டெல்லி முதல்வராக ரேகா குப்தா தேர்வு!
பாஜக கைப்பற்றிய டெல்லியின் முதல்வராக நேற்று தேர்வு செய்யப்பட்ட ரேகா குப்தா (50), இன்று பதவியேற்க உள்ளார். இதையொட்டி டெல்லி ராம்லீலா மைதானத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்சேனா பதவி பிரமாணத்தையும், ரகசிய காப்பு பிரமாணத்தையும் செய்து வைக்கவுள்ளார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடியுடன், மத்திய அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். பாஜக ஆளும் 21 மாநிலங்களின் முதல்வர்களும், துணை முதல்வர்களும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
விழாவில் பங்கேற்க ஆட்டோ டிரைவர்கள், பெண்கள், விவசாயிகளுக்கு பாஜக மேலிடம் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திரை நட்சத்திரங்கள் சுமார் 50 பேரும் கலந்து கொள்ள ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பாலிவுட் பாடகர் கைலாஷ் கேரின் இசை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பஞ்சாப், டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்தை நீர்த்து போகச் செய்யும் வகையில், பல முக்கிய விவசாய தலைவர்களும் இந்த நிகழ்ச்சிக்கு அழைக்கப்பட்டு உள்ளனர்.
டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் பிப்ரவரி 8ஆம் தேதி வெளியாகின. மொத்தமுள்ள 70 இடங்களில் பாஜக 48 சட்டமன்றத் தொகுதிகளில் வென்று 27 வருடங்களுக்கு பிறகு தலைநகரில் ஆட்சியைக் கைப்பற்றியது. ஆளும் ஆம் ஆத்மி 22 இடங்களை கைப்பற்றி எதிர்க்கட்சி வரிசைக்கு நகர்ந்தது. பாஜகவின் புதிய முதலமைச்சர் யார் என்ற யூகங்கள் டெல்லி தாண்டி இந்திய அரசியல் மட்டங்களில் விவாதிக்கப்பட்டன. இந்த நிலையில் முதல்வரை தேர்வு செய்வதற்கான பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் மத்திய பார்வையாளர்கள் ரவிசங்கர் பிரசாத், ஓம் பிரகாஷ் தன்கர் முன்னிலையில் நேற்று (பிப்ரவரி 19) மாலை டெல்லியில் நடைபெற்றது. அதில், ரேகா குப்தாவை டெல்லியின் அடுத்த முதல்வராக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒருமனதாக தேர்வு செய்தனர். இதுதொடர்பாக டெல்லி பாஜக தனது எக்ஸ் பக்கத்தில், “டெல்லி பாஜக சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு ரேகா குப்தாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். உங்கள் தலைமையின் கீழ் மாநிலம் முன்னேறும் என்று எங்களுக்கு முழு நம்பிக்கை உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.
யார் இந்த ரேகா குப்தா?
ரேகா குப்தா .ஹரியானா மாநிலத்தில் பிறந்த இவருக்கு இப்போது வயது 50. தனது மாணவப் பருவத்தில் இருந்தே அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 1992ஆம் ஆண்டு பாஜகவின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தில் இணைந்து செயல்பட ஆரம்பித்தார். 1996 – 97 வரை டெல்லி பல்கலைக் கழக மாணவர் சங்கத் தலைவராக பதவி வகித்த ரேகா குப்தா மாணவர் பிரச்னைகளுக்காக தீவிரமாக குரல் கொடுத்தார்.
2007ம் ஆண்டு டெல்லியின் வடக்கு பிடம்புரா பகுதியில் இருந்து கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றினார். 2012ம் ஆண்டுகளில் கவுன்சிலர் தேர்தலில் வென்ற அவர், பின்னர் தெற்கு டெல்லி மாநகராட்சியின் மேயராகவும் பணியாற்றியுள்ளார்.
நீண்ட அரசியல் அனுபவம் கொண்ட அவர், தற்போது டெல்லி பாஜகவின் மகளிரணி பொதுச் செயலாளராகவும், தேசிய செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார். சட்டமன்றத் தேர்தலில் ஷாலிமார் பாக் தொகுதியில் 68,200 வாக்குகள் பெற்று வெற்றிவாகை சூடினார். முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினராகி உள்ள ரேகா குப்தா டெல்லியின் பிரச்னைகளை நன்கு அறிந்தவராம்