“’கொட்டுக்காளி’’ என்ற டைட்டில் ஏன்? டைரக்டர் வினோத்ராஜ்!
எஸ்.கே புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்திருக்கும் படம்’கொட்டுக்காளி’. சூரி மற்றும் அன்னா பென் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். ‘கூழாங்கல்’ படத்தை இயக்கிய வினோத் ராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். பல மாதங்களுக்கு முன்பே தயாராகிவிட்ட இந்த படம் பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பல விருதுகளும் பெற்றது. படம் வரும் ஆகஸ்ட் 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த நிலையில், இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜ் மற்றும் இணை தயாரிப்பாளர் கலையரசு பத்திரிகையாளர்களை சந்தித்து ‘கொட்டுக்காளி’ படம் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துக்கொண்டார்கள்.
டைரக்டர் பி.எஸ்.வினோத்ராஜ் படத்தின் தலைப்பு பற்றி கூறுகையில், “’கொட்டுக்காளி’ என்பது தென் தமிழகத்தில் பல வருடங்களாக புழக்கத்தில் இருக்கும் ஒரு வார்த்தை. சில எழுத்தாளர்கள் பயன்படுத்தியிருக்கும் இந்த வார்த்தைக்கான ஆவணங்கள் எதுவும் கிடையாது. தென் தமிழகத்தில் பிடிவாதமாக இருக்கும் பெண்களை திட்டுவதற்காக கொட்டுக்காளி வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. தென் தமிழகத்தைச் சேர்ந்த பெண்கள் அனைவரும், எதாவது ஒரு இடத்தில் இந்த வார்த்தையை கடந்து வந்திருப்பார்கள். அப்படிப்பட்ட ஒரு பெண் கதாபாத்திரம் படத்தில் முக்கிய பங்கு வகிப்பதால், இந்த தலைப்பு பொருத்தமாக இருந்தது.” என்றார்.
நாயகனாக களம் இறங்கியிருக்கும் சூரி, நடிப்பில் வெளியான ஆக்ஷன் படங்களான ‘விடுதலை’ மற்றும் ‘கருடன்’ வெற்றி பெற்றிருப்பதால், இந்த படமும் அப்படிப்பட படமாக இருக்குமா? என்ற கேள்விக்கு பதில் அளித்த இயக்குநர், “கருடன் மற்றும் விடுதலை படங்களைப் போல் இந்த படம் இருக்காது. இது முழுக்க முழுக்க வாழ்வியலுக்கு நெருக்கமாக இருக்கும். ஒரு வாழ்வியலை பக்கத்தில் இருந்து பார்த்த அனுபவத்தை கொடுக்கும் படமாக இருக்கும். ‘விடுதலை’ படத்தை முடித்த பிறகு தான் சூரியை இந்த படத்தில் ஒப்பந்தம் செய்தோம். ‘கூழாங்கல்’ படத்தில் இருக்கும் சில நுணுக்கமான விசயங்களை பற்றி அவர் பேசிய விதம் எனக்கு பிடித்திருந்தது. காரணம், அப்படிப்பட்ட வாழ்க்கையை அவர் வாழ்ந்திருக்கிறார், அதனால் தான் அவருக்கு அந்த படம் பிடித்திருந்தது. இந்த கதையை படமாக்க வேண்டும் என்று நினைத்த போது, சூரி போன்ற ஒருவர் நடித்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது. அவரை சந்தித்து கதையை சொன்ன போது அவருக்கு பிடித்ததோடு, பாண்டி என்ற கதாபாத்திரத்தில் வாழ்ந்துவிட வேண்டும், என்று கூறினார். முக்கியமான பெண் கதாபாத்திரத்தில் அன்னா பென் நடித்திருக்கிறார். தனது உணர்வுகளை ரியாக்ஷன் மூலமாக வெளிப்படுத்த வேண்டிய ஒரு பெண் கதாபாத்திரம், அதற்கு அன்னா பென் முகம் சரியாக இருக்கும் என்று தோன்றியது, அதனால் தான் அவரை தேர்வு செய்தோம். அவரும், அவரது தந்தையும் கதையை கேட்டுவிட்டு ஓகே சொன்னார்கள். அவரது நடிப்பு நிச்சயம் பேச வைக்கும்.” என்றார்.
