பாலஸ்தீனத்தை உறுப்பு நாடாக அங்கீகரிக்கும் தீர்மானம்- ஐநா பொது சபையில் நிறைவேற்றம்!.
ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச்சபையில் பாலஸ்தீனத்தை முழு நேர உறுப்பினராக சேர்க்கும் வரைவு தீர்மானத்திற்கு 143 நாடுகள் ஆதரவு அளித்து நிறைவேற்றப்பட்டது. கடந்த மாதம் பாலஸ்தீனத்தை உறுப்பு நாடாக அங்கீகரிக்கக் கோரி ஐநா பாதுகாப்புக் கவுன்சிலில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி தோல்வி அடைய செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினருக்கு இடையே காசாவில் ஏறக்குறைய 150 நாட்களுக்கும் மேலாக போர் நடந்து வருகிறது. இதனால், லட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்துள்ளனர். இப்போரில் இதுவரை 34,000 க்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் எனவும் 77,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. இதுவரை 10,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகியுள்ளனர் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர். மேலும், போரை முடிவுக்குக் கொண்டு வர, பல்வேறு நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஆனால் ஹமாஸ் அமைப்பின் கடைசி நபரை அழிக்கும் வரை ஓயமாட்டோம் என்று கூறியுள்ள இஸ்ரேல் காசாவை கடுமையாக தாக்கி கொண்டிருக்கிறது.
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் அவையில் பாலஸ்தீனத்தை நிரந்தர உறுப்பு நாடாக சேர்க்க வேண்டும் என்று அரபு நாடுகள் கூட்டமைப்பு தீர்மானம் ஒன்றைக் கொண்டு வந்தன. இந்த தீர்மானத்தின் அடிப்படையில் ஐக்கிய நாடுகள் அவையின் அவசர கூட்டம் நேற்று கூடியது. இந்த கூட்டத்தில் பாலஸ்தீனத்தை ஐக்கிய நாடுகள் அவையில் நிரந்தர உறுப்பு நாடாக சேர்ப்பது தொடர்பான அறிக்கை மீது வாக்கெடுப்பு நடைபெற்றது.
இந்த வாக்கெடுப்பில் 193 நாடுகள் உறுப்பினர்கள் கொண்ட ஐக்கிய நாடுகள் சபையில், இந்தியா உள்ளிட்ட 143 நாடுகள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாக்களித்தன. இந்த தீர்மானத்திற்கு அமெரிக்கா, இஸ்ரேல், ஹங்கேரி, அர்ஜெண்டினா உள்ளிட்ட 9 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வாக்களித்தன. மேலும், 25 நாடுகள் புறக்கணித்து உள்ளன. அதிக பெரும்பான்மை ஆதரவு பெற்று ஐக்கிய நாடுகள் சபையில், பாலஸ்தீனத்தை நிரந்தர உறுப்பு நாடாக சேர்க்கும் வரைவு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.