது அதீத பாசம் வைத்துள்ள பாசக்கார அப்பாவாக கண் கலங்க வைப்பதிலும். கிளைமாக்சில் பேசும் வசனங்களாலும் கைத்தட்டல் வாங்கி விடுகிறார். அதிலும் “உன் டவுசரை அவிழ்த்துடுவோம்” என்று மிரட்டும் போலீஸுக்கு “என் வாழ்க்கை டவுசரோட தான் தொடங்கியது, இன்று வரை நல்லபடியாக போயிட்டு இருக்கு, அதனால் எனக்கு அது பெரிய விசயமே இல்லை” என்று ராமராஜன் கொடுக்கும் பதிலடிக்கு தியேட்டரில் விசில் சத்தம் காதை பிளக்கிறது.

ராதாரவி, எம் எஸ் பாஸ்கர் இருவரும் சிறிய பாத்திரங்கள் என்றாலும் நிறைவாக செய்திருக்கிறார்கள். படத்தில் புதுமுக ஹீரோவாக அறிமுகம் ஆகி இருக்கிறார் லியோ சிவகுமார், அவருக்கு ஜோடியாக நக்‌ஷா சரண் நடித்திருக்கிறார். இருவரும் பாத்திரத்தை உணர்ந்து ஓவர் ஆக்டிங் இல்லாமல் எதார்த்தமாக நடிப்பை வெளிப்படுத்தி கதைக்கு இறுக்கமான முடிச்சு போட்டு விடுகிறார்கள். வங்கி அதிகாரியாக நடித்திருக்கும் போஸ் வெங்கட், கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளராக நடித்திருக்கும் மைம் கோபி, காவல்துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார், தொலைக்காட்சி நிருபராக நடித்திருக்கும் அபர்ணதி, போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் கஜராஜ், ஸ்ருமதி வெங்கட், வினோதினி உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதையோட்டத்திற்கு பயன்பட்டிருக்கிறார்கள்.

கேமராமேன் சி.அருள் செல்வன், கதைக்கு என்ன தேவையோ அதை மட்டுமே செய்திருந்தாலும், கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். குறிப்பாக நாயகன் ராமராஜனை காட்டிய விதத்தில் அவர் எந்த மெனக்கெடலும் மேற்கொள்ளவில்லை என்பது அப்பட்டமாக தெரிகிறது. படத்திற்கு பின்னணி இசையால் பெரும் பலம் சேர்த்துள்ளார். தந்தை - மகள் பாசப் பாடல்கள் இரண்டுமே சுகமான ரகம். குறிப்பாக ஆங்காங்கே பழைய பாடல்கள் சில இடங்களில் இடம்பெற்றிருப்பது கொண்டாடும் விதமாக அமைந்திருக்கிறது.ராமராஜனின் பிளாஷ் பேக் கதையை கார்ட்டூன் வடிவத்தில் சொல்லி இருப்பது கவனத்தை ஈர்க்கிறது.

கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்குப் பிறகு கம்பேக் நடித்துள்ள ராமராஜனின் சாமானியன், இப்போதைய மக்களில் பெரும்பாலோனோர் சிக்கி இருக்கும் பிரச்சினையை எடுத்துப் பேசியுள்ளதாலே குடும்பத்துடன் சென்று பார்க்க வேண்டிய படம் பட்டியலில் சேர்ந்து விட்டது.

மார்க் 3/5.

Tags :
Advertisement