"ஜித்தன் ரமேஷ் என்கிற நடிகருக்காகவே உருவாக்கப்பட்ட கதை தான் ரூட் நம்பர் 17" ; இயக்குநர் அபிலாஷ் ஜி.தேவன்
நேமி புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர் அமர் ராமச்சந்திரன் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ரூட் நம்பர் 17’. 14 சர்வதேச விருதுகளை வென்ற தாய்நிலம் படத்தை இயக்கிய இயக்குநர் அபிலாஷ் ஜி.தேவன் இந்த படத்தை இயக்கியுள்ளார். கதாநாயகனாக ஜித்தன் ரமேஷ் நடித்துள்ளார். கதாநாயகியாக அஞ்சு பாண்டியா என்பவர் நடித்துள்ளார். ஹரிஷ் பெராடி வில்லனாக நடிக்க, அருவி மதன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் அமர் ராமச்சந்திரன், நிஹால், அகில் பிரபாகர், ஜெனிபர், பிந்து, கார்த்திக் விஸ்வநாதன் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். பிரபல மலையாள இசையமைப்பாளர் அவுசப்பசன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடல்களை யுகபாரதி, கார்த்திக், கவிஞர் செந்தமிழ்தாசன் ஆகியோர் எழுதியுள்ளனர். இப்படம் வரும் டிச-29ஆம் தேதி வெளியாவதை முன்னிட்டு இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னை விஜயா போரம் மாலில் ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினார்களாக தயாரிப்பாளர் டி.சிவா, பின்னணி பாடகிகள் சுஜாதா மோகன், ஸ்வேதா மோகன், நடிகைகள் வசுந்தரா, ஜித்தன் ரமேஷுடன் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒன்றாக பங்கேற்ற நடிகர்கள் ஆரி, சுரேஷ் சக்கரவர்த்தி, சோமசேகர், அர்ச்சனா, அறந்தாங்கி நிஷா மற்றும் நடிகை கோமல் சர்மா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தயாரிப்பாளர் டி.சிவா மற்றும் நடிகர் ஆரி இருவரும் இந்தப்படத்தின் இசையை வெளியிட படக்குழுவினர் பெற்றுக்கொண்டனர்.
இந்த நிகழ்வில் இயக்குநர் அபிலாஷ் ஜி.தேவன் பேசும்போது, "ஜித்தன் ரமேஷ் என்கிற ஒரு நடிகருக்காகவே உருவாக்கப்பட்ட படம் இது. எனக்கும் அவருக்கும் நான் சினிமாவுக்கு வாய்ப்பு தேடி வந்த காலத்திலிருந்து நல்ல நட்பு தொடர்ந்து வருகிறது. படப்பிடிப்பை கிட்டத்தட்ட பத்து ஷெட்யூல்களாக இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தி இருக்கிறோம். தாங்க முடியாத கடும் வெப்பத்தில் 29 நாட்கள் நடித்துள்ளார் ஜித்தன் ரமேஷ். பூமிக்கடியில் அமைக்கப்பட்ட ஒரு அறையில் காட்சிகளை படமாக்கியபோது ஒவ்வொரு 15 நிமிடத்திற்கும் ஒரு முறை வெளியே வந்து குளிர்ந்த நீரை மேலே ஊற்றிக் கொண்டு அதன்பிறகு மீண்டும் அந்த காட்சியில் நடிப்பதற்காக கீழே வந்து விடுவார்.
பொதுவாக தயாரிப்பாளர்கள் செட்டுக்கு வந்தால் ஒரே டென்ஷனாக இருக்கும் ஆனால் எனது தயாரிப்பாளர் செட்டுக்கு வந்தாலே கலகலப்பாக இருக்கும். என் முதல் படமும் இவர் தான் தயாரித்தார். இயக்குனர் அவுசப்பச்சன் இந்த படத்தின் இசையமைப்பாளராக மட்டுமல்ல படத்தின் ஸ்கிரிப்டிலும் சில ஆலோசனைகளை சொல்வார். கிட்டத்தட்ட ஒரு இணை இயக்குநர் என்று கூட அவரை சொல்லலாம்.
