கன்னடியர்களுக்கு இட ஒதுக்கீடு: காங்கிரஸின் சோக முடிவு!
தனியார் நிறுவனங்களில் கன்னடியர்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கும் சட்டம் இரண்டு நாட்கள் முன்பு கர்நாடகா அமைச்சரவையின் ஒப்புதல் பெற்றிருந்தது. மேனேஜர்களுக்கான இடங்களில் 50% மற்றும் இதர இடங்களில் 70% கன்னடியர்களுக்கு என்று மட்டுமே ஒதுக்கப்பட வேண்டும் என்று இந்த சட்டம் வலியுறுத்துகிறது. கன்னடியர் என்றால் அவர் கர்நாடகாவில் பிறந்திருக்க வேண்டும். குறைந்த பட்சம் 15 வருடங்கள் கர்நாடகாவில் வாழ்ந்திருக்க வேண்டும். கன்னடம் எழுதப் படிக்கப் பேசத் தெரிந்திருக்க வேண்டும். தனியார் வேலைகளுக்காக என்று பிரத்தியேகமாக உருவாக்கப்படும் கன்னடத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், போன்றவை முக்கியமான நிபந்தனைகள்.
இது பெங்களூருவில் இருக்கும் தனியார் நிறுவனங்களிடையே பெரும் எதிர்ப்பை உருவாக்கி இருக்கிறது. அந்த எதிர்ப்புகளின் விளைவாக இந்த சட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் எனவும் ஷரத்துகள் மறு பரிசீலனைக்கு உள்ளாக்கப்படும் என்றும் முதல்வர் சித்தராமையா X தளத்தில் (முன்னாள் டிவிட்டர்) பதிவிட்டிருக்கிறார்.இந்த செய்தியை முந்தா நாள் பார்த்த போதே இது படு மோசமாக தொனித்தது. இது குறித்து சேப்பியன் சங்கத்துக்காக ஒரு வீடியோ தயாரித்துக் கொண்டிருந்தேன்.
இந்த சட்டம் ஒருவேளை நடைமுறைக்கு வந்தால் பெங்களூருவில் பாதி ஐடி நிறுவனங்கள் வெளியேறி விடுவார்கள். தமிழ் நாடு அரசு ஒசூரில் கட்டமைப்புகளை விரிவுபடுத்தி அந்த நிறுவனங்களை வரவேற்கத் தயாராக இருக்க வேண்டும் என்று அந்த வீடியோவில் பேச இருந்தேன். அதற்கு வாய்ப்பின்றி சட்டம் கிடப்பில் போடப்பட்டு விட்டது. இனிமேல் அதைத் தொட மாட்டார்கள் என்று நினைக்கிறேன்.
மிகவும் பிற்போக்குத்தனமான, குறுகிய மனப்பான்மை கொண்ட, நடைமுறைத் தெளிவு கொஞ்சமும் இல்லாத சட்டம் இது. ஒரு ஐந்தாம் வகுப்பு மாணவன் கூட இந்த அளவுக்கு அறிவீனத்துடன் யோசிக்க மாட்டான். இப்படி ஒரு சட்டத்தை காங்கிரஸ் அரசு கொண்டு வர இருந்தது என்பது கூட அதிர்ச்சியான விஷயம் அல்ல. இப்படியெல்லாம் யோசிப்பவர்கள் தற்போது கர்நாடக காங்கிரஸ் தலைமைப் பீடத்தில் இருக்கிறார்கள் என்பதுதான் ஆகப்பெரிய சோகம்.
இப்படிப்பட்ட அறிவுத் தெளிவின்மை கொண்ட இவர்கள்தான் இதர விஷயங்களில் தெளிவான அறிவியல்பூர்வமான கொள்கைகளை வகுத்து கர்நாடகாவை முன்னேற்றப் போகிறார்கள் என்று நாம் நம்ப வேண்டும். முதல்வர் சித்தாராமையாவுக்கும் கர்நாடக அரசுக்கும் கண்டனங்கள்.