தொடர்ந்து படம் பற்றி கூறியவர், “ஒரு பயணத்தின் மூலம் வாழ்வியலை சொல்வது தான் படத்தின் கதை. இந்த பயணம் முடிவை நோக்கி அல்லாமல், அந்த மக்களை புரிந்துக்கொள்ளும் ஒரு படைப்பாக இருக்கும். இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இல்லை, பாடல்கள் மற்றும் இசை இல்லை. சூழலை சுற்றி இடம்பெறும் சத்தங்களை வைத்து தான் பண்ணியிருக்கோம். ஆனால், படம் பார்க்கும் போது இசை இல்லை என்ற உணர்வே உங்களுக்கு ஏற்படாது. இப்படி தான் செய்ய வேண்டும் என்று எந்த திட்டமும் இல்லை. இப்படி செய்தால் நன்றாக இருக்குமே என்று நினைத்து சாதாரணமாக செய்த ஒரு விசயம் தான், அதனால் தான் இதை எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.
விருதுகள் வாங்குவதற்காக நான் படம் எடுக்கவில்லை, சர்வதேச திரைப்பட விழாக்களை பார்த்து, அதில் இடம்பெறும் படங்களை பார்த்து வளர்ந்தவன் நான், என்னுடைய படங்கள் அதில் பங்கேற்க வேண்டும் என்ற விருப்பம் எனக்கு இருக்கிறதே தவிர, அதற்காக மட்டும் நான் படம் எடுக்கவில்லை. பெர்லின், ரோட்டர்டோம், ருமேனியா போன்ற இடங்களில் இருப்பவர்களுக்கு நம் மொழி மற்றும் கலாச்சாரம் தெரியாது, ஆனால் அவர்கள் என் படங்களை புரிந்துக்கொண்டு பாராட்டும் போது, நம் மக்களும் என் படங்களை புரிந்துக்கொண்டு ஏற்றுக்கொள்வார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. கமர்ஷியல், கலை படைப்பு என்று நான் பிரித்துப் பார்ப்பதில்லை, நான் பார்த்த மக்களை, அனுபவித்த வாழ்க்கையை படைப்பாக கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன், அதனால் தான் இப்படிப்பட்ட படங்களை எடுக்கிறேன். ‘கூழாங்கல்’ படத்தை எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறார்கள், என்று நினைத்தேன். ஆனால், மக்களும் சரி, ஊடகங்களும் சரி அந்த படத்தை கொண்டாடி தீர்த்து விட்டார்கள். அதனால் எனக்கு பொறுப்பு அதிகமானது மட்டும் அல்ல, தைரியமும் வந்துவிட்டது. அந்த சமயத்தில் தான் சிறுவயதில் நான் பார்த்த ஒரு விசயம் பற்றி சொல்ல வேண்டும் என்று விரும்பினேன், அதை தான் இதில் சொல்லியிருக்கிறேன். இப்படிப்பட்ட படங்களை கொடுப்பதற்கான தைரியம் பாலுமகேந்திரா, வெற்றிமாறன் போன்ற முன்னோர்களிடம் இருந்து தான் எனக்கு வந்தது, இனியும் இது தொடரும் என்று தான் நினைக்கிறேன்.” என்றார்.
இணை தயாரிப்பாளர் கலையரசு கூறுகையில், “’கூழாங்கல்’ படம் எங்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. அந்த படத்தை பார்த்துவிட்டு இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜுடன் பணியாற்ற வேண்டும் என்று சிவாவும், நானும் விரும்பினோம். அப்போது தான் வினோத்ராஜ் எங்களிடம் ஒரு இந்த கருவை சொன்னார், எங்களுக்கு பிடித்திருந்ததால் தயாரிக்க முடிவு செய்தோம். கதையை கேட்டவுடன் சிவகார்த்திகேயன் வினோத்ராஜிடம், “உங்களுக்கு என்னவெல்லாம் செய்ய தோன்றுகிறதோ, அதை சுதந்திரமாக செய்யுங்கள்” என்று சொன்னார். இப்படிப்பட்ட படங்கள் வியாபார ரீதியாக வரவேற்பு பெறுமா? என்றால், அதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே இருப்பதோடு, சர்வதேச அளவில் மிகப்பெரிய வரவேற்பையும் பெற்று வருகிறது. குறிப்பாக நம் மக்களின் வாழ்வியல், கலாச்சாரத்தை எந்த ஒரு மேலைநாட்டு தழுவலும் இல்லாமல் சொல்லப்பட்டிருக்கும் இதுபோன்ற படங்கள் மக்கள் மனதுக்கு மிக நெருக்கமாக இருக்கும், என்று நம்புகிறோம்.” என்றார்.