ஒளிப்பதிவாளர் பிரசாந்த் கிட்டத்தட்ட ஆறு அடிக்கு மேல் உயரம் என்பதால் பல காட்சிகளை கிரேன் உதவி இல்லாமலேயே படமாக்கினோம். இந்த படத்தில் இன்னொரு முக்கிய வேடத்தில் நடித்துள்ள அருவி மதன் தமிழ் சினிமாவில் 100% நல்ல மனிதர் என்று சொல்லலாம். இந்த படத்தின் படப்பிடிப்பு திருநெல்வேலி பகுதியில் நடைபெற்ற போது தொடர்ந்து நான்கு நாட்கள் விழாமல் மழை பெய்து படப்பிடிப்பை நடத்த முடியாத நிலை இருந்தது. அதனால் படப்பிடிப்பை தற்காலிகமாக ரத்து செய்துவிட்டு இன்னொரு சமயம் வந்து நடத்தலாம் என அனைவருக்கும் சம்பளத்தை கொடுத்துக் கொண்டிருந்தோம். ஆனால் அருவி மதன் இந்த நான்கு நாட்கள் படப்பிடிப்பு நடத்தாதது தயாரிப்பாளர், இயக்குனர் யாருடைய தவறும் இல்லை. இயற்கையின் விளைவு. நான் உழைப்பை கொடுக்காத எந்த விஷயத்திற்கும் ஊதியம் பெற மாட்டேன் என்று சொன்னார். அந்த அளவு உன்னதமான மனிதர். இந்த படத்தில் எதெல்லாம் தரமாக இருக்கிறதோ அது என்னுடைய மொத்த குழுவின் உழைப்பு என்று சொல்லலாம். எங்கெல்லாம் தரம் சற்று குறைவாக இருக்கிறதோ அதை என்னுடைய மைனஸ் பாயிண்ட் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த படத்தின் இரண்டாவது ஹீரோ அகில் அவரை மாதிரி ஒரு பையனை பார்த்ததில்லை. நாம் சொன்னதை அப்படியே கேட்டு நடிக்கும் நடிகர். 2 மணி நேரம் போரடிக்காமல் போகும் விதமாக இந்த படத்தை கொடுக்க முயற்சித்து இருக்கிறேன். பார்த்துவிட்டு சொல்லுங்கள்' என்றார்.
தயாரிப்பாளர் டி.சிவா பேசும்போது, "ரமேஷ் எனக்கு பெர்சனாலாகவே பிடித்த ஒரு நடிகர். ரொம்ப நாளாவே அவருக்கு ஒரு பிரேக் வரணும்னு எதிர்பார்த்தேன். அந்தவகையில் இந்த படம் மூலம் அவருக்கு நல்ல ரூட் கிடைத்திருக்கிறது என நம்புகிறேன். படத்தின் டிரைலர் 24 மணி நேரத்தில் வைரலாகும் அளவுக்கு விஷயம் இருக்கிறது" என்றார்.
நடிகைஅறந்தாங்கி நிஷா பேசும்போது, “பிக் பாஸ் வீட்டிலேயே ரமேஷ் திறமை இருந்தும் அதை வெளிப்படுத்துவதற்கு நல்ல வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருக்கிறேன் என கொஞ்சம் வருத்தப்பட்டு சொல்வார். அதை நான் பார்த்திருக்கிறேன். அப்படி ஒரு வாய்ப்பு இந்த படத்தின் மூலமாக அவருக்கு கிடைத்திருக்கிறது. அவர் வெற்றி பெற வாழ்த்துக்கள்” என்றார்.
நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி பேசும்போது, “ரமேஷ் பிக்பாஸ் வீட்டில் தான் அமைதியாக இருப்பார். ஆனால் நடிப்பில் மிரட்டி விடுவார். அவரைப் பொறுத்தவரை நல்ல ரூட்டில் தான் போய்க் கொண்டிருக்கிறார். படத்தின் டைட்டில் படி 1ம் 7ம் 8. சீனாவில் இது ராசியான நம்பர். அதனால் வெற்றி உறுதி” என்று கூறினார்.
நடிகை வசுந்தரா பேசும்போது, “அபிலாஷுடன் ஏற்கனவே ஒரு முறை பணியாற்றியுள்ளேன். ரொம்பவே ஆர்வமுடன் ஈடுபாட்டுடன் கடின உழைப்பை தருபவர். இந்த படத்திலும் அதேபோன்ற உணர்வை கொண்டு வந்திருப்பார் என்று நினைக்கிறேன். அந்த உழைப்புக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும்” என்று கூறினார்.
