அமுல் பிராண்டின் அப்பா குரியன் நினைவுகள்!
இன்றைக்கும் பெரும்பாலான குழந்தைகள் முதல் பெரியவர் வரை விரும்பும் ஒரு நிறுவனம் என்றால் அது அமுல்தான். நம்மைச் சுற்றி கொழு கொழு என்றிருப்பவர்களை அமுல் பேபி என்று அழைக்கும் அளவுக்கு இந்நிறுவனத்தின் கார்ட்டூனும் மிகப்பிரபலம். இந்த அமுல் பிராண்டின் நிறுவனர் வர்கீஸ் குரியனுக்கு பாலை அருந்த பிடிக்காது ;ஆனால் இத்தனை பேரின் தூத்வாலா (பால்காரன் )என என்னை அழைத்து கொள்வதிலேயே நிறைவு கொள்கிறேன் !என தன் வாழ்க்கை வரலாற்றில் குறிக்கிற அவருக்கு உலக உணவு பரிசு, பத்ம விபூஷன் முதலிய பல்வேறு விருதுகள் கிடைத்து உள்ளன. ஆனால் மோடியின் போக்கு பிடிக்காமல் அமுலை விட்டு விலகியது சோகமான முடிவு.
அந்நார் நினைவு நாள் சிறப்புக் கட்டுரை இதோ:
நவம்பர் 26, 1921 இல் கேரளாவின் கோழிக்கோட்டில் ஒரு சர்ஜரி டாக்டருக்கு மகனாகப் பிறந்தார் குரியன். சென்னை லயோலா கல்லூரியில் பயின்றவர் 1940 ஆம் ஆண்டில் பிசிக்ஸில் பட்டம் பெற்றார். பின்னர் கிண்டியில் உள்ள இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்ந்தார். அந்த படிப்பை முடித்து விட்டு ஜாம்ஷெட்பூரில் உள்ள டாடா ஸ்டீல் தொழில் நுட்ப நிறுவனத்தில் சேர்ந்தார். இதையடுத்து அரசு உதவித் தொகையில் அமெரிக்காவில் உள்ள மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தில் படிக்கச் சென்றார். அங்கு 1948 இல், இயந்திரப் பொறியியலில் முதுகலைப் பட்டம் பெற்றார். இன்று, உயர் படிப்பு முடித்து விட்டு அமெரிக்கா சென்று அங்கேயே குடிமகன் உரிமை பெற்று பலரும் அமெரிக்க இந்தியர்களாக இருக்கிறார்கள். ஆனால் குரியனோ அமெரிக்காவில் உயர் படிப்பு முடித்து விட்டு இந்தியாவில் பணியாற்றுவதற்காக நாடு திரும்பினார். அவர் நினைத்திருந்தால் அமெரிக்காவில் மிகப்பெரிய வேலையில் சேர்ந்திருக்க முடியும்.
ஆனால் நாடு திரும்பி. குஜராத்தின் ஆனந்த் எனும் இடத்தில உள்ள அரசு பாலேடு ஆய்வு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். கொஞ்ச நாளில் வேலை அலுப்பைத்தரவே அதைவிட்டு விட்டு வேறேதாவது வேலை பார்க்கலாம் எனக் கிளம்பினார். அதே சமயம் அவரின் நண்பர் திருபுவன்தாஸ்பாய் படேல் அழைப்பின் பேரில் எளிய மக்கள் பால் கொண்டு வந்து தரும் பால் கூட்டுறவு சங்கத்தை காண சென்றார் ; அப்பொழுது அவர்களின் துன்பப்படும் நிலையை பார்த்து வெளியேறும் திட்டத்தை கைவிட்டார். அங்கே இருந்து அவர்களின் பால் மற்றும் பால் பொருட்களுக்கான சந்தையை உருவாக்க கனவு கண்டார் . ஆனால் அவருக்கு உண்மையில் பாலே பிடிக்காது என்பது சுவையான முரண்.
அவர் முன் நின்ற மிகப்பெரிய சவால் அன்றைய நிலையில் இந்தியா பால் உற்பத்தியில் மிகவும் பின்தங்கி இருந்தது. பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களின் வாசலை தட்டி விவசாயிகளின் பாலை கொள்முதல் செய்ய வேண்டுகோள் விடுத்த பொழுது அவை அவரின் யோசனையை நிராகரித்தன. வலியோடு வெளியேறிய அவர் ,தொழில்நுட்பம் விவசாயிகளின் கையில் போய் சேரும்பொழுது வெற்றி பெறும் என நம்பினார். ஆனந்த் பால் கூட்டுறவு நிறுவனம் (அமுல்) எல்லா தொழில்நுட்பத்தையும் விவசாயிகளுக்கு சொல்லித்தந்தார்; எந்த அளவுக்கு என்றால் மாடுகளை செயற்கை கருத்தரித்தலுக்கு உட்படுத்தலையே விவசாயிகளுக்கு சொல்லி தந்தார்.
