குடியரசு தினமும் அரசமைப்புச் சட்டமும்!
சில ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு செய்தி. எத்தனை பேர் அதை அறிவார்கள் அல்லது கேள்விப்பட்டார்கள் என்று தெரியாது. ஏனென்றால், அது பரபரப்பான செய்தி என்று பொதுவாகக் கருதப்படும் வகையினதோ அல்லது சராசரி மனிதர்களுக்கு ஆர்வமுள்ள விஷயமோ அல்ல. அரசமைப்புச் சட்டம் தொடர்பானது. மும்பையில், நானி பல்கிவாலா நினைவு சொற்பொழிவு ஆற்றினார் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட். அப்போது அவர் பேசியதன் சாரம் இதுதான் —
"நமது அரசியலமைப்பின் அடிப்படை அமைப்பு என்பது, துருவ நட்சத்திரம் போன்றது. நாம் பயணிக்கும் பாதையில் சிக்கல் வரும்போது, அரசியலமைப்புக்கு விளக்கம் தருவோருக்கும், அரசமைப்புச் சட்டத்தை செயல்படுத்துபவர் களுக்கும் இந்தத் திசையில் செல்ல வேண்டுமென அது வழி காட்டுகிறது. ஒரு நீதிபதியின் திறமை என்பது, அரசமைப்புச் சட்டத்தின் ஆன்மாவைச் சிதைக்காமல், மாறி வரும் காலத்திற்கு ஏற்ப அரசியலமைப்பின் பொருளை விளக்குவதில் அடங்கியுள்ளது."
அவர் பேசியதைச் சுருக்கமாகச் சொன்னால், அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தங்கள் செய்யலாம், புதிய விதிகளை சேர்க்கலாம்தான். ஆனால், அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பில் எந்த மாற்றத்தையும் செய்ய முடியாது. இன்னும் சுருக்கமாகச் சொல்வதானால், அரசமைப்புச் சட்டத்தின் முன்னுரைதான் (Preamble) அதன் ஆன்மா. அரசமைப்புச் சட்டம் முழுவதும் அதன் அடிப்படையிலேயே அமைந்துள்ளது. எந்த மாற்றம் செய்வதானாலும் சரி, ஆன்மாவை மாற்ற முடியாது.
நீதிபதி சந்திரசூட் அதைச் சொல்ல வேண்டிய அவசியம் என்ன வந்தது? ஏனென்றால், அரசமைப்புச் சட்டத்தை மாற்ற வேண்டும் என்பது இந்துத்துவர்களின் பல்லாண்டுக் கோரிக்கை.சாதி-மத-இன-மொழி-பாலின பேதங்கள் இன்றி அனைவருக்கும் சம உரிமை என்பதை மாற்ற வேண்டும் என்பதே அவர்களுடைய நோக்கம். சில நாட்களுக்கு முன்பு குடியரசுத் துணைத் தலைவரும் இதைப் பேசியிருக்கிறார். அவருடைய பேச்சுக்கு பதில் கொடுக்கத்தான் சந்திரசூட், நானி பல்கிவாலா நினைவு சொற்பொழிவு நிகழ்ச்சியைப் பயன்படுத்திக் கொண்டார். இந்த நிகழ்ச்சி ஏன் இந்த விஷயத்துக்குப் பொருத்தமானது?
அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் மாற்றம் ஏதும் செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவாக்கியது கேசவானந்த் பாரதி என்ற வழக்கில்தான். அரசமைப்புச் சட்ட ஆர்வலர்கள் மத்தியில் அந்த வழக்கு மிகப் பிரபலம். 13 நீதிபதிகள் கொண்ட அமர்வு இதை முடிவு செய்தது. (7க்கு 6 என்ற முறையில் இந்தத் தீர்ப்பு வந்தது.) 1973 ஏப்ரலில் இந்தத் தீர்ப்பு வந்தது. அந்த வழக்கில், மக்களின் உரிமைகள் முக்கியமானவை என்று வாதாடியவர்களில் முதன்மையானவர் நானி பல்கிவாலா. அரசமைப்புச் சட்டத்தை அரசியல் காரணங்களுக்காகத் திருத்தக்கூடாது என்று சொல்லி வந்தவர் நானி பல்கிவாலா. அதற்கு ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு, அரசியல் சட்டத் திருத்தங்களை நீதித்துறை மறு ஆய்வு செய்வதைத் தடுக்கும் 368வது பிரிவின் பிரிவு (4) அரசியலமைப்புக்கு முரணானது என்று மினர்வா மில்ஸ் வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் வாதாடி வெற்றி கண்டவர் நானி பல்கிவாலா. குடியரசுத் துணைத் தலைவருக்கு பதிலடி கொடுக்க பல்கிவாலா நினைவு நிகழ்ச்சி பொருத்தம்தான், இல்லையா!
அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையை மாற்ற முடியாது என்று கூறிய பதின்மூன்று நீதிபதிகள் பெஞ்ச் என்பதே மிகப்பெரிய ஓர் அமர்வுதான். அதை மறுபரிசீலனை செய்ய வேண்டுமானால் அதைவிடப் பெரிய - 15 பேர் அல்லது 17 பேர் கொண்ட பெஞ்ச் அமைக்கப்பட வேண்டும். மறுபடி முதலிலிருந்து ஆரம்பிக்க வேண்டும். ஆனால், அப்படிச் செய்ய வேண்டிய தேவை என்ன, எதற்காக இந்துத்துவர்கள் அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தத் துடிக்கிறார்கள் என்பதுதான் நாம் கேட்டு, புரிந்து கொள்ள வேண்டிய கேள்வி.
அரசமைப்புச் சட்டத்தின் சாரம் என்ன?
இந்தியக் குடிமகனாகிய நான், இந்தியாவை இறையாண்மை வாய்ந்த, சமதர்ம நெறி சார்ந்த, மதச்சார்பற்ற, மக்களாட்சிக் குடியரசாக அமைக்கவும், அதன் குடிமக்கள் அனைவருக்கும் சமுதாய, பொருளாதார மற்றும் அரசியல் நீதியும், சிந்தனை, வெளிப்பாடு, நம்பிக்கை, பற்றார்வம் மற்றும் வழிபாட்டில் சுதந்திரமும், தகுதி நிலையில் மற்றும் வாய்ப்பில் சமத்துவமும், உறுதியாகக் கிடைக்கச் செய்யவும், தனி ஒருவரின் மாண்புக்கும், நாட்டின் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் உறுதியளிக்கும் சகோதரத்துவத்தை அவர்கள் அனைவரிடையே வளர்க்கவும், விழுமிய முறைமையுடன் உறுதி ஏற்கிறேன்.
ஆக, அடிப்படை அமைப்பு (basic structure doctrine) என்பது, குடிமக்கள் அனைவருக்கும் சம உரிமையை உறுதி செய்யும் ஒரு கொள்கை. அரசமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ளப்படும் எந்தத் திருத்தத்தையும், அது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை நோக்கத்துக்கு இணக்கமாக அமைந்துள்ளதா என்று பரிசீலிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு இருக்கிறது. அந்த அதிகாரத்தைப் பறிக்க வேண்டும் என்பதே இந்துத்துவர்களின் நோக்கம்.
ஏன் பறிக்க வேண்டும்?
அரசமைப்புச் சட்டத்தில் என்ன வேண்டுமானாலும் திருத்தம் செய்யலாம். ஒரு சமூகத்துக்கு அல்லது ஒரு மதத்துக்கு அல்லது ஒரு சாதிக்கு அதிக உரிமைகளைத் தரலாம். மற்றொரு சமூகத்துக்கு அல்லது ஒரு மதத்துக்கு அல்லது ஒரு சாதிக்கு சம உரிமைகள் இல்லை என்று சொல்லலாம். இட ஒதுக்கீடு தேவையில்லை எனலாம். கருத்துரிமை, பேச்சுரிமை கிடையாது எனலாம். மாநிலங்களின் உரிமைகள் மொத்தமாகப் பறிக்கலாம். பொம்மை கவர்னர்களை வைத்து ஆட்சி நடத்தலாம். ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே சட்டம், ஒரே மதம், ஒரே கல்வி, என எல்லாவற்றையும் ஒற்றையாக்கி பன்முகத்தன்மையை ஒழிக்கலாம்.
மொத்தத்தில், ஒன்றியத்தில் ஆளும் கட்சியின் விருப்பப்படி நாட்டை மாற்றி ஆளலாம். அதனால்தான் இந்துத்துவர்கள் இதை மாற்றத் துடிக்கிறார்கள். மாற்று அரசமைப்புச் சட்டத்தை வரைந்து கொண்டிருக்கிறார்கள். உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளை நியமிக்கும் குழுவில் அரசும் இடம் பெற வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். சுருக்கமாகச் சொன்னால், உச்ச நீதிமன்றத்திடம் மிச்சம் மீதி இருக்கும் சுதந்திரத்தையும் பறிக்கத் துடிக்கிறார்கள். பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்பது மட்டுமல்ல, கிடைத்த சம உரிமைகளைக் காத்துக் கொள்வதும் நமக்கு முக்கியம்.
மாநிலங்களின் அதிகாரங்களைப் பிடுங்கி மத்தியில் அதிகாரங்களைக் குவித்துக் கொண்டிருக்கிற, கூட்டாட்சித் தத்துவத்தை மிதிக்கிற, பன்முகத்தன்மைக்கு உலை வைத்துவிட்டு ஒற்றைத்துவத்தை நிலைநாட்டும் மனோபாவம் கொண்ட ஆட்சியாளர்களின் கையில் நாடு சிக்கியிருக்கிறது. சமூக நல்லிணக்கத்துக்கும் சமாதான சகவாழ்வுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் எந்த சக்திகளையும் வேரோடு அறுத்தெறிய உறுதிமொழி எடுத்துக்கொண்டு, வரும் காலத்தில் செயல்படுவதே குடியரசு தினத்தைக் கொண்டாடுவதை அர்த்தமுள்ளதாக ஆக்கும்.
இந்தியக் குடிமக்கள் அனைவருக்கும் குடியரசு நாள் வாழ்த்துகள்.