புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் | 'உலகத் தமிழ் நாளாக' அறிவிக்க கோரி உலகளவிலான தமிழ் அமைப்புகள் தீர்மானம்!
தமிழ் இலக்கியத்தில் மிகவும் புகழ்பெற்ற கவிஞர் மற்றும் சமூக சீர்திருத்தவாதி பாரதிதாசன். அவரது உண்மையான பெயர் கனக சுப்புரத்தினம். பாரதிதாசனின் படைப்புகள் சமூக நீதி, பெண்கள் கல்வி, தாழ்த்தப்பட்ட வர்க்கங்களின் உரிமைகள் ஆகியவற்றை ஆதரித்தன.பாரதியார் மீது கொண்ட அதீத பிரியத்தினால் தனது பெயரை பாரதிதாசன் என்று மாற்றிக்கொண்டவர். பாரதிதாசன், கிண்டல்காரன், கிறுக்கன், கண்டழுதுவோன் என்று புனைப்பெயர்களில் எழுதினார். தமிழை ஒரு தாய்மொழியாக மட்டுமின்றி, ஒரு தெய்வமாகவும் கருதி, தமிழ்த்தாய் என்ற கருத்தை வலியுறுத்தினார். அவரது படைப்புகளில், குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு மற்றும் புதிய ஆத்திசூடி போன்றவை சிறப்பிடம் பெற்றவை. தனது மனைவியை ‘தெய்வசக்தி’ என்று அழைத்து அவரது படைப்புகளில் அவரைப் போற்றினார். அதன் மூலம் பெண்களின் மதிப்பை உயர்த்த முயற்சித்தார். ‘தமிழுக்கும் அமுதென்று பேர்’ என்கிற தேன் சொட்டும் பாடல் வரிகளை எழுதியவர் பாவேந்தர்.குடும்பக் கட்டுப்பாடு பற்றி இந்தியாவிலேயே முதன் முதலில் பாட்டெழுதிய முதல் பாவலர் என்ற சிறப்புப் பெற்றார். தமிழ் சமூகத்தைப் பகுத்தறிவு வழி நடத்திடவும் தனித்தமிழ்ப் பற்றினை வெளிப்படுத்தும் விதமாகப் பாரதிதாசன் கவிதைகள் இருந்தன. தமிழியக்கம், தமிழச்சியின் கத்தி, தமிழுக்கு அமுதென்று பேர் போன்ற படைப்புகள் தமிழ்த்தேசிய அரசியலை கூர்மைபடுத்தின. அப்பேர்பட்ட புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்தநாள் உலகம் முழுவதும் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், ஏப்ரல் 29ம் தேதியை உலகத் தமிழ் நாளாக அறிவிக்க தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை விடுத்து உலகளவில் செயல்பட்டு வரும் பல்வேறு தமிழ் அமைப்புகள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.
அமெரிக்காவில் இயங்கி வரும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தமிழ் மன்றம், கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம், இலெமுரியா அறக்கட்டளை, பெங்களூருவின் தமிழ் அறக்கட்டளை, உலகத் திருக்குறள் இணையக் கல்விக்கழகம், பாரதிதாசன் மறுமலர்ச்சி மன்றம் ஆகிய அமைப்புகளின் சார்பில் புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாளான ஏப்ரல் 29ம் நாளை 'உலகத் தமிழ் நாள்' ஆக அறிவிக்கவும், சென்னையில் பாரதிதாசன் ஆய்வு மணிமண்டபம் அமைக்கவும் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.பாரதிதாசனின் பேரனும், பாரதிதாசன் அறக்கட்டளையின் நிறுவனத் தலைவருமான கோ.பாரதி, மலேசியாத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் நல்லுரையாளர் திரு.மன்னர் மன்னர், மலேசியத் தமிழ்நெறிக் கழகத்தின் தேசியத்தலைவர் திரு.இரா.திருமாவளவன் உள்ளிட்டோர் பாரதிதாசன் கருத்தரங்கில் பங்கேற்றனர்.
இதை தொடர்ந்து, மூன்று தீர்மானங்களை முன்மொழிந்து வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் தலைவர் முனைவர் பாலா.சுவாமிநாதன் கருத்துரை வழங்கினார். இந்த தீர்மானங்களை முன்மொழிந்து உலகத் திருக்குறள் இணையக் கல்விக்கழகத்தின் இயக்குநரும், தமிழறிஞருமான பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் விளக்கவுரை ஆற்றினார்.