ராபர் – விமர்சனம்!
பல ஆண்டுகளாகவே சென்னை மாநகரில் தினமும் நூற்றுக்கணக்கில் செல்போன் பறிப்புகளும், தினசரி பத்துக்கும் அதிகமான செயின் பறிப்புகளும் சாதாரணமாக நடக்கின்றன. செயின் பறிப்புகளில் அதிகம் பாதிக்கப்படுவது சாதாரணப் பெண்களே. இவர்களால் வலுவாகப் போராட முடியாது என்பதால் அவர்களை குறிவைத்து செயினைப் பறித்துச் செல்லுகின்றனர்.இவ்வாறு பறிப்பவர்கள் கொஞ்சம் கூட இரக்க உணர்வு இல்லாமல் தங்கள் காரியத்திலேயே குறியாக இருப்பதால் பெண்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். செயின் பறிப்பில் பாதிக்கப்பட்ட பெண்கள் திடீர் தாக்குதலால் நிலைகுலைந்து போகின்றனர். இப்படியான தகவலின் பின்னணியை விரிவாக ஆனந்த விகடனில் 1990களில் கவர்ஸ்டோரி எழுதி உள்ளேன்.செயின் பறிப்பு ஆசாமிகளுடன் போராடும் பெண்கள் கீழே விழுந்து காயமடைகிறார்கள், பொதுவெளியில் விழுந்து அடிபடும்போது அவமானகரமான சூழ்நிலையை சந்திக்கின்றனர். நகைகயைப் பறிகொடுத்த மன உளைச்சலில் காவல்நிலையத்தை அணுகும் அவர்களிடம் போலீஸார் நடந்துகொள்ளும் விதம் மேலும் மன உளைச்சலை அளிக்கும் விதத்தில் உள்ளதை கூட அதில் ரிப்போர்ட் செய்திருப்பேன். மேலும் டிஜிபி ஸ்ரீபால் & துரை காலத்திலேயே சிசிடிவி குறித்தும் விரிவாகப் பேசி இருக்கிறேன்.இப்படி இருக்க 35 ஆண்டுகளாகியும் தீர்க்கப்படாத இந்த செயின் ஸ்நேட்சிங் குறித்து ஒரு சினிமாவை ஒரு பத்திரிகையாளரே -அதுவும் ஒரு லேடி புரொடியூஸ் செய்திருப்பதற்கே ஒரு சல்யூட் ..!
கதை என்னவென்றால் வில்லேஜில் அம்மாவை தனியாக விட்டுவிட்டு சென்னைக்கு தனியார் நிறுவனத்தில் வேலை செய்ய வரும் ஹீரோ(?) ( சத்யா) பண ஆசை, பெண் ஆசைக்கு அடிமையாகி சாலையில் நடந்து செல்லும் பெண்களிடம் செயின் பறிப்பு, கத்தி காட்டி மிரட்டி கொள்ளை சம்பவம் என சட்ட விரோத செயல்களை கேஷூவலாக செய்து வருகிறான். அப்படியொரு நிகழ்வின் போது இளம் பெண் ஒருவர் மாண்டு விடுகிறார். அதில் சரியான எவிடென்ஸ் இல்லாத நிலையில் தப்பித்து விடுகிறான். அதே சமயம் கோரமாக கொலையான அன் பெண்ணின் அப்பா தன் மகளை கொன்றவனை கடத்தி கொல்ல முடிவு செய்கிறார். இதை அடுத்து அடுத்தடுத்து டிவிஸ்ட்கள் நிகழ்கின்றன. அது என்ன என்பதுதான் ராபர்.
