பீகாரில் 65% இட ஒதுக்கீடு சட்டம் ரத்து; பாட்னா ஐகோர்ட் அதிரடி!
பீகாரில் இடஒதுக்கீட்டை 50% இருந்து 65%-ஆக உயர்த்தி இயற்றப்பட்ட சட்டத்தை பாட்னா ஐகோர்ட் ரத்து செய்தது. பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல், பழங்குடியினருக்கான 65% சதவீத இடஒதுக்கீடு சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பீகார் மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. மாநிலத்தின் முதல்வராக ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் நிதிஷ்குமார் உள்ளார். பீகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு விபரங்கள் அம்மாநில அரசால் கடந்த ஆண்டு அக்டோபர் 2ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதையடுத்து பீகார் மாநிலத்தில் நடத்தப்பட்ட சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பின் முழு விவரங்களையும் அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி வெளியிட்டிருந்தார். மேலும் பீகார் மாநிலத்தில் மொத்த இட ஒதுக்கீட்டு அளவை 65 சதவீதமாக உயர்த்த முதல்வர் நிதிஷ்குமார் பரிந்துரை செய்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து முதல்வர் நிதிஷ்குமாரின் பரிந்துரைக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது. இதையடுத்து பீகார் மாநிலத்தில் மொத்த இட ஒதுக்கீட்டு அளவை 50 சதவீதத்தில் இருந்து 65 சதவீதமாக உயர்த்தும் மசோதா அம்மாநில சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் உயர்சாதி ஏழைகளுக்கான 10 விழுக்காட்டை சேர்த்தால் பீகார் மாநிலத்தின் மொத்த இட ஒதுக்கீடு 75 சதவீதமாக அதிகரித்தது.
பீகார் மாநிலத்தில் இட ஒதுக்கீட்டை 75% ஆக உயர்த்தும் புதிய சட்டத்திற்கு கவர்னர் ஒப்புதல் அளித்ததையடுத்து அரசிதழ் வெளியிடப்பட்டது. புதிய சட்டத்தின் படி, பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்களுக்கு(ST) 2 சதவிதமும், பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்களுக்கு(SC) 20 சதவிதமும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கு (EBC) 25 சதவிதமும், பிற்படுத்தப்பட்ட வகுப்பை(BC) 18 சதவிதமும், உயர்சாதி ஏழைகளுக்கு (EWS) 10 சதவிதம் என இடஒதுக்கீடு வரையறுக்கப்பட்டது.
இந்த நிலையில், பீகாரில் இடஒதுக்கீட்டை 50% இருந்து 65%ஆக உயர்த்தி இயற்றப்பட்ட சட்டத்தை பாட்னா ஐகோர்ட் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியல், பழங்குடியினருக்கான 65 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.