For the best experience, open
https://m.aanthaireporter.in
on your mobile browser.
Advertisement

ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி, சிறையில் மரணம்!.

07:40 PM Feb 16, 2024 IST | admin
ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி  சிறையில் மரணம்
Advertisement

ழலுக்கு எதிரான தனது அறக்கட்டளை மூலமாகப் பணத்தை முறைகேடாகக் கையாடல் செய்ததாகக் கூறி 2013ம் ஆண்டு இவர் சிறையில் அடைக்கப்பட்ட ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி, சிறையில் மரணம் அடைந்து விட்டதாக தகவல் வந்துள்ளது.

Advertisement

ரஷ்ய அதிபர் புடினை எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நவல்னி கடுமையாக விமர்சனம் செய்து வந்தார். மேலும் ஊழல் எதிர்ப்பு அமைப்பையும் அவர் தொடங்கினார். இந்நிலையில் அறக்கட்டளை மூலம் பணத்தை கையாடல் செய்த வழக்கில் அலெக்ஸி நவல்னி கைது செய்யப்பட்டார்.அவருக்கு 19 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதனையடுத்து 2021 ஆண்டு முதல் யமலோ-நெனெட்ஸ் பகுதியில் உள்ள சிறையில் அவர் அடைக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவர் உயிரிழந்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சர்வதேச அளவில் அரசியல் வட்டாரங்களில் அதிகம் அடிபட்ட பெயர்களுள் ஒன்றுதான் அலெக்ஸே நவல்னி. ‘எதிர்கால ரஷ்யா’ என்ற அரசியல் கட்சியின் தலைவர். வழக்கறிஞர், ஊழலை - அதிலும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் செய்துவருவதாக நம்பப்படும் ஊழலை தீவிரமாக எதிர்த்தவர். எதிர்க்கட்சித் தலைவர்களில் ஒருவரான இவர், ரஷ்ய நிர்வாகத்தைச் சீர்திருத்த வேண்டும், ஊழல் நடவடிக்கைகளை ஒடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தவர். ரஷ்யாவில் மக்களுக்கிடையே இவருக்கு வளர்ந்துவரும் செல்வாக்கு காரணமாகவும், புதினின் கடுமையான ஒடுக்குமுறைகளுக்கு அஞ்சாமல் நாட்டில் ஊழலுக்கு எதிராகப் பெரும் போராட்டங்களைத் தொடர்ந்ததால் உலக அளவில் பேசப்பட்டவர்.

Advertisement

FILE PHOTO: Russian opposition politician Alexei Navalny attends a hearing to consider an appeal against an earlier court decision to change his suspended sentence to a real prison term, in Moscow, Russia February 20, 2021. REUTERS/Maxim Shemetov/File Photo

நவல்னிக்கு யூடியூபில் 60 லட்சத்துக்கு மேற்பட்டும் ட்விட்டரில் 20 லட்சத்துக்கு மேற்பட்டும் ஆதரவாளர்கள் இருந்தது அவருடைய செல்வாக்கைக் காட்டியது. இவ்விரு சமூக ஊடகங்களைப் பயன்படுத்திதான் ரஷ்ய அரசின் ஊழல்கள் தொடர்பான ஆதாரங்களை அவர் வெளிப்படுத்தினார். நவல்னி தொடங்கிய ‘ஊழலுக்கு எதிரான அறக்கட்டளை’க்கு (எஃப்.பி.கே) மக்களிடையே ஆதரவு அதிகம்.

ரஷ்யாவின் உயர் அதிகாரிகள், அரசியலர்கள் சம்பந்தப்பட்ட ஊழல்களை ஆவணபூர்வமாக அம்பலப்படுத்தினார் நவல்னி. அப்போது பிரதமர் பதவியில் இருந்த திமித்ரி மெத்வதேவ் தொடர்பான ஆவணங்களை வெளியிட்ட பிறகு, நாடு முழுவதும் மக்கள் கிளர்ந்தெழுந்து போராடினார்கள். ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்திய நவல்னி மீதே ரஷ்ய அரசு 2013 ஜூலையில், பணத்தை முறைகேடாகக் கையாடல் செய்ததாகக் கூறி வழக்குத் தொடுத்து, தண்டனையும் பெற்றுத்தந்தது.ஆனால், இந்த ஆணை நிறைவேற்றப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டது,