மேலும் வெறும் பாலை விற்றால் பிரயோஜனம் இல்லை , அது மிகப்பெரிய சந்தையை திறந்து விடாது என தெளிவாக உணர்ந்திருந்த அவர் பல்வேறு புதிய பால் பொருட்களை உற்பத்தி செய்து காட்டினார் ; அதற்கான ஊக்கத்தை பால் விவசாயிகளுக்கு தந்தார். எந்த அளவுக்கென்றால் மிகப்பெரிய தனியார் நிறுவனங்கள் எல்லாம் எருமைப்பாலை ஒதுக்கி வைத்திருந்த நிலையில் அதிலிருந்து வெற்றிகரமான பால் பவுடடரை தயாரித்து காண்பித்தார். அவற்றை விளம்பரப்படுத்தலும் அவசியம் என உணர்ந்தார் ;விவசாயிகளுக்கு விளம்பரத்தில் அவசியத்தை புரிய வைத்து சாதித்தார்.
இதில் உள்ள அடிப்படை சிக்கல் முழுக்க முழுக்க இந்த விஷயங்களில் சம்பந்தப்பட்டவர்கள் எளிய பெரும்பாலும் படிக்காத மக்கள். அவர்களுக்கு எளிய முறையில் நவீன தொழில்நுட்பத்தை கொண்டு சேர்த்ததும் ,அவர்களின் பாலை இடைத்தரகர்கள் இல்லாமல் பெற்றதும் முடியாத என பன்னாட்டு நிறுவனங்கள் நிராகரித்த எளிய ஏழைகளின் பால் கூட்டுறவு சங்கத்தை ஆசியாவிலேயே மிகப்பெரிய மற்றும் வெற்றி நிறைந்த பிராண்ட் ஆக உயர்த்தியது. மேலும் அமுலின் வெற்றியை கண்டு வியந்த அரசு இந்திய முழுக்க இந்த திட்டத்தை செயல்படுத்த அவரை அழைத்தது. ஆபரேசன் ஃப்ளட் என பெயரிடப்பட்டு மூன்று கட்டங்களில் செயல்படுத்தப்பட்ட அத்திட்டம் வெண்மை புரட்சியானது. ஆக பால் பற்றாக்குறையில் கடினபட்ட தேசம் உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளர் ஆனது . வர்கீஸ் குரியன் அறுபதாண்டு காலம் அமுலின் தலைமை பொறுப்பில் இருந்த காலத்தில் அவர் பெற்ற சம்பளம் இத்தனைக்கும் டாடாவில் பெற்றதை விட மூன்று மடங்கு குறைவே !,
இவரின் மீதான ஒரு குற்றச்சாட்டு இந்திய பசுக்களை ஒழித்து வெளிநாட்டு பசுக்களை உள்ளே விடுகிற வேலையை இவர் செய்தார் என்பது. இவரின் வீட்டின் முன் பசு மாடுகளை கட்டி மக்கள் போராட்டமெல்லாம் செய்தார்கள். என்றாலும் வர்கீஸ் குரியன் அது மக்களை பாதிக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என்பதே உண்மை
“எனக்குமொரு கனவு இருந்தது !”என்பது அவரின் பிரபலமான வாசகம்; கனவுகள் தேசத்தின் மீதான எல்லையற்ற காதல் .தொழில்நுட்பத்தை கிராமங்களுக்கு கொண்டு சேர்த்தது என்பவையெல்லாம் அவரின் எளிய கனவை தேசத்தின் வாழ்வாக்கியது; அவரை பாரதத்தின் வெண்மை புரட்சியின் தந்தை என அறிய வைத்தது..
இந்தியாவின் பிரபல திரைப்பட இயக்குநர் ஷியாம் பெனகல். இவர் இந்தியாவின் பால் தொழில் மற்றும் அதன் பின்னணியிலிருந்த வர்கீஸ் குரியன் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட மந்தன் என்ற திரைப்படத்தை உருவாக்கினார். இது 500,000 விவசாயிகள் தலா 2 ரூபாய் கொடுக்கப்பட்டுத் தயாரிக்கப்பட்ட திரைப்படமாகும். இப்படி அமுல் வெற்றி குறித்த படம் கூட கூட்டுறவு சிந்தனையால் தயாரிக்கப்பட்டது.2013 ஆம் ஆண்டில், அமர் சித்ர கதா ஒரு காமிக் புத்தகத்தை வெளியிட்டது — வர்கீஸ் குரியன்: தி மேன் வித் தி பில்லியின் லிட்டர் ஐடியா (.Verghese Kurien: The Man with the Billion Litre Idea). இந்தப் புத்தகத்தின் சுருக்கம் என்ன தெரியுமா? டாக்டர் குரியனின் கதைதான் அமுலின் கதை.
அமுல் என்றால் குரியன் என்றாகி போன அவருக்கு வெள்ளை சல்யூட்!
நிலவளம் ரெங்கராஜன்