இரண்டாவது நாயகன் அகில் பேசும்போது, "மலையாளத்தில் சில படங்களில் நடித்திருந்தாலும் தமிழில் இதுதான் எனக்கு முதல் படம். ஷூட்டிங் ஸ்பாட் கலகலப்பாக இருந்தாலும் படப்பிடிப்பில் நிறைய ரிஸ்க் எடுத்து பண்ணியிருக்கிறோம். பைட் மாஸ்டர் ஜாக்கி ஜான்சன் நிறைய உதவி செய்தார். இது போன்ற ஒரு அழகான நல்ல கேரக்டரை கொடுத்ததற்காக இயக்குநர் அபிலாஷுக்கு நன்றி" என்று கூறினார்.
நாயகி அஞ்சு பேசும்போது, “தமிழில் இதுதான் எனக்கு முதல் படம்.. தமிழில் பேச ஆசையாக இருந்தாலும் தவறாக பேசிவிடுவோமோ என பயமாக இருக்கிறது. ஆனால் தமிழக இளைஞர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்தப்படத்தில் இயக்குனர் அபிலாஷ் உள்ளிட்ட அனைவருமே கடின உழைப்பை கொடுத்துள்ளனர். குறிப்பாக பைட் மாஸ்டர் ஜாக்கி சான் பணி ரொம்பவே கடினமானது” என்றார்.
பின்னணி பாடகி சுஜாதா மோகன் பேசும்போது, “நான் பாடிய பல படங்களின் இசை வெளியீட்டு விழாக்களுக்கு கூட நான் சென்றதில்லை. இன்று என் மகளுடன் இந்த விழாவுக்கு வந்திருக்கிறேன் என்றால் அது இசையமைப்பாளர் அவுசப்பச்சன் சாருக்காத்தான். அவர் என்னுடைய குரு. தமிழ் திரையுலகிற்கு அவரை வரவேற்கிறேன்” என்றார்.
நடிகர் அரிஷ் குமார் பேசும்போது, நான் இந்தப்படத்தில் நடிக்கவில்லை. நடித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என நினைக்கிறன். அபிலாஷும் நானும் அடிக்கடி சண்டை போட்டுக்கொண்டாலும் அது ஸ்கிரிப்ட்டுக்காக போட்டுக்கொளும் ஆரோக்கியமான சண்டையாகத்தான் இருக்கும். ஜித்தன் ரமேஷ் சார் நம்மை போன்றவர்களுக்கு வெற்றி தோல்வி எல்லாமே ஒன்று தான்.. நாம் நம் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு நடித்துக்கொண்டே இருக்கவேண்டும்“ என்றார்.
நடிகை கோமல் சர்மா பேசும்போது, “இயக்குனர் அபிலாஷுடன் அமர்ந்து இந்தப் படத்தை பார்த்தேன். இடையில் பிரேக் விட்டபோது கூட எதற்காக படம் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கும்போது இப்படி நிறுத்துகிறார்கள் என்று நினைக்கும் அளவிற்கு படு வேகமாக கதை நகர்கிறது. அது மட்டுமல்ல இயக்குநர் அபிலாஷ் இந்த படத்திற்காக ஒவ்வொரு காட்சிகளையும் எடுக்க எவ்வளவு கஷ்டப்பட்டோம் என்பது பற்றியும் விளக்கிக் கூறினார். படத்தில் நடித்துள்ள அத்தனை நடிகர்களுமே சிறப்பாக நடித்துள்ளார்கள்.” என்றார்.
இசையமைப்பாளர் அவுசப்பச்சன் பேசும்போது, “திரையுலகில் எனது பொன்விழா ஆண்டில் முதன்முதலாக ஒரு தமிழ்ப்படத்திற்கு இசையமைக்கிறேன். நான் இருபது வயது வரை தான் முழுவதும் கேரளாவில் வாசித்தேன். எனது சினிமா பயணத்தை இங்கே சென்னையில் தான் துவங்கினேன். கிட்டத்தட்ட 75 சதவீத நாட்கள் இங்கே சென்னையில் தான் இருந்துள்ளேன். இதுவரை பல நூறு படங்களுக்கு இசையமைத்துள்ளேன். ஆனால் தமிழில் ஏன் நீங்கள் இசையமைக்கவில்லை என கேட்டகிறார்கள். எனது 35வது வருட திரையுலக பயணத்தின் போதுதான் என்னிடம் பணியாற்றிய வித்யாசாகர், ஹாரிஸ் ஜெயராஜ் எல்லோரும் தமிழ் சினிமாவில் பிரமாதமாக இசையமைத்துக்கொண்டு இருந்தார்கள். நான் போய் ஏன் அவர்களை கெடுக்க வேண்டும் என மலையாள திரையுலகிலேயே நின்று விட்டேன்” என்றார்.
தயாரிப்பாளர் அமர் பேசும்போது, "இந்த படத்தில் எங்களுடன் இணைந்ததற்காக முதலில் இசையமைப்பாளர் அவுசப்பச்சனுக்கு முதலில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நான் திரை உலகிற்கு கிட்டத்தட்ட புது ஆள் தான். மலையாளத்தில் மூன்று படங்களையும் தமிழில் இப்போது இரண்டாவது படத்தையும் தயாரித்து உள்ளேன். ஆனால் எங்களை புதியவராக நினைக்காமல் தனது இசையால் மிகப்பெரிய ஆதரவு கொடுத்துள்ளார் அவுசப்பச்சன். அபிலாஷ் இந்த கதையை என்னிடம் சொன்னபோது இதை மலையாளத்தில் அல்லது தமிழில் எதில் தயாரிக்க விரும்புகிறீர்கள் என்று என்னிடம் கேட்டார். நான் யோசிக்காமல் தமிழ் தான் பெட்டர் என்று கூறினேன். அபிலாஷ் தான் ரமேஷை எனக்கு அறிமுகப்படுத்தினார். இந்த படத்திற்கு அவரை விட நல்ல தேர்வு கிடையாது.. நான் நடிகர் ஆரியுடன் ஒரு படத்தில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். பிக் பாஸ் நிகழ்ச்சியில் 100 நாட்களில் ஜித்தன் ரமேஷுடன் உருவான அந்த பிணைப்புக்காக இந்த நிகழ்வில் கலந்து கொண்ட அனைவரும் எங்களது குழுவை வாழ்த்த வந்து ஆதரவு தந்ததற்கு நன்றி.
இந்த படத்தை முடித்ததும் இதை வெளியிடுவதற்கான விஷயங்களில் தயாரிப்பாளர் ஆர்.பி சவுத்ரி சார் மிகப்பெரிய உதவி செய்தார். அவருக்கு நன்றி. அருவி மதன், அஞ்சு உள்ளிட்டவர்கள் கடின உழைப்பை கொடுத்து உதவியுள்ளனர். அவர்களுக்கும் நன்றி. குறிப்பாக நல்ல படங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் மீடியாக்கள் இந்த படம் இன்னும் சிறப்பாக வர உதவ வேண்டும். நான் இப்போதும் மருத்துவராக தான் பயிற்சி செய்து கொண்டிருக்கிறேன். நான் ஒரு மகப்பேறு மருத்துவர். லேப்ராஸ்கோபிக் சர்ஜனும் கூட. என் பயணத்தில் மருத்துவம், சினிமா இரண்டுக்குமே சம முக்கியத்துவம் கொடுக்கிறேன் என்றாலும் எனக்கு சினிமாவை விட என் நோயாளிகள் தான் முக்கியம். அங்கே வேலை இல்லை என்றால் தான் அதுவும் நான் இல்லையென்றால் பார்த்துக்கொள்ள வேறு மருத்துவர்கள் இருக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்தி விட்டு தான் வெளியே கிளம்பி வருவேன். இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு நாளை மருத்துவமனைக்கு செல்ல வேண்டும். அங்கு கிடைக்கும் பணத்தில் தான் இங்கு படத்தில் வேலை பார்ப்பவர்களுக்கு பேட்டா கொடுக்க முடியும்" என்றார்.