ஹீரோவாக வரும் சத்யா, தனது கேரக்டரின் வலுவைப் புரிந்து படு கேஷூவலாக கொடுத்து ஏனைய கதாபாத்திரத்தோடு ஒன்றி பாஸ் மார்க் வாங்க மெனக்கெடுகிறார். குறிப்பாக ஆரம்ப காட்சியில் இரண்டு பெண்களை வீட்டிற்கு வரவழைத்து அவர்களிடம் அடி வாங்கும் காட்சியில் அட சொல்ல வைத்து இருக்கிறார். அத்துடன் நகையை திருடும் போது மாட்டிக் கொண்டு ஓடும் காட்சியிலும், க்ளைமாக்ஸ் காட்சியில் தனது தாயுடன் உரையாடும் காட்சியிலும் தனக்கான உடல்மொழியை நன்றாகவே பயன்படுத்தி பாஸ் மார்க் வாங்கி விடுகிறார். ஆனாலும், பெரும்பாலான காட்சிகள் அவர் முகத்தை மறைத்தபடி வந்து சமாளித்தாலும் நடிப்பில் இன்னும் பயிற்சி பெற்றிருக்கலாம் என்றும் வாய் விட்டு சொல்ல வைத்துவிட்டதும் சோகம்.
ஹீரோவின் அம்மாவாக வரும் தீபாசங்கர் இப்படத்தில் ஏற்றிருக்கும் கேரக்டர் ரொம்ப புதுசு. மகன் மீது பாசத்தைக் கொட்டும் அவரது அன்பு ஒரு பக்கம் இருக்கும் போதும் அதற்கு தகுதி இல்லாமல் மகன் விட்டேத்தியாக வாழ்ந்து கொண்டிருப்பதும், இந்த உண்மை அந்த அம்மாவுக்கு தெரிந்தால் என்னாகும்? என்று ரசிகனை பதற வைத்து விடுவதில் ஜெயித்து விடுகிறார். அதிலும் கிளைமாக்சில் அந்த தாய் எடுக்கும் முடிவு மிகக் கனமானது மட்டுமல்ல காண்போரின் மனதை பிளந்து விடுவதென்னவோ நிஜம்.
மகளைப் பறிகொடுத்து ஆவேசநிலை அப்பாவாக வரும் ஜெயப் பிரகாஷ் தனக்கே உரிய அனுபவத்தைக் காட்டி சபாஷ் சொல்ல வைக்கும்படி நடித்து அசத்தியிருக்கிறார். குறிப்பாகமகள் மறைவுச் செய்தி கேட்டு உடைந்து கதறுவது நெகிழ்ச்சி.
கேமராமேன் என்.எஸ்.உதயகுமார் ஒளிப்பதிவில் சென்னை நகரை மெட்ராஸ் ஆகக் கூட காட்ட மெனக்கெட்டு இருக்கிறது. செயின் பறிப்பால் மரணிக்கும் அந்த இளம் பெண் ஸ்கூட்டரில் இருந்து பறக்கும் காட்சியை வித்தியாசமாக படமாக்கி இருக்கிறார்.
மியூசிக் டைரக்டர் ஜோகன் சிவனேஷ் இசை படத்தின் ட்ராவலுக்கு பொருத்தமாக ட்ராவல் செய்து இருக்கிறது. அதிலும் அந்தோணி தாசன் இடம்பெறும் பாடல் லவ்லி.
வழக்கம் போல் குறைகள் சில பல இருந்தாலும் ஒரு செயின் திருடனின் வாழ்வியல் என்பதாலோ என்னவோ திரைக்கதையில் போதிய வலுவில்லை என்றாலும் ஆரம்ப பேராவில் சொன்னது போல் டைரக்டர் ஆனந்த கிருஷ்ணன் கதை, திரைக்கதை ஏதோ ஒரு ஆர்டினரி மர்டரை காட்டினோம்.. அதை கண்டுபிடித்தோம் என்ற யூசூவல் பார்முலா படமாக இல்லாமல் பெண்கள் விழிப்புணர்வுக்கான படமாக உருவாக்கி இருக்கும் டீமுக்கு ஒரு பொக்கே
மார்க் 3/5