ஆரகன் விமர்சனம்!
இந்து மக்களின் முக்கிய இதிகாசமான இராமாயணத்தில் சொல்லப்பட்டிருக்கும் சஞ்சீவி மூலிகையையும், சித்தர்கள் நோக்கத்தையும் கொஞ்சம் திசை திருப்பும் விதத்தில் போனாலும் மிகக் குறைவான கதாபாத்திரங்களை வைத்து பொழுதை போக்க உதவி செய்வதில் ஜெயித்து விட்டார்கள். அதிலும் ஒரு வீட்டுக்குள் நடக்கும் கதையை, ஏகப்பட்ட திருப்பங்களோடு நகர்த்தி சஸ்பென்ஸ் திரில்லர் அமானுஷ்யத்தை அள்ளி வீசி அசத்தி விடுகிறார். மினிமம் பட்ஜெட் படம் என்பதால் பிரமாண்ட காட்சிகளைக் கூட எளிமையாக செய்திருந்தாலும் சில பல லாஜிக் மீறல்கள் படத்தின் பலத்தை பலவீனப்படுத்தி விட்டது.
அதாவது ஹீரோ மைக்கேல் தங்கதுரை மகளிர் விடுதியில் தங்கியிருக்கும் கவிப்பிரியாவை காதலிக்கிறார். தொழில் தொடங்க 10 லட்சம் தேவை என்று மைக்கேல் தங்கதுரை கூற கவிப்பிரியா வேலைக்கு சென்று தன்னால் முடிந்த பணத்தை தர முடிவு செய்கிறார். காட்டுப்பகுதியில் உள்ள வீட்டில் இருக்கும் ஒரு அம்மாவை கவனித்துக் கொள்ள செல்கிறார். அங்கு பல அமானுஷ்யங்கள் நடக்கின்றன. இளமையான கவிப்பிரியா திடீரென்று வயதான தோற்றத்திற்கு மாறிவிடுகிறார். இதெல்லாம் ஏன் நடக்கிறது என்பதுதான் ஆரகன் கதை
காதலி மீது அதீத அன்பும், அக்கறையும் கொண்டவராக இருக்கும் ஹீரோ மைக்கேல் தங்கதுரை, தனது சுயநலத்திற்காக எதை வேண்டுமானாலும் செய்யும் தனது கொடூர முகத்தோடு, உண்மையான முகத்தையும் வெளிப்படுத்தும் காட்சிகள் அதிர வைக்கிறது.மகிழ்நிலா என்ற கதாபாத்திரத்திற்கு ஏற்ப சிரிப்பு மலர்ந்த முகத்தோடும், அழகோடும் இருக்கிறார் நடிகை கவிப்ரியா. ஆதரவற்ற தனக்கு காதலன் மூலம் புதிய உறவும், வாழ்க்கையும் கிடைக்கப் போகிறது என்ற தனது மனமகிழ்ச்சியை தனது குழந்தைத்தனமான முகத்தில் அழகாக வெளிப்படுத்தும் கவிப்ரியா, தன்னை சுற்றி நடக்கும் மர்மங்கள் மற்றும் அச்சமூட்டும் சம்பவங்கள் மூலம் முகத்தில் பதற்றத்தையும், தனக்கு எதிராக நடந்த சதி பற்றி தெரிந்து ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தும் காட்சிகளில் ஒட்டுமொத்த திரையரங்கமும் அவர் மீது பரிதாபப்படுகிறது.
பார்வையாளர்களை பயமுறுத்தும் விதத்தில் நடித்திருக்கும் ஸ்ரீரஞ்சனி, இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்திருக்கிறார். காதலனால் ஏமாற்றப்பட்டு பல ஆண்டுகளாக அடிமை வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருக்கும் கலைராணி தனது வழக்கமான நடிப்பு மூலம் கதாபாத்திரத்தை மிகைப்படுத்தி காட்டியிருக்கிறார். இவர்கள் தவிர சில முகங்கள் சில காட்சிகளில் எட்டிப்பார்த்து திரைக்கதையோட்டத்திற்கு உதவியிருக்கிறது
கேமராமேன் சூர்யா வைத்தி அடர்ந்த வனப்பகுதி, அதனுள் இருக்கும் அழகான வீடு என்று அழகு நிறைந்த கதைக்களத்தை மிக அழகாக காட்சிப்படுத்தி த்ரில்லர் மூவிக்கு பலம் சேர்த்து இருக்கிறார். இரைச்சல் இல்லாத பின்னணி இசை மூலம் பயத்தை நம்முள் கடத்தியிருக்கும் இசையமைப்பாளர்கள் விவேக் – ஜெஷ்வந்த் இசையில் பாடல்களும் கூட பட ஓட்டத்துக்கு கைக் கொடுத்துள்ளது.
மாறுப்பட்ட கதை உருவாக்க முடிந்த டீம் அதை திரைக்கதை ஆக்குவதில் போதிய கவனம் செலுத்தி இருக்கலாம் .
மொத்தத்தில் ஆரகன் - ஏமாற்றவில்லை
மார்க் 2.75/5