நாயகன் ஜித்தன் ரமேஷ் பேசும்போது, “நானும் அபிலாஷும் எப்போது ஜாலியாக பேசிக்கொண்டிருப்போம். அப்போது தாய்நிலம் என்கிற படத்தை எடுத்திருந்த அவர் உங்களுக்காக ஒரு நல்ல கதை வைத்திருக்கிறேன் நீங்கள் தான் நடிக்க வேண்டும் என்று சொன்னார். முதலில் கதையை சொல்லுங்கள் நல்லா இருக்கா இல்லையா என்று அப்புறம் சொல்லலாம் என்று கூறினேன். ஒரு மணி நேரம் கதை சொன்னார். ஆரம்பித்தது தெரிந்தது. ஆனால் முடித்தபோது ஒன்றுமே புரியவில்லை. அந்த அளவிற்கு விறுவிறுப்பாக கதை இருந்தது. 90% படம் காட்டில் தான் படமாக்கப்பட்டது அதிலும் நிறைய காட்சிகள் ஒரு குகையில் தான் எடுக்கப்பட்டன. அந்த குகைக்குள் கிட்டத்தட்ட 50 பேருக்கு மேல் இருந்து நடித்தோம். மூச்சு விடவே சிரமப்பட்டோம். அது மட்டுமல்ல இந்த படத்தின் பட்ஜெட்டிலேயே மெழுகுவர்த்திக்கு தான் அதிகம் செலவழித்து இருப்பார்கள் என நினைக்கிறன். அந்த அளவிற்கு படப்பிடிப்பு தளத்தில் மெழுகுவர்த்தி பயன்பட்டது. இந்த படத்தின் நாயகி அஞ்சு, தண்ணீரில் குளித்ததை விட சேற்றில் தான் அதிகம் குளித்து இருப்பார். கிட்டத்தட்ட 30 நாட்கள் இதே போன்று தான் அவரது நிலை இருந்தது. இடையில் கால் உடைந்து ஓய்வு எடுக்க வேண்டியது கூட இருந்தது. ஆனாலும் தனது பணியை சிறப்பாக முடித்துக் கொடுத்தார். அவுசப்பச்சன் சாரின் கடின உழைப்பால் பின்னணி இசை மிகப்பெரிய அளவில் உருவாகி இருக்கிறது. படம் வெளியாகுமபோது நிச்சயம் பின்னணி இசை ஹிட் ஆகும்” என்று கூறினார்.
நடிகர் ஆரி பேசும்போது, “இந்த விழாவில் எல்லா பாடகர்களையும் அழைத்து கவுரவப்படுத்தி இருக்கிறார்கள். ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது. குறிப்பாக மலையாள இசையமைப்பாளர் அவுசப்பச்சன் சினிமாவிற்கு வந்தே 50 வயது ஆகிவிட்டது. ஆனால் அவ்வளவு இளமையான இசையை கொடுத்திருக்கிறார். அவர் உடம்புக்கு தான் வயதாகி இருக்கிறது. இசைக்கு வயதாகவில்லை. நெடுஞ்சாலை சமயத்தில் அபிலாஷ் என்னிடம் ஒரு முறை கதை சொல்ல வந்தார். அப்போது இருந்து நல்ல பழக்கம். பின்னர் சில வருடங்கள் கழித்து தபால் அலுவலகம் மூலமாக சேமிப்பு கணக்கு துவங்கலாம் என்கிற பிரச்சாரத்தை தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் கேரளாவில் முன்னெடுத்த போது அங்கே எனக்கு உறுதுணையாக நின்று உதவிகளை செய்தவர் அபிலாஷ்.
ஜித்தன் ரமேஷுக்கு முன்னாடியே என்னிடம் இந்த கதையை அவர் சொல்லி இருக்கிறார். ஹீரோவாக நடித்து தோத்தவன் இருக்கிறான். ஆனால் வில்லனாக நடித்து தோத்தவன் யாரும் இல்லை. வில்லனாக காலடி எடுத்து வச்சிருக்கீங்க. இந்த சினிமா உங்களை நிச்சயம் உயரத்துக்கு கொண்டு போய் வைக்கும். நானும் அடுத்த வருடம் வெளியாகும் ஒரு படத்தில் உங்களை போலவே ஒரு வில்லனாக நடித்திருக்கிறேன்.
அதேபோல இந்த மழை வெள்ள காலத்தில் அறந்தாங்கி நிஷா, கே பி ஒய் பாலா ஆகியோர் செய்த உதவிகளை பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருந்தது. எல்லோருமே பெரிய நடிகர்கள் உதவி செய்தால் மட்டுமே விளம்பரப்படுத்துகிறார்கள். உதவி செய்தவர்கள் யாராக இருந்தாலும் கொடுத்தவர்களை கொண்டாட வேண்டும் அவர்களும் ஹீரோதான். தயாரிப்பாளர் அமர் ஒரு சாமானியனாக இருந்து மருத்துவராகி சினிமா கனவுடன் 5 படங்களை எடுத்து அதை ரிலீஸ் செய்தும் இருக்கிறார் என்றால் எந்த அளவிற்கு சினிமா மீது அவருக்கு ஆர்வமும் கடின உழைப்பும் இருக்கும் என்பது தெரிகிறது” என்று கூறினார்.