2014-ல் நவல்னி மீது மேலும் ஒரு நிதி கையாடல் வழக்கு போடப்பட்டது. இவ்விரண்டும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை. மேற்கொண்டு தேர்தல்களில் அவர் போட்டியிடக் கூடாது என்பதற்காகப் போடப்பட்டவை. 2018-ல் நடைபெறவிருந்த அதிபர் தேர்தலில் போட்டியிட நவல்னி தயாரானார். 2016 டிசம்பரிலேயே பிரச்சாரத்தைத் தொடங்கினார். புதினின் ஆணைக்குக் கட்டுப்பட்ட ரஷ்ய தேர்தல் ஆணையமோ, நவல்னி தேர்தலில் போட்டியிடத் தடைவிதித்தது. அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையிட்டார். உச்ச நீதிமன்றமும் அவரது மனுவை ஏற்காமல் நிராகரித்தது.

இதையடுத்து, புதினின் ‘ஐக்கிய ரஷ்யா கட்சி’க்குக் கிடைக்கக்கூடிய இடங்களைக் குறைக்க, வியூக அடிப்படையில் வாக்களிக்கும் முறையை வாக்காளர்களிடம் நவல்னி பரப்பினார். அதன்படி ‘ஐக்கிய ரஷ்யா கட்சி’யைத் தவிர, வேறு எந்தக் கட்சியின் வேட்பாளர்களுக்கும் மக்கள் வாக்களிக்கலாம். இது புதினுக்குக் கோபத்தை அதிகப்படுத்தியது.

கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் டாம்ஸ்க் நகரிலிருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் செல்லும்போது அலெக்ஸி மயங்கி விழுந்தார். இதனைத் தொடர்ந்து அவர் ஜெர்மனியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அலெக்ஸி நவல்னிக்கு விஷம் வைக்கப்பட்டிருப்பதை ஜெர்மனி அரசு உறுதிப்படுத்தியது.

நரம்புகளைப் பாதித்து செயலிழக்க வைக்கும் நோவிசோக் என்ற விஷம் அவர் மீது பயன்படுத்தப்பட்டது தெரியவந்தது. ஜெர்மனியின் பெர்லின் நகரில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஒரு மாதத்துக்குப் பிறகு அவர் மருத்துவமனையிலிருந்து வெளியே வந்தார். தன்னைக் கொல்ல நடந்த முயற்சிக்கு புதின்தான் காரணம் என்று குற்றம்சாட்டினார். ஃபெடரல் செக்யூரிட்டி சர்வீஸ் (எஃப்.எஸ்.பி) என்ற ரஷ்ய அரசின் உளவு அமைப்புதான் இதைச் செய்தது என்பது தெரியவந்தது. இதையடுத்து, ரஷ்ய உயர் அதிகாரிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம், பிரிட்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் தடைவிதித்தன.

2021 ஜனவரி 17-ல் நவல்னி மீண்டும் ரஷ்யாவுக்குத் திரும்பினார். பரோல் விதிமுறைகளை மீறிவிட்டார் என்று குற்றம்சாட்டி, அவரை மீண்டும் சிறையில் அடைந்தது ரஷ்ய அரசு. புதினின் அரண்மனை என்ற பெயரில் அவரைப் பற்றிய ஊழல்களை அம்பலப்படுத்துவதாகக் கூறி மேலும் ஒரு ஆவணம் வெளியானது. இதையடுத்து, மக்கள் மீண்டும் நாடு முழுக்கப் புதினுக்கு எதிராகப் பெருந்திரளாக அணிவகுத்துப் போராட்டம் நடத்தினர்.

இதையடுத்து, அதே ஆண்டு பிப்ரவரி 2-ல், ஏற்கெனவே ஒரு வழக்கில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தண்டனைத் தீர்ப்புக்கு உயிர் கொடுத்து, அவரை மீண்டும் சிறையில் அடைத்தது அரசு. விளாடிமிர் ஒப்ளாஸ்ட் என்ற இடத்தில் இரண்டரை ஆண்டு கட்டாய உடலுழைப்புச் சிறைவாசம் அவருக்கு விதிக்கப்பட்டது. சிறையில் அடைக்கப்பட்ட பிறகு மீண்டும் கொடுமைப்படுத்தப்பட்டார் நவல்னி.

மனசாட்சியின் கைதி என்று அவரை வர்ணித்த ஆம்னஸ்டி இன்டெர்நேஷனல் அமைப்பு, அவருக்கு அங்கீகாரம் அளித்தது. மனித உரிமைகளைக் காப்பதற்காகத் தொடர்ந்து போராடும் அவருக்கு 2021-ல் சகரோவ் விருது வழங்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement